மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

தமிழக பெண் கான்ஸ்டபிள்களின் நிலை என்ன? கனிமொழி கேள்வி!

தமிழக பெண் கான்ஸ்டபிள்களின் நிலை என்ன? கனிமொழி கேள்வி!

தமிழகத்தில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் கான்ஸ்டபிள்களின் நிலை என்ன என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ்சால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக ஒரு மாவட்ட எஸ்பியே டிஜிபியிடம் புகார் கூறியுள்ள நிலையில்... சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததைக் கண்டித்து பிப்ரவரி 28 ஆம் தேதி திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

இதில் உரையாற்றிய திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக மக்களவை குழுத் துணைத் தலைவருமான கனிமொழி,

“பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி சொன்னதைப் போல, இந்த ஆட்சியின் சாத்திரங்கள், வழிமுறைகள் என்பது பெண்களுக்கு எதிரான, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை தமிழ்நாட்டிலே சந்தித்துக் கொ ண்டிருக்கிறோம். இந்திய அளவில் 12 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.எந்த நாட்டை பெண் என்றும்,தாய் என்றும் வழிபடுகிறார்களோ அந்த நாட்டில் பெண்களுக்கு இதுதான் நிலைமை.

அதுவும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் தண்டனை பெறுவது 15% க்கு குறைவுதான். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாப்பதில்தான் பழனிசாமி அரசு தீவிரமாக இருக்கிறதே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அவர்கள் அதிமுகவினர். பொள்ளாச்சி விவகாரத்தில் போராடப் போன எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.

முதல்வரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்யச் சென்ற சிறப்பு அதிகாரி,சட்டம் ஒழுங்கு சிறப்பு அதிகாரி ராஜேஷ்தாஸ். இவர் மீது இதற்கு முன்பும் குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கிறது, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதே அதிகாரிக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருக்கிறது இந்த ஆட்சி. அந்த அதிகாரி அங்கே செல்லும்போது ஒரு பெண் அதிகாரியை அழைத்து தன் வண்டிக்குள்ளே ஏற்றிக் கொண்டு, அந்த அதிகாரியிடம் அத்துமீறி மிகக் கேவலமாக நடந்துகொள்கிறார்.

அந்த மேலதிகாரியிடம் இருந்து தப்பித்து அந்த பெண் அதிகாரி வண்டியில் இருந்து வெளியேறி இவரைப் பற்றி புகார் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அப்படிப்பட்ட சூழலிலே அந்த அதிகாரி தனக்கு கீழே பணியாற்றக் கூடிய ஒருவரை அழைத்து, அந்த பெண் அதிகாரியை மிரட்டக் கூடிய விதத்திலே பேசுகிறார். ‘நீங்க கம்ப்ளைண்ட் கொடுத்தீங்கன்னா தப்பா போகும். மிகப்பெரிய அதிகாரத்திலே இருக்கக் கூடியவர். ஆளுங்கட்சியின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கக் கூடியவர் என்ற ரீதியிலே அந்த பெண் அதிகாரி மிரட்டப்படுகிறார்.

ஆனால் அந்த பெண் அதிகாரியோடு பணியாற்றக் கூடியவர்கள் அவருக்கு உறுதுணையாக நின்ற காரணத்தால்... தளபதி அவர்கள் இந்த தவறை கேள்விப்பட்டு அறிக்கை வெளியிட்ட காரணத்தால்... பல்வேறு பெண்ணிய அமைப்புகள், மகளிரணி, பத்திரிகை துறையை சேர்ந்த நண்பர்கள் எல்லாரும் அந்த குற்றத்தைப் பற்றி வெளியே எழுதத் தொடங்கிய காரணத்தால்... வேறு வழியில்லாமல் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுவும் என்ன நடவடிக்கை?

இரு அதிகாரிகளும் இன்னும் பதவியில் இருக்கிறார்கள். ஒருவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கைது செய்யப்படவில்லை. அவரது பாலியல் குற்றம் எவ்வளவு பெரிய தவறோ அதேபோல, புகார் அளிக்கச் சென்ற பெண் அதிகாரி மீது ஏவிய மிரட்டலும் அதே வகையிலான குற்றம்தான். ஆக இரண்டு பேருமே இதுவரை சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

நான் கேட்கிறேன். ஒரு கமிஷன் போட்டிருக்கிறீர்கள். விசாரணை நடத்துகிறீர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவருமே காவல்துறை அதிகாரத்தில் இருக்க கூடிய சூழலில் எப்படி அந்த விசாரணை நியாயமாக நடக்கும்? உங்களால் சாட்சிகளை மிரட்ட முடியாதா? ஒரு எஸ்பியையே கூப்பிட்டு மிரட்டக் கூடிய அதிகாரிகள், மற்றவர்களை சாட்சிகளை மிரட்ட மாட்டார்களா? இதுவரை அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

இதுதான் பெண்கள்மீது இந்த அரசு வைத்திருக்கும் மரியாதையா? பெண்களுக்கு இந்த அரசு தரும் பாதுகாப்பு இதுதானா? ஒரு எஸ்பி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால்... இந்த ஆட்சியில் கான்ஸ்டபிள்ஸ் ஆக வேலை செய்யக் கூடிய பெண்களின் நிலை என்ன? இந்த ஆட்சியிலே மற்ற துறைகளில் பணியாற்றும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? அவர்களின் பிரச்சினைகள், புகார்கள் கண்டுகொள்ளப்படுகிறதா இல்லையா? இதற்கே தனியாக வரப் போகும் திமுக ஆட்சியிலே தனியாக ஒரு விசாரணை கமிஷன் போடப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் கனிமொழி.

-ஆரா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 1 மா 2021