தற்காலிக விலகலா, நிரந்தர விலகலா… ஏன் இப்படிச் செய்தார் சசிகலா?

politics

ஒரே அறிக்கை, ஒட்டு மொத்தமாக தமிழக அரசியல் களத்தையே நேற்று உலுக்கிவிட்டது. சசிகலாவின் அரசியல் விலகல் அறிவிப்பு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, அமமுக என எல்லாத் தரப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. **[சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் என்பதை கடந்த பிப்ரவரி 6 அன்றே மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம்.](https://www.minnambalam.com/politics/2021/02/06/23/sasikala-silently-works-to-merge-ADMK-and-AMMK)** சசிகலா நினைத்தபடி, அதிமுக–அமமுக இணைப்பு நடக்காமலே, இப்படியொரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணமென்பதுதான் யாருக்குமே விடை தெரியாத கேள்வியாகவுள்ளது. இதுபற்றியே விவாதங்கள் களை கட்டியிருக்கின்றன.

ஒரு மாதத்துக்கு முன்பு, ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சசிகலா சொன்னபோதே, ‘அவர் எப்போது அரசியலில் இருந்தார்’ என்ற கேள்விகள் எழுந்தன. இப்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததும் அதே பாணியிலான விமர்சனங்களும் எழுகின்றன. பாரதிய ஜனதாவின் மிரட்டலால்தான் இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கக்கூடுமென்றும் சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவருடைய ‘அரசியல் விலகல்’ அறிக்கையின் பின்னணியில் இருப்பது மிகவும் இயல்பான காரணங்கள்தான் என்று அடித்துச்சொல்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

சசிகலாவின் நடவடிக்கைகளையும் அவருடைய எண்ண ஓட்டங்களையும் அறிந்த அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது அந்த இயல்பான காரணங்களை அவர்கள் விளக்கினர்….

‘‘பலரும் யூகிப்பதைப் போல சின்னம்மாவின் இந்த முடிவுக்கு யாருடைய நிர்ப்பந்தமும் அழுத்தமும் காரணமில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பலவீனமடைந்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. சிறையிலிருக்கும்போதும், சிறையை விட்டு வெளியே வந்தபோதும் அதிமுகவில் தனக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட, அதிமுக பலவீனமாகி, திமுக மீண்டும் பலமாகி ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான் அவரிடம் மேலோங்கி இருந்தது. அதற்குக் காரணம், அடிப்படையாகவே திமுக மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு. அவர் சிறைக்குப் போவதற்கு யார் யாரோ பின்னணியில் இருந்தனர் என்று பலர் பேசினாலும், தான் சிறைக்குப் போகவும், அம்மா மரணமடையவும் திமுக போட்ட வழக்குதான் காரணமென்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் மீதான பகையை விட, அந்தப் பகை அவருடைய உள்ளத்தில் கனன்று எரிந்து கொண்டேயிருக்கிறது. வரும் தேர்தலிலும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டுமெனில், அதிமுக மேலும் பலம் பெற வேண்டுமென்றே நினைத்தார். அதற்கு அதிமுகவுடன் அமமுகவும் இணைய வேண்டுமென்று விரும்பினார். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கே, கட்சியில் அதிகாரத்தை எதிர்பார்த்தார். அதற்கு தன்னுடைய பலத்தை முழுமையாகக் காட்ட வேண்டுமென்று கருதினார். சிறையில் இருந்து தான் வெளியேறும்போது, பிரமாண்டமான வரவேற்பு தரும்படி ஏற்பாடு செய்யச்சொன்னதன் காரணமும் அதுதான். ஆனால் அது பெரிதாக பலன் கொடுக்கவில்லை.

