மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

காஷ்மீரில் ஜி23 தலைவர்கள், கேரளத்தில் 2‘ஜி’களின் தளபதிகள்!

காஷ்மீரில் ஜி23 தலைவர்கள், கேரளத்தில் 2‘ஜி’களின் தளபதிகள்!

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் பதவியிலிருந்த பல முக்கியப் புள்ளிகள் சில மாதங்களாகவே கட்சித் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களெல்லாம் ஒன்றுகூடி காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு ஜம்முவில் பாராட்டுக் கூட்டம் நடத்தியதும் நாடளவில் கவனம் பெற்றதே!

இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும், நறுக்கென்றும் சுருக்கென்றும் கருத்துக்கூறினார், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி. "இப்போதைக்கு கட்சியின் மூத்த தலைவர்களுடைய கடமை என்றால் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாகவே இருக்கமுடியும்” என மிகவும் கவனமாக தன் கருத்தைச் சொன்னார், அவர். காங்கிரஸ் கட்சித் தலைமையின் மனவோட்டத்தையுமே இது எதிரொலிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

காங்கிரஸ் தரப்பில் ஐந்து மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் ராகுல் காந்தியைத் தவிர, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் வேறு யாரும் முனைப்பான பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. முன்னணித் தலைவர் என்கிற முறையில் நட்சத்திரப் பேச்சாளராக அவர் இருப்பது வழக்கமானதுதான் என்றாலும், அவரைத் தவிர மற்ற தலைவர்கள் தலைகாட்டாமல் அல்லது தலைகாட்டப்படவிடாமல் இருப்பது கவனத்துக்கு உரியது.

இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தரப்பிலோ மாநில வாரியாக தனித்தனியாக திட்டமிட்டு களமிறங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். குறிப்பாக, கேரள மாநிலத்திற்காக பணியாற்றும் கர்நாடக பாஜக + சங் பரிவார் குழுவினரின் பணிகளைக் குறிப்பிடுகிறார்கள், அரசியல் ஆய்வாளர்கள்.

தென்னிந்தியாவில் கர்நாடகத்தில்தான் பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது. அந்தக் கணக்கை அடியொற்றியே கேரளத்திலும் ஆட்சிக் கணக்கைத் தொடங்குவதுதான் பாஜகவின் திட்டம். கர்நாடக பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோசி, அந்த மாநிலத் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், அம்மாநில சட்டமன்ற தலைமைக் கொறடா சுனில்குமார் கரக்கலா ஆகியோர் கேரளத் தேர்தல் வியூகத்தை வகுப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர்.

இதில் முக்கியமான இன்னொருவர் சங் பரிவாரைச் சேர்ந்தவரும் பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளருமான பிஎல் சந்தோஷ். கேரள பாஜக பொறுப்பாளரான இவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான்.

இந்தத் தலைவர்கள் வாரத்துக்கு மூன்று நான்கு நாள்கள் கேரளத்தில் ஒரு விசிட் அடித்துவிடுகிறார்கள். நிலவரம் எப்படி, செய்ய வேண்டியது என்ன என கலந்துபேசி வேலைகளை உருவாக்கித் தருவதே இவர்களுக்கான டாஸ்க்.

இந்தக் குழுவுக்கும் கேரளத் தேர்தல் பணிகள் முழுவதற்குமான தகவல்தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய, கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் தனியாக பல குழுக்கள் உள்ளன. ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தனியார் தேர்தல் பணி நிறுவனங்களும் இவர்களுக்குத் தேவையான தரவுகள், வசதிகளை உடனுக்குடன் செய்து தருகிறது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் செய்யவேண்டிய வேலைகளை பெங்களூரிலிருந்தே ஒருங்கிணைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உத்திவகுப்போர், களச்செயல்பாட்டாளர்கள், தேவையான வசதிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வேலைகள் கண்ணும்கருத்துமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதைத் தவிர்த்து, பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த 100 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள் குறித்து முன்னணி தலைவர்கள் அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்; மெட்ரோ ரயில் திட்ட பிரபலமான ஸ்ரீதரன் போன்ற பொதுமுகம் கொண்டவர்களை பாஜகவுக்குள் இழுத்துப்போடும் முயற்சிகளும் தனியாக ஒரு பக்கம் நடந்துவருகிறது என்கிறார்கள்.

தேர்தல் என்பது சாமர்த்தியமாக ஆடப்படும் ஒரு விளையாட்டைப் போல மாற்றப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு 'ஜி’கள் எனப்படும் மோடி - அமித் ஷா கூட்டணியின் வேலைகளுக்கு முன்னால் ராகுல்ஜி எனும் ஒரு 'ஜி’யின் திருமுகம் மட்டுமே போதும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறதோ?

- இளமுருகு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 2 மா 2021