மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

தொகுதிக்கு 6 பேர் - புதுச்சேரியில் பா.ஜ.க.வின் புது செயல்திட்டம்!

தொகுதிக்கு 6 பேர் - புதுச்சேரியில் பா.ஜ.க.வின் புது செயல்திட்டம்!

புதுச்சேரியில் பாஜகவுக்கு தரும் அடி, அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கமாக இருக்கவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதைக் கேட்டு புல்லரித்துப் போயிருக்கிறார்கள், கதர்க் கட்சியினர். ஆனால், ஆர்ப்பாட்டமில்லாமல் அங்கு வெற்றி பெறுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள், காவிக் கட்சியினர்.

தென்னிந்தியாவில் காங்கிரசின் ஒரே பிடிமானமாக இருந்த புதுச்சேரியில், கொரில்லா தாக்குதலுக்கு உள்ளானதைப் போல காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சம்பவங்கள் நாடறிந்த சங்கதிகள். குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதுச்சேரிக்குப் பயணம் செய்தார். முதலில், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்கால் மாவட்டத்துக்கு அவர் வந்தார். அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்துக்குச் சொந்தமான ஓட்டலில் தங்கினார். அங்கு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, துணைப் பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர், தேர்தல் பொறுப்பாளரும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான ஆர்ஜூன்ராம் மேக்வால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, கட்சி நிர்வாகிகள் அரங்கக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், விழுப்புரம் பொதுக்கூட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

கட்சி நிர்வாகிகள் என்பவர்கள் உள்ளூர்க்காரர்கள் மட்டும் இல்லை. கர்நாடக மாநிலத்திலிருந்து தேர்தல் பணிக்காக புதுச்சேரிக்கு வந்திறங்கியவர்கள் இதில் முக்கியமானவர்கள். புதுச்சேரியின் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு குழு என 30 குழுக்களாக இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு பொறுப்பாளர், மற்ற 5 பேர் என ஆறு பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்தந்தத் தொகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காலை 6 மணியிலிருந்து இரவு 10மணிவரை வீதி, தொகுதி, கட்சிக்காரர்களுடன் சந்திப்பு என தேர்தலில் பாஜகவுக்கு பலம்சேர்த்துவருகிறார்கள். வாக்குப்பதிவு அன்று சாவடியில் என்னென்ன செய்யவேண்டும் என்பதுவரை இப்போதே வேலைகளைத் திட்டமிட்டு செய்துவருகிறார்கள்.

கட்சிதாவி பாஜகவுக்கு வந்த காங்கிரஸ்காரர்கள் இந்த பாணியைக் கண்டு சற்று மிரண்டுபோயிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். எல்லா தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்குவைத்து வேலைசெய்யவேண்டும் என அமித் ஷா கட்டளை இட்டிருக்கிறார் என்கிறார்கள், பா.ஜ.க.வின் புதிய புள்ளிகள்.

”இதுவரைக்கும் புதுவையில் அரசியல்செய்த எந்த கட்சியும் இப்படி தேர்தல் வேலை செய்திருக்கமாட்டார்கள்; எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, பக்காவாக அது நடந்திருக்கிறதா என உறுதிப்படுத்திய பின்னர்தான் அந்த வேலை முடித்ததாகக் கணக்கில்கொள்ளப்படுகிறது.” என்று ஆச்சர்யத்தோடும் பெருமை பொங்கவும் பேசுகிறார்கள்.

-வணங்காமுடி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 1 மா 2021