திமுக அணியில் இருந்து விலகல்: பாரிவேந்தரின் எம்பி. பதவி என்னாகும்?

politics

இதுவரை திமுக அணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய அணியை அமைக்கப்போவதாக ஐஜேகே கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து நேற்று பிப்ரவரி 27ஆம் தேதி அறிவித்தார்.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரை டெல்லி பாஜக தலைமை திமுக கூட்டணியில் இருந்து விலகுமாறு அன்பாக எச்சரித்திருந்தது பற்றி மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படியே நேற்று ஐஜேகே கட்சியின் தலைவரும் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரின் மகனுமான ரவி பச்சமுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ தமிழக அரசியலில் இன்று நிலவும் தேக்க நிலையை மாற்றவும் லஞ்சம் ஊழல் என்கிற சமூக நோயிலிருந்து மக்களைக் காக்கவும் மாற்றத்திற்கான முதன்மை அணியை தொடங்கியிருக்கிறோம். இந்த அணியில் தற்போது இந்திய ஜனநாயக கட்சியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பல முக்கிய கட்சிகளும் இந்த அணியில் இடம்பெற உள்ளன.

பாஜக தலைமையிலான கூட்டணியில் 2014 நாடாளுமன்ற தேர்தலையும் 2016 சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தோம். திமுக தலைமையிலான கூட்டணியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்றோம். நமக்குக் கிடைக்கும் எம்பி, எம்எல்ஏ என்கிற பதவிகளை விட தமிழக மக்களின் முன்னேற்றம் என்பதையே முதன்மையாகக் கருதுவதால் நாம் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி புதிய அணியை உருவாக்கி உள்ளோம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின் பங்களிப்பு யாரும் எதிர்பாராத வகையில் வலிமையுடன் நிலைபெறும் என்று தெரிவித்துள்ளார் ரவி பச்சமுத்து.

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பாரிவேந்தர் இன்றைக்கும் நாடாளுமன்ற பதிவுகளின் அடிப்படையில் திமுக எம்பியாகத்தான் உள்ளார். இந்த நிலையில்தான் நிறுவனரான தன் பெயரில் அறிக்கையை வெளியிடாமல் கட்சியின் தலைவரான தனது மகன் பெயரில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் பாரிவேந்தர்.

திமுக கூட்டணியில் நின்று உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற்ற பாரிவேந்தர் இந்த அணி மாற்றத்தால் தனது எம்பி பதவியை இழக்க நேரிடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

இதுகுறித்து பாரிவேந்தருக்கு நெருக்கமான திமுக வட மாவட்டப் பிரமுகர்கள் சிலரிடம் விசாரித்தோம்.

“உண்மையில் ரவி பச்சமுத்துவுக்கும் பாரிவேந்தருக்கும் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான் விருப்பம். சில மாதங்கள் முன்பே ரவி பச்சமுத்து திமுகவின் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து, ‘வரும் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை எங்களுக்குக் கொடுத்து விடுங்கள். தொகுதிக்கு 15 கோடி ரூபாய் வீதம் 90 கோடி ரூபாய் என்று தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கடந்த தேர்தலில் பெரம்பலூர் எம்பி தொகுதிக்கும் செலவு செய்து மேலும் சில தொகுதிகளுக்கும் செலவு செய்ததை போல… திமுக சொல்லும் வேறு சில தொகுதிகளுக்கும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம்’ என்று பேசிக் கொண்டிருந்தார். ஆனால் திமுக தலைமையோ இரு சீட்டுகள் தருகிறோம், எம்பி தேர்தலைப் போலவே உதயசூரியனில் நில்லுங்கள் என்று தெரிவித்தது.

இந்தப்பேச்சுவார்த்தை நடக்கும்போதே… இதனை அறிந்த பாஜகவின் மத்திய தலைமை தனது பழைய நண்பரான பச்சமுத்துவை அழைத்து, ‘திமுகவுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்யக் கூடாது. திமுக கூட்டணியை விட்டு வெளியேறுங்கள். அப்படி வெளியேறவில்லை என்றால் உங்கள் தொழில் நிறுவனங்களை நடத்துவது கடுமையான சவாலாக இருக்கும்’ என்று நேரடியாகவே எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து ரவி பச்சமுத்து தனக்கு நெருக்கமான திமுக பிரமுகர்களின் உதவியோடு திமுக தலைவர் ஸ்டாலினிடமே, தாங்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை விளக்கி திமுக கூட்டணியில் இடம் பெற முடியாத சூழ்நிலையை விவரித்தார். அதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் இல்லையேல் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று சொல்லி வந்து… அடுத்த கட்டமாக இப்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைக்க போவதாக அறிவித்துள்ளது ஐஜேகே. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு சமயங்களில் திமுக கொறடாவின் உத்தரவை தான் பாரிவேந்தர் எம்பி பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றவில்லையெனில் அவரது எம்பி பதவி தானாகவே காலியாகிவிடும்.

ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குரல் கொடுத்த போதும் அவர் எம்பி பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதுபோல பாரிவேந்தரையும் ’பாதுகாப்பதற்கு’ பாஜக உத்தரவாதம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே திமுகவிடம் சொல்லிவிட்டுத்தான் ஐஜேகே இந்த முடிவை எடுத்துள்ளதால், அவரது எம்பி பதவி பற்றி திமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்குறியதாக இருக்கிறது. அதேநேரம் பிரச்சாரத்துக்கு செல்லும்போது திமுக எம்பியாக செல்வது பாரிவேந்தருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். எனவே ரவி பச்சமுத்து தனது அறிக்கையில் சொல்லியிருப்பது போல் எம்பி, எம்.எல்.ஏ.பதவி முக்கியமல்ல என்பதைக் காட்டும் வகையில் அவர் பெரம்பலூர் எம்பி பதவியை ராஜினாமா செய்வதே தார்மீகமாக சரியாக இருக்கும்” என்கிறார்கள்.

இன்னும் என்னென்ன கூத்துகள் தேர்தலுக்குள் நடைபெறப் போகிறதோ?

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *