மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 மா 2021

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்: சசிகலா

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்: சசிகலா

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா இன்று (மார்ச் 3) அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பரப்பன அக்ராஹரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, கொரோனா தொற்றால் மருத்துவ சிகிச்சைக்குப் பின் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை வந்தார்.

அதிமுக கொடி கட்டிய காரில் வந்து, தான் அதிமுகதான் என்றும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்பே, கடந்த ஜனவரி 19-ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“ சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பில்லை” என்று கூறினார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் சசிகலா, அமமுகவை சேர்க்கச் சொல்லி பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் அவற்றை இன்று மறுத்தார்.

இந்த நிலையில் தான் அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (மார்ச் 3) இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்துக்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலைபெற அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பட்டத்துக்குக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என்று அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மின்னம்பலத்தில், தேர்தலுக்கு முன்...அமமுக கலைப்பு: அதிமுகவுடன் இணைப்பு! ஒதுங்கிக்கொண்டு ஒன்றாக்க முயற்சிக்கிறாரா சசிகலா? என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “சின்னம்மாவுக்கு எதிராக முதல்வரும், அமைச்சர்களும் பேசிவருவதும், புகார் கொடுப்பதும் அவரைப் பெரிதும் காயப்படுத்தினாலும் அவர் எந்தவொரு கோபத்தையும் காட்டவில்லை. தற்போதுள்ள அவருடைய உடல்நிலை, அரசியல் சூழ்நிலையை வைத்துப் பார்க்கையில், அவர் மீண்டும் தீவிர அரசியலுக்குள் இறங்குவதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதாகத் தெரியவில்லை. அதை அவரும் விரும்பாததுபோல்தான் தெரிகிறது.

ஆனால் தன்னுடன் இருந்து, தனக்காகவே கட்சியை விட்டு வெளியில் வந்த தினகரனுக்கு அரசியலில் ஒரு இடத்தை உருவாக்கித் தந்துவிட்டுத்தான் ஒதுங்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். அதனால்தான், ‘நான் ஒதுங்கிக்கொள்கிறேன்; தினகரனை மட்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது கட்சிக்கும் பெரும் பலமாக இருக்கும். இல்லாவிட்டால் திமுகவை எதிர்த்து நீண்ட நாட்களுக்கு அரசியல் செய்ய முடியாது!’ என்று சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார். அதற்கு அவர் சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார். அதாவது, ‘தேர்தலுக்கு முன்பாகவே அமமுகவை கலைத்து விட்டு தினகரன், அதிமுகவில் இணைந்துவிடுவார். ஆனால் தினகரன் உட்பட அவர் தரும் பட்டியலில் இருக்கும் 35 பேருக்கு அவர்கள் கேட்கும் தொகுதிகளில் சீட் தரவேண்டும் என்பதுதான் அதில் முக்கிய நிபந்தனை. கட்சி தற்போதிருக்கும் நிலையில் இந்த நிபந்தனையைப் பரிசீலித்து முடிவெடுக்கவும் அதிமுக தலைமையில் இருந்து ‘க்ரீன் சிக்னல்’ கிடைத்திருக்கிறது. ஆனால் என்ன முடிவெடுப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. அவர் காத்துக்கொண்டிருப்பது அந்தத் தகவலுக்காகத்தான்!’’ என்று சொன்னதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே தற்போது சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். அதேநேரம் தினகரன் பற்றி அவர் என்ன முடிவெடுத்திருக்கிறார் என்பது சில நாட்களில் தெரியும்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 3 மா 2021