மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

ஸ்டாலின்: களமும் வரலாறும்!

ஸ்டாலின்: களமும் வரலாறும்!

விவேக் கணநாதன்

அதிகாரம் என்பதை ஓர் அமைப்பின் இயக்க ஆற்றலாகக் கருதும் புரிதலே, ‘நிறுவன அதிகாரம்’ (Institutional Power). வெவ்வேறு சிறுசிறு கூறுகளின் கூட்டுச் செயல்பாடு என்ற புரிதலின் அடிப்படை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் சாதி, மதம், இனம், மொழி எனப் பல அடுக்குகளிலிருந்து இயங்கும் ஜனநாயக அடிப்படையிலான அதிகாரத்தைக்கொண்டு அமைப்பை நிர்வகிக்கவும், திருத்தவும், செயல்படவும் வைக்க நிறுவன அதிகாரத்தின் இயல்பை அறிந்துகொள்வது மிக முக்கியம்.

20ஆம் நூற்றாண்டில் தமிழ் நிறுவன அதிகாரத்தை இலக்காக வைத்து உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டமைப்பு திமுக மட்டுமே. தமிழ் நிறுவன அதிகாரத்தை நோக்கி மாற்றுப் பார்வைகளையும், புதிய கனவுகளையும் உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் கோட்பாடுகளுக்கான அமைப்பு வடிவமாகவே திமுக உருவாக்கப்பட்டது. எனவேதான், திமுகவில் நடக்கும் அதிகார மாற்றங்கள், தேர்தலுக்காக இயங்கும் வாக்கரசியல் கட்சியின் மாற்றங்கள் என்பதையும் தாண்டிய, தமிழ் நிறுவன அதிகாரத்தோடு (Institutional power of Tamil People) சேர்ந்து பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கிறது.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அண்ணாவின் சமகாலத்தில் அவரோடு இயைவான வளர்ச்சி கண்ட கருணாநிதி வசம் திமுக வந்தது. அண்ணாவின் கனவுகளுக்கு ஈடாக நிறுவன அதிகாரத்தைச் செயல்படவைக்கும் ஆற்றல் கருணாநிதியிடம் இருந்தது.

தனிப்பட்ட வகையிலும், கருணாநிதி தன் அரசியல் விதியாட்டங்களின் மையமாக ‘அமைப்பை மையப்படுத்திய அரசியல்' என்பதைத்தான் வரித்துக்கொண்டார். ஒரு தேர்தல், ஒரு கூட்டணி, ஒரு சந்தர்ப்பம், ஒரு முன்னேற்றம், ஒரு வளர்ச்சி எனத் தற்காலிக இருப்புகளின் மீது தன் அரசியலைக் கட்டமைக்காமல், சமூகம் - இனம் - சித்தாந்தம் - இயக்கம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பின் இயக்கத்தோடு தன் அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் கருணாநிதி. அதனால்தான், கருணாநிதி மீதான விமர்சனங்களும் இதே தளத்தில் இருந்து எழுந்தன.

மொத்த சமூக அமைப்பின் மீது கருணாநிதிக்கு இருந்த பிரக்ஞையால்தான், அரசியலதிகாரம் அவரிடம் கிடைத்தபோது அவர் அமைப்பைத் திருத்துபவராகவும், புதிய நிறுவனங்களை உருவாக்குபவராகவும், மாற்றங்கள் செய்பவராகவும் இருந்தார்.

கருணாநிதி வளர்ந்த காலம், உருவாகி வந்த பின்புலம், சந்தித்த அடக்குமுறைகள், நெருக்கடிகள் அவருக்கு இத்தகைய ஓர் ஆளுமையைச் சாத்தியப்படுத்தியது. தன் அனுபவங்களின் வழியாகவும், தன் காலகட்ட அரசியல் போக்குகளுக்கான எதிர் ஊழ் ஆகவும் கருணாநிதி பெற்ற ஆளுமை, திமுக என்ற கட்சியைத் தாண்டி, தமிழ் நிறுவன அதிகாரத்தையும் சேர்ந்தே பாதித்தது.

