யாருக்கு வேண்டும் விவசாய விளைபொருள் விற்பனை திருத்த சட்டங்கள்?

politics

கொரோனா பொதுமுடக்கத்தின்போது அவசர அவசரமாகப் பல்வேறு விதிகளை மீறி விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல், விற்பனை மற்றும் உற்பத்திக்கான மூன்று சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டன அல்லது மாற்றி அமைக்கப்பட்டன. விவசாயிகளோ, மக்களோ இந்த மாற்றங்களைக் கேட்டு போராடாத நிலையில் அரசு இது விவசாயிகளுக்காகத்தான் செய்யப்பட்டது என்று சத்தியம் செய்கிறது. விவசாயிகளோ இவை பெருநிறுவனங்களுக்கானவை இது எங்களுக்கு வேண்டாம் என்கிறார்கள். இப்படி வேண்டாத சட்டங்களை அரசு விடாப்பிடியாக விவசாயிகளின் மீது திணிக்கிறது. இதுவரையிலும் எந்த அரசும் செய்யத் துணியாத நாட்டின் பெருவாரியான மக்கள் பங்குபெற்று பலனடைந்து வரும் விவசாயத்தையும் அதை சார்ந்த முறைசாரா பொருளாதாரத்தையும் முழுமையாக மாற்றி அமைத்து வருகிறது.

**குறிவைக்கப்படும் சில்லறை வணிகர்கள்**

இதுவரையிலும் நேரடி விற்பனை சந்தையாக இருந்து வந்த இந்திய வர்த்தகம் இணையத்தை மையமாகக்கொண்டு இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நகர தெருக்களின் கடைகளில் கடைவிரிக்கப்பட்ட பொருட்கள் இணைய வர்த்தக தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட், ஜியோ ஆகியவற்றில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. விலைமதிப்புமிக்க மின்னணு சாதனங்களையும் வீட்டு பயன்பாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்து வந்த கடைகளின் இடத்தின் பெரும்பகுதியை இந்த இணைய வர்த்தகம் பிடித்து வருகிறது. இதில் எந்த பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், இதற்கு அடுத்து இந்திய வர்த்தகத்தின் பெரும்பகுதியான விலைகுறைவான FMCG என்று அழைக்கப்படும் வேகமாக விற்பனையாகும் பொருட்களையும் விவசாய விளைபொருட்களான மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யும் கடைகளின் இடத்தை பிடிப்பதில்தான் இவர்களுக்குப் பிரச்சனை.

**FMCG எளிது **

இந்த FMCG பொருள் உற்பத்தியைப் பொறுத்தவரை இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி போன்ற சில நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. தற்போது முகவர்களின் மூலம் சிறு வணிகர்களிடம் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து இணையதளங்களில் விற்பனை செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆயிரம் அல்லது லட்சக்கணக்கான முகவர்களைக் கொண்டு கோடிக்கணக்கான விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்வதைவிட இந்த மூன்று பெருநிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்வதில் இந்நிறுவனங்களுக்கும் எந்த பிரச்சினையும் இருக்கப்போதில்லை. உண்மையில் கோடிக்கக்கான நபர்கள் மூலம் சந்தைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் குறைத்து லாபத்தையும் விற்பனையும் அதிகரிக்கும் இதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள்.

**விவசாயப் பொருட்கள் சிக்கல்**

இந்தப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பதில் உற்பத்தி செலவு, சந்தைபடுத்த உதவும் முகவர்களின் பங்கு, பொருளை கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு, சந்தைப்படுத்த கடை வாடகை, வேலை செய்ய தொழிலாளர்கள், கடைக்காரரின் லாப விகிதம் எனப் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. மூன்று நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மையபடுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் பொருள் விநியோகத்தை மேற்கொள்ளும்போது இதற்கான செலவுகள் பெருமளவு குறையும். நேரடி விற்பனைக்குப் பதில் இணையவெளியில் சந்தைபடுத்தும்போது கடை வாடகை, கடைக்காரர் பங்கு, தொழிலாளர் செலவும் குறைவதால் பொருளை பாதி விலைக்கும் கீழாக விற்பனை செய்ய முடியும். ஏற்கனவே இந்த சந்தையில் உள்ள கடைக்காரர்களால் இதற்கு ஈடுகொடுக்க முடியாது. ஆகையால் அவர்களை வெளியேற்றுவது அவ்வளவு கடினமானதும் அல்ல. ஆனால் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை இம்மூன்று நிறுவனங்களும் சந்தைப்படுத்துவதில்தான் சட்ட சிக்கல்களும் பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.

**நடப்பு கட்டமைப்பு பொருத்தமற்றது**

தற்போது இந்த விற்பனை சிக்கலான சங்கிலித்தொடர்புகள் மூலம் இயங்கி வருகிறது. நேரடியாக விவசாய உற்பத்தியாளரிடம் இருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். பெருநிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட வர்த்தகத்துக்குப் பல சிறு உற்பத்தியாளர்கள் பங்குபெறும் அதிகப்படியான தொழிலாளர்களை கோரும் குறைவான லாபவிகிதம் கொண்ட இந்த முறை பொருத்தமானதும் அல்ல. இதே முறையில் அவர்களால் சாதாரண கடைக்காரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறவும் முடியாது. முந்தைய ரிலையன்ஸ் ஃப்ரஷ் தோல்வி இதற்கு எடுத்துக்காட்டு.

