மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

பரேட் மைதானத்தில் ’10 லட்சம்’ பேர்! வங்கத்தின் வரலாறு ஆன பிப். 28 !!

பரேட் மைதானத்தில் ’10 லட்சம்’ பேர்! வங்கத்தின் வரலாறு ஆன பிப். 28 !!

அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிரெதிராக நின்று அரசியல் செய்துவந்த காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து முதல் முறையாக மிகமிகப் பெரிய(என்றுதான் சொல்லவேண்டும்) கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள், மேற்குவங்கத்தில்.

கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 28) காலை முதலே மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வரத் தொடங்கினார்கள். பேருந்துகள், ரயில்வண்டிகள், தனி வண்டிகளில் வந்த மக்கள், 1,400 ஏக்கர் மைதானத்தை மதியம் ஒரு மணி ஆனபோது நிரப்பியிருந்தனர். 10 லட்சம் பேர் திரண்டதாக உற்சாகத்துடன் பேசிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், பிரிகேட் பரேட் மைதானத்திற்கும் இது வரலாற்றுக் கூட்டம் என்று குறிப்பிட்டனர். எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கக்கூடும் என்றாலும் அந்த மைதானத்தைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் கூடிய கூட்டம் இதுவரை திரண்டதாகப் பதிவு இல்லை என்கிறார்கள், கொல்கத்தாவின் மூத்த பத்திரிகையாளர்கள்.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, கேரளத்தில் இருப்பதைப் போல இடதுசாரி அல்லாத கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இதுவரை இருந்ததில்லை. சிபிஐ-எம் கட்சியின் தலைமையிலான இடது முன்னணியில் சிபிஐ, ஆர்.எஸ்.பி., பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகளே கூட்டணியில் (ஆட்சியிலும்) இருந்துவந்தன. அதில் மாற்றம் ஏற்பட்டு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியுடன் மாநில அளவில் கைகோர்த்திருக்கிறது, இடது முன்னணி. ஒரு மாதத்துக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி எனும் புதிய கட்சியும் இணைந்து, சஞ்சுக்த மோர்ச்சா எனும் ஐக்கிய முன்னணி உருவாகியிருக்கிறது.

புதிய ஐக்கிய முன்னணியின் சார்பில்தான் இந்த ஞாயிறு பேரணிப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மிக மூத்த தலைவர்களைக் கொண்ட இடது முன்னணி சார்பில் இளைய முகங்கள் இதில் முன்னிறுத்தப்பட்டனர். முன்னாள் முதலமைச்சரான புத்த தேவ் பட்டாச்சார்யா இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக தன்னால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லையே என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். ஆனாலும் கொரோனா காலத்தில் மூப்பும் நலிவும் எல்லா கட்சிகளின் மூத்த தலைவர்களையும்தானே கட்டிப்போட்டு வைத்திருக்கிறது?

கூட்டத்துக்குத் தலைமைவகித்த இடது முன்னணியின் தலைவர் பிமன் போஸ், திடீரென மக்களின் அனுமதியோடு ஒரு காரியம் செய்வதாகக் கூறி, நடிகரும் இளம் செயற்பாட்டாளருமான பத்சா மொயித்ராவிடம் மைக்கைத் தந்து, பேச்சாளர்களை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஆர்.எஸ்.பி. தலைவர் மனோஜ் பட்டாச்சார்யாவை மேடைக்கு வருமாறு அழைப்புவிடுத்து அறிமுகம்செய்த பத்சா மொயித்ராவுக்கோ கைகால் ஓடவில்லை. சில வாக்கியங்கள் பேசுவதற்குள் திக்குமுக்காடிப் போனார். அவரைப் போலவே மாணவர் சங்கத் தலைவர்களான ஐசீ கோஷ், திப்சிதா தர் ஆகியோருக்கும் இந்தப் பணி வழங்கப்பட்டது. திரண்டிருந்த கூட்டத்தின் ஆரவாரம், இளையோருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான வரவேற்பை எடுத்துக்காட்டியது.

பிரிகேட் பரேட் மைதானத்துக்கு வந்தவர்களில் 60 சதவீதம் பேர் மாணவர்களும் இளைஞர்களுமாக இருந்தனர் என்கின்றன, வங்க ஊடகங்கள்.

இடது முன்னணி தரப்பிலிருந்து மட்டுமல்ல, கூட்டணியின் புதிய பங்காளிக் கட்சியான இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் நிறுவனர் அப்பாஸ் சித்திக்கியும் இளைஞர்தான்; அவருக்கான ஆதரவையும் கூட்டம் காட்டியது, குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கிய அம்சம்.

சித்திக்கி பேசியபோது பல முறை எழுந்த கைதட்டல்கள் அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டின. முன்னதாக, மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பேசிக்கொண்டிருந்தபோது, சித்திக்கி மேடைக்கு வந்ததுதான் தாமதம், கூட்டத்திலிருந்து எழுந்த சத்தம் அடங்கவே இல்லை. ஒரு கட்டத்தில் அதிர் ரஞ்சன் சௌத்ரி, நான் பேச்சை நிறுத்திக்கொள்ளவா எனக் கேட்கும் அளவுக்கு சித்திக்கியின் இளம் ஆதரவாளர்களின் உற்சாக ஆர்ப்பரிப்பு இருந்தது. முழக்கத்தை நிறுத்தச் செய்யுமாறு மூத்த தலைவர்கள் கேட்டுக்கொள்ள, அதன்படி சித்திக்கி வேண்டுகோள்விடுத்த பிறகே கூட்டத்தின் ஆரவாரம் ஓய்ந்தது.

பிரிகேட் பரேட் மைதானத்தின் கனல் தெரிக்கும் அரசியல் பேச்சுகளுக்கு மத்தியில், இஸ்லாமிய மதத் தலைவரின் பேச்சு எதிரொலித்ததும் ஒரு வரலாறுதான் என்கிறார்கள், மேற்குவங்க அரசியலாளர்கள்.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 2 மா 2021