மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க பாஜக நிர்ப்பந்தப்படுத்துவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

இன்று (மார்ச் 2) சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“ திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். தேர்தல் நெருங்குகிறது. எங்களின் ஒரே இலக்கு திமுகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதுதான். திமுகவை எதிர்க்கிற அத்தனை கட்சிகளும் அமமுக தலைமையில் வந்தால் ஏற்கத் தயார். திமுகவை எதிர்க்கிற எந்தக் கட்சியாக இருந்தாலும், யார் வந்தாலும் பேசத் தயார்”என்று குறிப்பிட்டார் டிடிவி தினகரன்.

“அமமுக அதிமுக இணைப்புக்கான நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கிறது?” என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் வாய் விட்டு சிரித்துவிட்டு, “ விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற மாதிரி இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

அதிமுக கூட்டணிக்குள் அமமுகவை கொண்டுவருவதற்கு பாஜக முயற்சித்து வருவது குறித்து தினகரனுக்கும் சில தகவல்கள் சென்றுள்ளன. பாஜகவின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் தினகரன் கடந்த சில வாரங்களாகவே, “எங்கள் ஒரே இலக்கு திமுகவின் ஆட்சி அமையவிடாமல் தடுப்பதுதான்” என்று பேசிவருகிறார். மேலும் எடப்பாடி ஆட்சியும், திமுகவும் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில் 60:40 என்ற அளவில் கூட்டணி போட்டு செயல்பட்டு வருகிறது என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். தன்னை திமுகவின் பி டீம் என்று ஜெயக்குமார் போன்றவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், எடப்பாடி ஆட்சியே திமுகவுடனான ஒப்பந்தத்துடன் தான் நடைபெறுகிறது என்று போட்டு உடைத்தார் டிடிவி தினகரன்.

இந்தநிலையில்... ஒருவேளை அமமுகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்குமானால், தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக தன்னால் ஓட்டு கேட்க முடியாது, அப்படி ஓட்டு கேட்டாலும் அது சரியாக இருக்காது என்று கருதுகிறார் தினகரன். ஏற்கனவே ஓ.பன்னீர் சசிகலாவை ஆதரித்தால் அவரை பரதனாக வரவேற்போம் என்றும் தெரிவித்திருந்தார் தினகரன். இந்த பின்னணியில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அவசரமாக அமமுக பொதுக்குழுவை காணொளிக் காட்சி வழியாக நடத்தி, “சசிகலாவின் நல்வாழ்த்துக்களோடு செயல்படும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைப்பது என இப்பொதுக்குழு சூளுரை ஏற்கின்றது”என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே இன்று, “திமுகவை எதிர்க்கும் யாராக இருந்தாலும் எங்கள் தலைமையில் கூட்டணிக்கு வந்தால் பேசத் தயார்” என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளராக தற்போது இருக்கும் எடப்பாடி பழனிசாமியை மாற்றி ஓ.பன்னீரையோ அல்லது தன்னையோ முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதுதான் தினகரனின் நிபந்தனையாக இருக்கும் என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை மீட்கலாம் என்று தினகரன் போட்ட திட்டம் தேர்தலுக்கு முன்பே பாஜகவால் சாத்தியப்படுமா என்ற எதிர்பார்ப்பு அமமுக தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

-ஆரா

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

4 நிமிட வாசிப்பு

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

ஆலோசகர்கள்: ஸ்டாலின் மனதில் இரு அதிகாரிகள்!

3 நிமிட வாசிப்பு

ஆலோசகர்கள்: ஸ்டாலின் மனதில் இரு  அதிகாரிகள்!

விவேக் வீட்டிலும் வாசப்படி!

4 நிமிட வாசிப்பு

விவேக் வீட்டிலும் வாசப்படி!

செவ்வாய் 2 மா 2021