**குறுக்கே நிற்கும் அரசு**

மையப்படுத்தப்பட்ட வர்த்தகத்துக்குத் திட்டமிட்ட குறைவான செலவில் அதிகமாக உற்பத்தி செய்யும் பண்ணை விவசாயம், குறைவான விலையில் பெரும் அளவிலான கொள்முதல், அதனை சேமிக்கவும் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று சந்தைபடுத்தவுமான குளிர்பதன கிடங்கு வசதிகள் ஆகியவற்றை கொண்ட கட்டமைப்பில் செயல்படும்போதே லாபகரமாக நிறுவனமயமான முறையில் இயங்க முடியும். மற்றுமொரு சிக்கலாக மளிகைப்பொருட்களில் குறிப்பாக அரிசி, கோதுமையைப் பொறுத்தவரையில் இணைய வர்த்தகத்துக்கு நேரடி போட்டியாளனாக அரசே இருக்கிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யவும், சேமித்து வைக்கவும், மக்களுக்கு விற்பனை செய்யவும் விரிவான கட்டமைப்பையும் அரசை தவிர வேறு யாரும் சேமித்து வைத்து விற்பனை செய்து லாபமீட்ட முடியாத முற்றுருமையையும் கொண்டிருக்கிறது.

**அரசின் வலுவான கட்டமைப்பு**

இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நட்டமடைவதை தடுக்க குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் சட்டமும், கொள்முதல் செய்யும் நடைமுறையும் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்வதும் சுதந்திர சந்தை விதிகளுக்கு புறம்பானதும் பொருந்தாததும் மட்டுமல்ல; இந்த முற்றுருமையையும் வலுவான கட்டமைப்பையும் கொண்டிருக்கும் அரசிடம் இந்நிறுவனங்கள் போட்டியிட்டு பெருலாபம் ஈட்டுவதும் பங்குசந்தையில் அதைக்காட்டி பணம் பார்ப்பதும் இயலாத காரியம். இந்த நடைமுறை சிக்கல்களை உடைத்து இந்த விவசாயப்பொருள் விற்பனையில் இந்த நிறுவனங்கள் ஈடுபட முதல்படி அரசின் முற்றுருமையை உடைப்பதும் இந்தப் பொருட்களை கொள்முதல் செய்யவும் சேமித்து வைக்கவும் இருக்கும் தடைகளை நீக்குவதும்.

**தடைக்கல்லாக இருந்த சட்டங்கள்**

அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டம் (Esential Commodity Act) இந்தப் பொருட்களை தனியார் நிறுவனங்கள் பெரும் குளிர்பதன கிடங்குகளில் குவித்து வைப்பதையும் ஏற்றுமதி செய்வதையும் தடுக்கிறது. பல மாநிலங்களால் இயற்றப்பட்டுள்ள Agricultural Produce Market Committee Acts விவசாயப் பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரச கொள்முதல் நிலையத்திலோ, உள்ளூர் சந்தையிலோ விற்க கோருகிறது. இந்தச் சட்டரீதியிலான தடையை ஒன்றிய பாஜக கட்சியின் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தையும் பொதுமுடக்க சூழலையும் சரியாகப் பயன்படுத்தி எந்த விவாதமோ, மாநில அரசுகளின் அதிகார எல்லையில் வரும் இதில் அவர்களுடன் கலந்தாலோசிப்போ இன்றி இந்தச் சட்டங்களை மாற்றி சட்ட ரீதியிலான தடையை வெற்றிகரமாக உடைத்திருக்கிறார்கள்.

**படிக்கல்லான அரச கட்டமைப்பு**

அடுத்த படி எடுத்து வைக்க தடையாக வழியில் நிற்கும் அரசை ஒதுங்கிபோ என்று ஆணையிட்டால் அது மக்களை பாதிக்கும்; ஆதலால் அதை செய்துதான் தீருவேன் என்று அடம்பிடிக்கவா போகிறது. அம்பானியின் ஜியோ கர்நாடகாவில் அரசின் ஆதரவு விலைக்கு கூடுதலாக பத்து – இருபது ரூபாய் அதிகம் கொடுத்து கொள்முதல் செய்ததை செய்திகளில் பார்த்தோம். அரசால் இதுவரை நடத்தப்பட்டு வந்த சேமிப்பு கிடங்கு அதானியின் கைக்கு சென்றது. அரசு மானியவிலையில் விற்பனை செய்து சந்தைக்கு குறுக்கே நிற்காமல் விலகிக்கொண்டு மானியத் தொகையை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி மக்களை காக்கலாம் என்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான குலாத்தி ஆலோசனை வழங்கி இருக்கிறார். சமையல் எரிவாயு உருளைகளுக்கு இப்படித்தான் பணம் போட்டார்கள். இப்போது பணத்துக்குப் பதிலாக மாதாமாதம் விலையை ஏற்றி நம் தலையில் கட்டையால் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து நியாய விலை கடைகளுக்கு என்ன நடக்கும் என்று எளிதில் ஊகித்துக் கொள்ளலாம். கொள்முதல் செய்ய, கிடங்குகளில் குவிக்க, விற்பனை செய்ய இருந்த தடைகள் நீங்கிவிட்டன. இன்னும் பெரும்நிலப்பரப்பில் பண்ணை விவசாய உற்பத்தி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இதற்கு நிலம் வேண்டும்.

இதனை தனி தலைப்பாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *