மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

காங்கிரஸ் அரசு தானாய் கவிழ்ந்தது- அடுத்து பாஜக அரசு: அமித் ஷா

காங்கிரஸ் அரசு தானாய் கவிழ்ந்தது- அடுத்து பாஜக அரசு:  அமித் ஷா

காரைக்காலில் உரையாற்றிய அமித் ஷா, வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பேசியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 28) பகலில் காரைக்காலில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

“காரைக்கால் அம்மையாரை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். சனீஸ்வர பகவானை வணங்கி இந்த உரையை தொடங்குகிறேன். மகா கவி பாரதி தங்கிய புண்ணிய பூமி இது. அரவிந்தர் யோகியாக இந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுத்து ஆன்மிகப் பணியை செய்தார்.

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் வருகிற புதுச்சேரி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றும். புதிய ஆட்சி தேஜகூ தலைமையில்தான் அமையும்.

பிரதமராக பதவியேற்ற மோடி புதுச்சேரி அரசை மாதிரி அரசாக உருவாக்க நினைத்து 115 திட்டங்களை கொண்டுவந்தார். ஆனால் நாராயணசாமி அதையெல்லாம் தடுக்கும் வகையிலேயே செயல்பட்டு வந்தார். இங்கிருக்கும் காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்துவிட்டது. அதில் இருக்கும் ஒவ்வொருவரும் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? உங்கள் தலைவர் ராகுல் காந்தியையே மொழிமாற்றம் செய்யும்போது ஏமாற்றியவர் ஆயிற்றே? உலகத்தில் பொய் சொல்வதற்கான விருது அளிக்க வேண்டும் என்றால் அது முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்குதான் கொடுக்க வேண்டும்.

அவரது எண்ணம்,நோக்கம், செயல்பாடு எல்லாமே ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் பற்றித்தானே தவிர மக்களின் நலம் பற்றி அல்ல. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒவ்வொருவராய் இங்கே வரக்காரணம் என்ன?அங்கே குடும்ப ஆட்சி நடக்கிறது.புதுச்சேரியில் மட்டுமல்ல மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் காணாமல் போகும்”என்று பேசிய அமித் ஷா,

“நமச்சிவாயம் (கைதட்டல் எழுகிறது) முதல்வராக வர வேண்டியவர். ஆனால் டெல்லி போய் காந்தி குடும்பத்தின் காலைப் பிடித்து முதல்வர் பதவியை வாங்கிவிட்டார் நாராயணசாமி. திறமைக்கும் தகுதிக்கும் அவர் என்றைக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. நீங்கள் போட்ட வாக்கை அவர் அவமானப்படுத்திவிட்டார்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நாராயணசாமி அரசுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. ஆனால் உங்கள் பகுதிக்கு அதெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறதா? அந்தப் பணமெல்லாம் உங்களுக்கு கொண்டு சேர்க்காமல் எங்கே கொண்டு போய் சேர்த்தார்? எஸ்.சி.எஸ்.டி. ஃபண்ட் டை கூட அவர் விட்டு வைக்க வில்லை. புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் 75% வேலையில்லாமல் உள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் இதை 40% க்கும் கீழாகக் குறைப்பேன்.

50 ஏக்கர் பரப்பில் ஐடி பூங்கா கட்டுகிறேன்,எலக்ட்ரானிக் பூங்கா கட்டுகிறேன் என்று சொன்னாரே நாராயணசாமி கட்டினாரா? புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினாரா இல்லையா? பஞ்சாயத்து தேர்தலை நாராயணசாமி நடத்தாததற்கு காரணம், தாமரை வந்துவிடும் என்ற பயம்தான். வரும் தேர்தலில் புதுச்சேரியில் தாமரைதான் ஆட்சி அமைக்கப் போகிறது. நாராயணசாமி எங்கும் தப்பிக்க முடியாது” என்று நாராயணசாமியின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அமித் ஷா கேள்வி எழுப்பியது அனைவரையும் கவனிக்க வைத்தது.

தொடர்ந்து பேசியவர், “புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பெரிய அளவிலான பறக்கும் பாதைகள் அமைக்கப்படும். பிரதமர் மோடியின் கண்காணிப்பில் இது அமைக்கப்படும். கடந்த 25 ஆம் தேதி இங்கே வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார். காரைக்காலில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும், நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை என்று பல திட்டங்களை மோடி அறிவித்திருக்கிறார்.

கொஞ்ச நாள் முன்பு இங்கே வந்த ராகுல் காந்தி, ‘மீனவர்களுக்காக ஏன் தனித்துறை இல்லை?’என்று கேள்வி எழுப்பினார். ஆனால் மோடி 2019 லேயே மீனவர்களுக்கு என்று தனித்துறை அமைத்திருக்கிறார். ராகுல் காந்தி டூர் சென்றுவிட்டாரா... இது கூட தெரியாமல் என்ன செய்யப் போகிறார் அவர்? மத்திய அரசின் திட்டங்கள் அதிக அளவில் புதுச்சேரியை அடைய நான் பொறுப்பெற்றுக் கொண்டு உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைப்போம்”என்று பேசினார் அமித் ஷா.

இந்தக் கூட்டத்தில் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 28 பிப் 2021