தமிழகத்திற்குள் அவர் வரும் நாளில், 5 அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் அவரை வந்து பார்ப்பார்கள் என்று தகவல் கூறப்பட்டிருந்தது. ஒருவரும் வரவில்லை. தமிழகத்திற்கு வந்தபிறகும் யாரும் பார்க்கவரவில்லை. ஆட்சியின் கடைசி நாள் வரைக்கும் அதில் பலனடைய வேண்டுமென்பதால் யாரும் வரவில்லை என்றும், தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் வருவார்கள் என்றும் கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. முதல்வர் பழனிசாமியையும் பன்னீரையும் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்கவே இல்லை. மற்றொரு புறத்தில் அமித்ஷாவை ஒரு வழியில் தொடர்பு கொண்டு, அதிமுக–அமமுக இணைப்பையும் அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அமித்ஷா பேச்சையே அவர்கள் இருவரும் கேட்பதாக இல்லை.

அவர்களிருவருக்குமே சின்னம்மாவைச் சேர்த்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை; ஆனால் அவரை வைத்து தினகரன் மீண்டும் வந்தால் அது தங்கள் இருவரின் பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் இருவரும் ஒன்றுபட்ட கருத்தோடு இருந்தார்கள். அதையே அமித்ஷாவிடமும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இப்போதைய நிலையில், அமித்ஷா சொல்வதைக் கேட்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. பாரதிய ஜனதாவுக்கான சீட் ஒதுக்கீட்டில் அவர் கறார் காட்டுவதே அவருடைய கைதான் ஓங்கியிருப்பதைத் தெளிவாக்கிவிட்டது. அதனால் அந்த முயற்சியும் தோல்வியாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் தேர்தலில் அமமுகவை ஆதரிப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே அவர் கருதுகிறார். அதுமட்டுமின்றி, இரட்டை இலைக்கு எதிராக அவர் எந்த பிரசாரத்தையும் எப்போதுமே முன்னெடுக்கமாட்டார்.

தினகரனையே இந்தத் தேர்தலில் நிற்க வேண்டாமென்றுதான் அவர் அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் அதை தினகரன் கேட்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே உடல்ரீதியாக பலவீனமாகயிருந்த சின்னம்மாவுக்கு அடுத்தடுத்த இந்த நிகழ்வுகளாலும், துரோகங்களாலும், நம்பியிருந்த பல விஷயங்கள் நடக்காததாலும் கடுமையான மனஉளைச்சலுக்கும் உள்ளாகிவிட்டார். இந்த சூழ்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கொடுத்த பேட்டியில், ‘சசிகலாவைச் சேர்ப்பதற்கு நுாறு சதவீதம் வாய்ப்பே இல்லை; டெல்லியில் முதல்வர் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அடித்துச் சொன்னது அவரை மொத்தமாக நொறுக்கிப் போட்டது. அதற்குப் பின்பே யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்து அந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். இது தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடு என்று பலரும் பேசுகிறார்கள். தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்படும் முடிவைப் பொறுத்தே, தன்னுடைய முடிவை அவர் மாற்றுவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா என்பது தெரியும்!’’ என்றார்கள்.

சசிகலாவின் ரீ என்ட்ரி தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் எடுத்துள்ள இந்த முடிவு, தேர்தலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதைக்குத் திட்டவட்டமாக யாராலும் கணிக்க இயலாது என்பதே நிதர்சனம். அதிமுக ஜெயித்தால் இனி அந்தக் கட்சியின் எந்தவொரு அத்தியாயத்திலும் அவர் பெயர் இடம் பெறாமலே போய்விடும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை தோற்றுவிட்டால் தன்னுடைய முடிவை அவர் பரிசீலிக்கவும், அவரை அரசியலுக்கு வரச்சொல்லி பலரும் வற்புறுத்தவும் வாய்ப்புண்டு என்று கருதுகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

தமிழகத்தின் எதிர்காலம் மட்டுமில்லை; சசிகலா, அதிமுகவின் எதிர்காலமும் வாக்காளர்கள் கையில்தான்!

**–பாலசிங்கம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *