மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

திமுக மாநாடு: நேருவின் ரியாக்‌ஷன், அதிமுகவின் முடிவு!

திமுக மாநாடு: நேருவின் ரியாக்‌ஷன், அதிமுகவின் முடிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்துவது திமுகவுக்கு வழக்கம்.அதிலும் குறிப்பாக அந்த மாநாடு திருச்சியில் நடந்தால் அது திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக இருக்கும் என்பது திமுகவில் பகுத்தறிவை மீறிய பாரம்பரிய சென்டிமென்ட்.

இந்த வகையில்தான் கடந்த பிப்ரவரி மாத முதல் வாரத்தில் திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் நடுவில் இருக்கும் சிறுகனூரில் சில நூறு ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த திமுக திட்டமிட்டது. பிப்ரவரி 21ஆம் தேதி என முதலில் தேதி குறிக்கப்பட்ட அந்த மாநாட்டை முன்னின்று ஏற்பாடு செய்யும் பொறுப்பு திருச்சி மாவட்ட மூத்த முன்னோடியும், தலைமைக் கழக முதன்மை செயலாளருமான கே.என். நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் சுற்றிச் சுழன்று அதிமுக விவசாயிகளிடம் கூட இணக்கமாக பேசி திமுக மாநாட்டுக்காக இடத்தைப் பெற்றார்.

இந்த நிலையில்தான் மார்ச் 14ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்ட மாநாடு பிப்ரவரி 26 தேர்தல் அறிவிக்கைக்குப் பிறகு ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“நிர்வாகிகள் மட்டும் சுமார் நான்கரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள், அபிமானிகள், பொதுமக்கள் எல்லாம் சேர்த்தால் பத்து முதல் 12 லட்சம் வரை திரள வாய்ப்பிருக்கிறது. 300 முதல் 500 மொபைல் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 15 லட்சம் பேருக்குத் தேவையான குடிநீர் கணக்கிடப்பட்டு ஆங்காங்கே போர் போட்டாகிவிட்டது. மாநாட்டுத் திடலுக்குள் நியாய விலை உணவகங்கள் 500 திறப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட பிரம்மாண்ட மாநாட்டுக்காக நேருவுக்கு கிடைத்திருக்கும் கால அவகாசம் குறைவுதான். என்றாலும் தேதி எப்போது என்பதில் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் விருப்ப மனு வாங்கும் படலம் தொடங்கிவிட்டது. அடுத்து எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கை வந்துவிடும். எனவே மாநாட்டை விரைந்து நடத்த வேண்டியது அவசியமாகிறது”என்று திருச்சி திமுக பிரமுகர்கள் வெளிப்படுத்திய அச்சத்தை, திமுக மாநாடு எப்போது? குழப்பத்தில் தொண்டர்கள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

அவர்களது குழப்பமும் அச்சமும் தலைமையின் மாநாட்டு ஒத்தி வைப்பால் நிஜமாகிவிட்டது.

ஏற்கனவே ஐபேக் இந்த மாநாட்டில் தலையிடுவதாக ஒரு பிரச்சினை வெடித்தது. ஆனால் கே.என்.நேரு அதை திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினிடம் போராடி தேதி வாங்கிய கே.என்.நேரு, மாநாட்டுப் பணிகளில் மூழ்கியிருந்த நிலையில் தலைமை மாநாட்டை ஒத்தி வைத்ததால், தனிப்பட்ட முறையில் நேரு வருத்தமடைந்தார். ஆனாலும் அடுத்தடுத்த தேர்தல் வேலைகள் அழைப்பதால், ‘சரி...வெற்றி விழா மாநாட்டை இதே இடத்துல நடத்திடுவோம். கவலைப்படாதீங்க’ என்று தன் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.

திமுகவைப் போலவே அதிமுகவும் விழுப்புரத்தில் 100 ஏக்கர் பரப்பில் மாநாடு நடத்தத் திட்டமிட்டது. ஆனால் திமுக ஒத்தி வைத்ததும் அதிமுகவும் மாநாட்டுப் பணிகளை அப்படியே விட்டுவிடலாம், செலவு மிச்சம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அதிமுக தரப்பிலும் பேச்சு நிலவுகிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 28 பிப் 2021