மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

117 ஆண் வேட்பாளர்கள்- 117 பெண் வேட்பாளர்கள்:: சமத்துவ சீமான்

117 ஆண் வேட்பாளர்கள்- 117 பெண் வேட்பாளர்கள்:: சமத்துவ சீமான்

கூட்டணிகள் முடிவாகாமல், வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கு திராவிட கட்சிகள் திணறிக் கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை மார்ச் 7 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார்.

இதுகுறித்து சீமான் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களமிறங்கும் என்றும் 117 தொகுதிகளில் ஆண்களும், 117 பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்,

“ எங்களது முன்னோர்களும் இந்நிலத்தில் எங்களுக்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன் வைத்தவர்களும் சமரசங்களுக்கு ஆட்பட்டு திராவிடக் கட்சிகளில் கரைந்த வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்ற நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அதைச் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதிபூண்டு, சமரசமின்றி திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் களம் காண்கிறது.

2010 இல் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டே, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் முதன் முதலில் களம் கண்டது நாம் தமிழர் கட்சி.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும் 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி பாலின பேதம் முறித்து நின்றது. இவ்வாறு முன் மாதிரியான அரசியலை முன் வைத்து முற்போக்கை முழுவதுமாக கடைபிடித்து தனித்து சமர்க்களம் புகுகிறது நாம் தமிழர் கட்சி”என்று கூறியிருக்கிறார் சீமான்.

மேலும் அவர், “ தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச் செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போராடிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி தனித்தே களமிறங்குகிறது. ஆணும் பெண்ணும் சமமென்னும் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு, சரிபாதி 117தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப் போடக் காத்திருக்கிறது.

வரும் மார்ச் 7 சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் வரைவுச் செயற்பாட்டு ஆவணத்தை வெளியிட இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே வேட்பாளர் தேர்விலேயே பெண்களுக்கு 50% ஒதுக்கீடு அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. வெற்றி வாய்ப்பு என்பதெல்லாம் அடுத்த கட்டம் என்னும்போதிலும் வேட்பாளர் தேர்வில் இப்படிப்பட்ட வழிமுறையை பின்பற்ற வேறு கட்சிகள் இல்லை எனும் நிலையே தற்போது நிலவுகிறது.

இதன் மூலம் கமல்ஹாசன், ஓவைசி, சரத்குமார் போன்றோருடன் கூட்டணி என்ற யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீமான்.

-ஆரா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 1 மா 2021