மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

இத்தனை முறை எதற்காக தமிழகம் வருகிறேன்? திமுக பற்றி ராகுல் ஆவேசம்

இத்தனை முறை எதற்காக தமிழகம் வருகிறேன்?  திமுக பற்றி  ராகுல் ஆவேசம்

திமுக கூட்டணியில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

காங்கிரஸ் சார்பில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமை வகித்த குழுவில் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவரும் காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகியோர் இருந்தனர்.

திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், மக்களவை குழு தலைவர் டி .ஆர். பாலு மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு திமுக காங்கிரஸ் ஆகிய இரு தரப்பிலிருந்தும் அடுத்தகட்ட முன்னெடுப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்று உம்மன் சாண்டியும் ரந்தீப் சுர்ஜேவாலாவும் ராகுல் காந்திக்கு சில தகவல்களை அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் காந்தி சில அறிவுரைகளை அவர்களுக்கு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்..

"தமிழக காங்கிரசுக்குள்ளும் டெல்லி காங்கிரசிலும் கூட சிலர் திமுகவுக்கு ஆதரவு போக்கில் இருப்பதை அறிந்து தான் பேச்சுவார்த்தைக் குழுவில் திடீரென கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியையும் தனது நெருக்கமானவரான ரந்தீப் சுர்ஜேவாலாவையும் நியமித்தார் ராகுல் காந்தி.

இந்த வகையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் ராகுல் காந்தியோடு பேசியுள்ளனர்.

'எடுத்த எடுப்பிலேயே துரைமுருகன் 15 தொகுதிகள் தான் என்று ஆரம்பித்தார். அப்போது உங்களது அறிவுரைப்படி நாங்கள் அதை திட்டவட்டமாக மறுத்தோம். 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் 15 இடங்களில் என்று நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள்.... முந்தைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே 41 இடங்களாவது காங்கிரசுக்கு கொடுக்க வேண்டும்' என்று நாங்கள் வற்புறுத்தினோம்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘காங்கிரசின் செல்வாக்கு என்ன என்று எங்களுக்கு கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில்தான் இதைச் சொல்லுகிறோம்’ என்று பதில் கூறியிருக்கிறார்.

அப்போது உம்மன் சாண்டி, ‘ஐபேக் கொடுத்தார்களா? இன்று வந்த ஐபேக்கை நம்புவீர்கள். உங்களோடு தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் எங்களை நம்ப மாட்டீர்களா? காங்கிரஸின் வாக்கு வங்கி என்பது 15 தொகுதிகள் என்ற அளவுக்கு மோசமாகவில்லை’என்று சற்று கோபமாகவே கேட்டிருக்கிறார்.

அப்போது துரைமுருகன், ’15லிருந்து சற்று அதிகரித்து 18 இடங்கள் வரை தர தயார். 18 இடங்கள் என்றால் இப்போதே கையெழுத்திடலாம் என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

நாங்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று கூறினோம். 18 இடங்கள் ஓ.கே. என்றால் சொல்லுங்கள் இப்போதே தலைவரை சந்தித்து கையெழுத்திடலாம் என்று மீண்டும் கூறினார் துரைமுருகன். நாங்கள் இவ்வளவு குறைவான தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம்’ என்று ராகுல் காந்தியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார்கள்.

அப்போது ராகுல், ‘அதிமுக கூட்டணியில் கூட பாஜகவுக்கு 20 சீட்டுகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை விட காங்கிரஸ் எத்தனை மடங்கு செல்வாக்கு பெற்றுள்ளது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். எனவே குறைந்தபட்சம் 41 என்பதில் உறுதியாக இருப்போம். இல்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம். 15, 18 இடங்களில் போட்டியிடுவதற்காகவா நான் இத்தனை முறை தமிழகம் வருகிறேன்?’ என்று ராகுல் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இருக்கும்” என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 1 மா 2021