மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

அரசியல் மரபும், தேர்தல் வெற்றியும்!

அரசியல் மரபும், தேர்தல் வெற்றியும்!

ராஜன் குறை

மரபு என்ற சொல் தொடர்ச்சியை குறிக்கிறது. இது மானுட வாழ்க்கையில் இரண்டு வடிவங்களில் செயல்படுகிறது. ஒன்று உயிரியல் தொடர்ச்சி; இரண்டாவது பண்பியல் தொடர்ச்சி. உயிரியல் தொடர்ச்சி என்பது மரபணு என்று அழைக்கப்படும் ஜீன் சம்பந்தப்பட்டது. ஒருவர் பெற்ற குழந்தைகள், அந்த குழந்தைகளின் குழந்தைகள் என்று வருவது. பண்பியல் மரபு என்பது எப்படியென்றால் ஒருவர் சித்தர் மரபில் வந்தவர் என்று சொல்லப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவர் சித்தர்களின் குடும்பத்தின் வழித்தோன்றல் என்பது பொருளல்ல. சித்தர்களின் ஞான மரபின் தொடர்ச்சி என்றுதான் பொருள். ஒரு மடாதிபதியாக இருக்கும் துறவி திருமணம் செய்து கொள்வதில்லை; குழந்தை பெறுவதில்லை. ஆனால் அவருக்குப் பிறகு மடாதிபதியாக பதவியேற்க ஒரு இளம் துறவியை பயிற்றுவிக்கிறார். மரபு தொடர்கிறது.

மனித சமூகங்களுக்கு தொடர்ச்சி, மாற்றம் இரண்டுமே முக்கியம். எல்லாவற்றையும் முற்றிலும் புதிதாக, நினைத்தபடியெல்லாம் செய்ய முடியாது என்பதால் வழமைகளும், மரபுகளும் , தொடர்ச்சியும் அவசியமாகிறது. அதே சமயம் மனிதர்கள் சுதந்திர சிந்தனை உள்ளவர்கள் என்பதால் சில புதிய முறைகளை உருவாக்குவதும், மாற்றங்களும் அவசியமாகிறது. வெவ்வேறு துறைகளில் மரபுக்கும், புதுமைக்கும் வெவ்வேறு மதிப்பீடுகள் இருக்கும். உதாரணமாக இசைத்துறையில் மரபுகளுக்கு மிகுந்த மதிப்புண்டு; அதில் செய்யப்படும் புதுமைகளும் மரபினூடாகவே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒரு ராகத்தை பாடும்போது அதன் இசைக்கட்டமைப்பு மாறாமல்தான் அதற்குள் சில புதுமைகளை செய்யவேண்டும். அதற்கு மாறாக ஒரு சிலர் பல்வேறு இசை மரபுகளை கலந்து ஃபூயூஷன் (fusion) செய்வது, மரபுகளை உடைத்து மனோதர்மத்தின்படி இசைப்பது ஆகியவையும் நடக்கும். ஒரு இசைக்கலைஞரிடம் பயில்பவர்களும் அவரது மரபை தொடர்வார்கள்; சில சமயம் அந்த கலைஞரின் சொந்த மகனோ, மகளோ அவரிடம் பயின்று மரபை தொடர்வார்.

அரசியல் மரபு என்பது என்ன?

அரசியல் மரபை குறித்து பேசும்போது ஆங்கிலத்தில் legacy என்றொரு வார்த்தையை பயன்படுத்துவார்கள். அது ஒரு கட்சியின், ஒரு வரலாற்று நிகழ்வின், ஒரு தலைவரின் தொடர்ச்சியாக யார் இருக்கிறார்கள் என்பதை குறிப்பது. இது ஏன் மக்களாட்சி அரசியலில் முக்கியமாகிறது என்றால் மக்கள் தாங்கள் எவ்வாறு அரசால் வழிநடத்தப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவும் என்பதால்தான்.

இப்படி யோசிப்போம். அரசியல் கட்சிகளே இல்லையென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த பிரதிநிதிகள் கூடி தங்களுக்குள் யாரோ ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய அரசு நிலையாக இருக்குமா என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், மக்கள் எந்த அடிப்படையில் தங்களுக்கான அரசை உருவாக்குவார்கள் என்ற குழப்பமும் ஏற்படும். அதனால்தான் அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அந்த கட்சியின் தலைவர் அல்லது தலைவர்கள் யார், அந்த கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் என்ன, அவற்றின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள். இவ்வாறு தேர்வு செய்யும்போதுதான் மக்களுக்கு அரசை உருவாக்குவதில் முழுமையான பங்கு இருக்கும். அதனால் அரசியல் கட்சிகளும், அவற்றின் மரபான அம்சங்களும் தேர்தல்களில் முக்கியத்துவம் பெருகின்றன.

அரசியல் கட்சிகளின் மரபு என்பது மூன்று முக்கிய அம்சங்களில் இருக்கின்றது. ஒன்று அதன் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் தொடர்ச்சி. இரண்டு அதன் தலைவர்கள், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட வாரிசுகள். மூன்றாவதாக ஒரு அரசியல் இயக்கமாக கட்சியின் சாதனைகள், அதன் வரலாறு. இந்த மூன்றையும் கட்சிகள் எப்படி பேணுகின்றன என்பதைப் பொறுத்துதான் அவற்றை மக்கள் தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள். சில அபூர்வமான தருணங்களில் புதிய கட்சிகள் தோன்றலாம். அவை மக்களின் சில நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும். உதாரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. டெல்லியில் இருந்த காங்கிரஸ் தலைமை அதை இயக்கி வந்தது. அந்த நிலையில் ஆந்திர மாநில மக்களுக்கு தங்கள் மாநிலத்தின் சுயேச்சையான தன்மையை வெளிப்படுத்தும் தேவை உருவானது. அதனால் என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சி உருவாகி ஆட்சிக்கு வந்தது. என்.டி.ஆர் மறைந்த பிறகு அவருடைய அரசியல் வாரிசு அவரது இரண்டாவது மனைவி சிவபார்வதியா, அல்லது அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவா என்ற கேள்வி எழுந்தது. கட்சியும், மக்களும் சந்திரபாபு நாயுடுவையே தேர்ந்தெடுத்தார்கள். இந்திய வெகுஜன அரசியலில் கட்சியின் கொள்கைகள், அதன் வரலாறு என்பதைவிட தலைவர்கள், அவர்கள் வாரிசுகள் என்பதே முக்கியமான அரசியல் மரபாக, லிகஸியாக விளங்குகிறது. கட்சிக்கு கட்சி இது வேறுபடுகிறது. நாம் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நான்கு கட்சிகளின் அரசியல் மரபை பரிசீலிப்போம்.

காங்கிரஸ் கட்சி

இந்தியாவின் முதல் அரசியல் கட்சி இதுதான். 1885-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட து. ஆங்கிலேயர்களிடம் சுயாட்சி உரிமைகளுக்காக பேசுவதற்காக உருவான கட்சி, மெல்ல, மெல்ல பூரண சுதந்திரம் நோக்கி நகர்ந்து, 1947-ஆம் ஆண்டு பூரண சுதந்திரத்தை பெற்றது. அதன் பிறகு புதிய தேசத்தையும், அதன் அரசையும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியது. மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி பெரும் வெகுஜன ஈர்ப்பைக் கொண்ட தலைவராக, மகாத்மாவாக உருவானது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வலிமையைத் தந்தது. காந்தி தன்னிடம் பல விஷயங்களில் கருத்து மாறுபாடு கொண்டிருந்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவரான மோதிலால் நேருவின் மகனுமான ஜவஹர்லால் நேருவை தன் அரசியல் வாரிசாக அறிவித்தார். தன்னளவிலேயே வெகுஜன ஈர்ப்பு மிக்க தலைவராக இருந்த நேரு, காந்தி அளித்த வாரிசு பட்டத்தால் மேலும் வலுவான தலைவர் ஆனார். அவரே சுதந்திர இந்திய அரசை வழிநடத்தி, அரசியல் நிர்ணய சட்டத்தை அம்பேத்கர் தலைமையில் வடிவமைத்து, குடியரசை அறிவித்து, தேர்தல்கள் நடைபெறச் செய்து முதல் பதினேழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். காங்கிரஸ் பல்வேறு மத, இன, மொழி, ஜாதி அடையாளங்களையும், பல்வேறு கருத்தியல் போக்குகளையும் ஒருங்கிணைத்து கட்சி நடத்தியதால் கட்சி தலைமையே அதன் மரபின், வரலாற்று பங்களிப்பின் குறியீடாக மாறியது. தலைவரின் அரசியல் வாரிசு, தலைவரின் உயிரியில் வாரிசாகவும் இருப்பது வெகுஜன அரசியலில் மக்களால் சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படுவடுவதாக மாறியது. அதனால் நேருவுக்குப் பின் அவர் மகள் இந்திரா மிகுந்த வெகுஜன செல்வாக்குப் பெற்ற தலைவரானார். அவருக்குப் பின் அவர் மகன் ராஜீவ் காந்தியும் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அவரது துர்மரணத்திற்குப் பிறகு நரசிம்ம ராவ் பிரதமரானபோது காங்கிரஸின் செல்வாக்கு மளமளவென்று சரிந்தது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி தலைமைப் பொறுப்பு ஏற்ற பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது ராஜீவ், சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி காங்கிரஸின் வரலாற்றின், மரபின் அடையாளமாக செயல்பட்டு வருகிறார். நேற்று அவர் தமிழகத்தில் பேசும்போது, ஆங்கிலேயர்களை ஆட்சியிலிருந்து விரட்டிய காங்கிரஸிற்கு மோடியை விரட்டுவது பெரிய காரியமல்ல என்று கூறி, காங்கிரஸின் மரபார்ந்த வலிமையை சுட்டிக் காட்டியுள்ளார். வாரிசு தலைமை என சிலர் குறைசொல்வதை மக்கள் மரபின், வரலாற்றின் தொடர்ச்சியாகவே கருதுகிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சி

பாரதீய ஜனதா கட்சியின் மரபு என்பது இந்தியாவின் பழம்பெரும் பார்ப்பனீய சிந்தனையின் மரபுதான். ராஷ்டிரீய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பே அதனை வழிநடத்துகிறது. அதன் தலைவர்கள் மடாதிபதிகளைப் போல நியமன முறையிலேயே உருவாவார்கள். இந்து மத அடையாள வாதம், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மீதான வெறுப்பு ஆகியவையே பாஜகவின் இந்துத்துவ அரசியலின் அடிப்படை. அதற்கு துணைபுரிவதற்காக பெருமுதலீட்டிய நிறுவனங்களுக்கான கண்மூடித்தனமான ஆதரவை வழங்குவார்கள். இப்போது அம்பானி, அதானி ஆகிய இருபெரும் முதலீட்டாளர்களை, அவர்கள் அமைப்புகளை ஆதரித்து வருகிறார்கள். இப்படியான கொள்கையே இவர்கள் மரபு என்பதால் யார் வேண்டுமானாலும் இவர்கள் தலைவராகலாம். நேற்று வாஜ்பேயி-அத்வானி, இன்று நரேந்திர மோடி-அமித் ஷா. ஆனாலும் இவர்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றுடன் எந்த தொடர்பும் இல்லாதது மரபு உருவாக்கத்தில் பெரும் குறை. அதற்கு நேர் மாறாக காந்தியைக் கொன்ற கோட்ஸே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தது ஒரு பெரிய பிரச்சினை. இதை சரிசெய்வதற்காக காங்கிரஸ் தலைவரான குஜராத்தை சேர்ந்த வல்லபாய் படேலை காங்கிரஸ் வரலாற்றிலிருந்து களவாடி பிரம்மாண்டமான சிலை ஒன்றை வைத்து தங்களுக்கான ஒரு மரபின் மூலத்தை உருவாக்க முயற்சித்தார்கள், இவர்களுடைய உண்மையான மூலவர்களான ஹெட்கவாருக்கோ, கோல்வால்கருக்கோ, சாவர்க்கருக்கோ அப்படி ஒரு சிலையை வைக்கும்படி அவர்களுக்கு இந்திய சரித்திரத்தில் முக்கியத்துவம் எதுவும் கிடையாது என்பதுதான் இப்படி காங்கிரசிடமிருந்து வல்லபாய் படேலை களவாடக் காரணம்.

திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிடம் என்ற சொல்லில்தான் தி.மு.க-வின் அரசியல் மரபு வேர்கொண்டுள்ளது. இது ஆரியக் கலாசாரமாக அறியப்பட்ட பார்ப்பனீய கலாசாரத்திற்கான மறுதலையாக உருவானது. பார்ப்பனர்களின் அரசியல், கலாசார ஆதிக்கத்திற்கு எதிராக உருவான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், இவையிரண்டின் சங்கமமான திராவிடர் கழகம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக 1949-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் உருவானது தி.மு.க. பெரியாரின் திராவிடர் கழகத்துடன் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கிய தி.மு.க 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. பெரியாருடனும், அண்ணாவுடனும் தி.மு.க துவங்கும் முன்பாகவே இணைந்து இயங்கி வந்தவரும், தி.மு.க வளர்ச்சியில் அண்ணாவின் வலதுகரமாக செயல்பட்டவருமான கலைஞர் கருணாநிதி அண்ணா மறைவிற்குப்பின் திராவிட அரசியல் மரபின் தனிப்பெரும் சின்னமாக 2018-ஆம் ஆண்டுவரை விளங்கினார். மாநில சுயாட்சிக் கோரிக்கையை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் சார்பாகவும் முன்னெடுத்தார். அவரால் ஐம்பதாண்டு காலமாக அரசியலில் பயிற்றுவிக்கப்பட்ட அவரது மகன் மு.க.ஸ்டாலின் திராவிட அரசியல் மரபின் அறுபடாத தொடர்ச்சியாக இன்று தலைமையேற்றுள்ளார். பார்ப்பனீய எதிர்ப்பு என்ற சமூக நீதி கொள்கையும், தமிழுணர்வும் திராவிட அரசியலின் அடிப்படைகளாக தெளிவாகத் தொடர்கின்றன.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

ஐம்பதுகளிலிருந்தே தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் சிந்தனைகளை தன் திரைப்படங்களின் கதைகளிலும், கொள்கைகளை பாடல்களிலும் இடம்பெறச் செய்து நடிகராக பெரும் புகழீட்டியவர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். இவர் அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தபின், 1972-ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கினார். தானே அண்ணாவின் உண்மையான அரசியல் வாரிசு என்று கூறிக்கொள்வதே அவர் அரசியலின் அடிப்படை. அவர் கட்சியின் கொள்கை அண்ணாயிசம் என்பார். அண்ணா நாமம் வாழ்க என்று கூறி பேச்சை முடிப்பார். தி.மு.க கொடியில் அண்ணாவின் உருவத்தை சேர்த்து கட்சிக் கொடியை வடிவமைத்தார். அண்ணா ஒருமுறை இவரை இதயக்கனி என்று குறிப்பிட்டார் என்பதற்காக இதயக்கனி என்று ஒரு திரைப்படத்தையே எடுத்தார். இதையெல்லாம் செய்தாலும் எம்.ஜி.ஆர் திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைகளை உள்வாங்கவில்லை. மாநில சுயாட்சி, பார்ப்பனீய எதிர்ப்பு, தமிழ் வளர்ச்சி ஆகிய அனைத்துமே பின்னுக்குத் தள்ளப்பட்டு எம்.ஜி.ஆர் என்பவரின் தனிநபர் கவர்ச்சியே கட்சியின் மூலப்பொருளாயிற்று. அதனால் கட்சிக்காரர்களும், மக்களும் அவரை எம்.ஜி.ஆர் என்ற திரைக்கதையாடல் உருவாக்கிய பிம்பமாகவே பார்த்தார்களே தவிர திராவிட அரசியலின் தொடர்ச்சியாக பார்க்கவில்லை. அதனால் திராவிடத்துடன் அகில இந்திய என்ற வார்த்தைகளைச் சேர்த்து அண்ணாவிற்கு துரோகம் செய்து, போலி திராவிட கட்சியானார். அவர் மரணத்திற்குப் பிறகு அவருடன் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவரும், பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவரும், அவரால் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டவருமான ஜெயலலிதா அவரது அரசியல் வாரிசாக தன்னை நிறுவிக்கொண்டார். தமிழக இந்துத்துவக் கட்சி என்னுமளவு கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தார். தி.மு.க-வை எதிர்ப்பதற்காக பெயரளவில் திராவிடமாக இருந்தார். தி.மு.க, கருணாநிதி வெறுப்பே கட்சி கொள்கையாக இருந்தது. எம்.ஜி.ஆரைவிட கடுமையாக தனிநபர் வழிபாட்டையே அரசியல் மரபாக்கினர். இவர் பயணம் செய்து வந்த ஹெலிகாப்டரை கண்டவுடனேயே கட்சித் தலைவர்கள் கும்பிட்டு வணங்கினர். அவர் 2016-ஆம் ஆண்டு மறைந்தபிறகு கட்சியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

அ.இ.அ.தி.மு.க-வின் அரசியல் மரபு என்பது என்ன என்பது கேள்விக்குறி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய பிம்பங்களைத் தவிர அவர்களுக்கு பேச என்ன அரசியல் இருக்கிறது என்பது விவாதப்பொருள். அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடுகின்றனர், ஆடுகின்றனர். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் கோயில் கட்டுகின்றனர். இரட்டை இலை சின்னத்தை ஒரு புனிதக் குலக்குறியாக நினைக்கின்றனர். தனி நபர் வழிபாட்டை தவிர இவர்களுக்கு எந்த அரசியலும் தெரியாது; தேவையுமில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பதிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆரை தூரத்திலிருந்துதான் பார்த்திருப்பார்கள். அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமாவது இவர்களிடம் இருக்குமா என்று தெரியாது. ஜெயலலிதாவோ இவர்களை அடிமைகளைப் போலத்தான் நடத்தினார். அதனால் ஜெயலலிதாவுடன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இணைபிரியாத துணையாக இருந்த அவரது உடன்பிறவா சகோதரி சின்னம்மாவை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்தனர். அவரையே முதல் அமைச்சராகவும் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து செய்த ஊழல்களுக்காக சிறைத்தண்டனை பெற்று சிறை சென்றுவிட்டார். உடனே பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அவரை பொதுச்செயலாளர் இல்லையென்று நீக்கிவிட்டு, தங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று நியமித்துக்கொண்டனர். அவர் நான்காண்டு சிறைவாசம் முடிந்து வந்துவிட்டார். இப்போது பெரும் குழப்பம் விளைந்துள்ளது. ஜெயலலிதாவுடன் முப்பதாண்டுகள் சேர்ந்து வாழ்ந்து கட்சியிலும், ஆட்சியிலும் பங்கெடுத்த சசிகலா வாரிசா, ஜெயலலிதாவின் வாகனங்களைப் பார்த்தவுடன் குனிந்து கும்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் வாரிசா, அதிலும் பரதன் பன்னீர்செல்வம் வாரிசா, பழனிசாமி வாரிசா என பல கேள்விகள் நிலவுகின்றன. உள்ளீடற்ற அரசியல் மரபாகவும், தொடர்பற்ற வாரிசுகளாகவும் கட்சி பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

இந்த நான்கு கட்சிகளின் மரபுகளும் இந்த பொதுத்தேர்தலில் மக்களின் முடிவை எப்படி தீர்மானிக்கப்போகின்றன என்பதே கேள்வி.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 1 மா 2021