கருணாநிதிக்கு அடுத்தநிலையில் அமைப்பைப் பற்றிய புரிதல்கள் கொண்ட திராவிட இயக்கத் தலைவர்கள் என்றால், மத்திய - மாநில அரசுகளின் உறவுச்சிக்கல்கள் போன்ற பேரதிகார இயல்பின் நுணுக்கங்களை அறிந்த முரசொலி மாறன், கிராம நிர்வாக அமைப்புகள் போன்ற அடித்தள அதிகாரத்தின் செயல்நுட்பங்களை அறிந்த கோ.சி.மணி, தலைமைக்கும் கிளை அமைப்புகளுக்குமான உறவு இடைநிலைகளை அறிந்த ஆற்காடு வீராசாமி போன்றவர்களை அவர்களின் பங்களிப்புகளின் வழியாக மிக முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம்.

கருணாநிதிக்கு நெருக்கமான தலைமுறையில் கிடைத்த அசல்கள் இவர்கள். திமுக என்கிற அமைப்பு உருவாகி வளர்ந்த காலகட்டத்தில், கிளை அமைப்பு உருவாக்கம் முதல் - மாவட்ட அமைப்பு உருவாக்கம் வரை நேரடியாகக் கண்டு, அதில் ஈடுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. ‘நிறுவன அதிகாரம்’ குறித்த இத்தலைவர்களின் புரிதலுக்கு அவர்களுக்குக் கிட்டிய இவ்வாய்ப்பும், அதன் காலச்சூழலுமே மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் ஸ்டாலின் பிரதானமானவராக உருவெடுத்து இன்று தலைமையில் இருக்கிறார். மிக முக்கியமாக கருணாநிதிக்கு அடுத்த தலைமுறையில், கட்சிக்குள் இளைஞர் அணி போன்ற ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்கி ஸ்டாலின் வளர்த்தெடுத்ததைப் போல, வேறு யாராலும் இன்னொரு அமைப்பு உருவாக்கப்படவில்லை.

இத்தகைய ஒரு வெகுஜன அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, கருணாநிதியின் மகன் என்ற இயற்கையான அரசியல் வாய்ப்பை கழித்துவிட்டுப் பார்த்தாலும், காலந்தோறும் மாற்றங்களைச் சந்தித்து வரும் தமிழ் நிறுவன அதிகாரத்தை பாதித்த நபர்களில் ஒருவராகவே ஸ்டாலின் இருக்கிறார். எனில், ஸ்டாலினின் ஆளுமை உருவாக்கம் எப்படி நடந்தது? ஸ்டாலினின் ஆளுமை என்ன விளைவுகளை உருவாக்கக்கூடும்?

கவர்ச்சிவாதத்துக்கு எதிர் திசையில்

திமுக என்கிற கட்சி உருவாக்கப்பட்டு, அக்கட்சிக்குள் நடந்த மிக முக்கியமான அமைப்பு மாற்றம் என்பது 1982இல் உருவாக்கப்பட்ட இளைஞர் அணி உருவாக்கமே. ஏன்?

இளைஞர் அணி உருவாக்கத்தின் மூலம், அமைப்பு மைய அரசியல் இயக்கத்துக்குள் ஸ்டாலின் தன்னை இணைத்துக்கொண்ட காலத்தின் ஒருமுனையில் மிக வலுவான கவர்ச்சிவாத அரசியல் தமிழ்நாட்டில் மையம் கொண்டிருந்தது. இந்தக் கவர்ச்சிவாதத்துக்கு எதிர் உணர்வைக் கட்டமைக்க, எதிர்முனையிலிருந்த கொள்கைவாத அரசியல் தரப்புகள், சிறு சிறு அமைப்புகள், மார்க்ஸிய வாத அமைப்புகள் அனைத்துமே அதிதீவிரத்தன்மையைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. ஆனால், இந்த அமைப்புகள் ஏதும் தேர்தல் செல்வாக்கு கொண்டவை அல்ல. மாறாக, கவர்ச்சிவாத அரசியலின் வலுமுனையாக இருந்த அதிமுக ஒரு முற்றான தேர்தல் இயந்திரமாக தன்னை நிறுவியிருந்தது.

மிகக் கடுமையான சமூக பண்பாட்டு விளைவுகளை உருவாக்கக்கூடிய கவர்ச்சிவாத அரசியலை கையில் வைத்திருந்த அதிமுக, எந்தவிதமான பண்பாட்டுச் செயல்பாடும் இல்லாமல் தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் இச்சவாலை எதிர்கொள்ள வேண்டிய இடத்திலிருந்தது திமுக. ஆனால், திமுகவோ தமிழ்ப் பண்பாட்டு அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாக்கரசியல் கட்சி. திமுகவின் இயல்புக்கு முரணாக எழுந்த இச்சவாலை ஈடுகட்டவும், முற்றான தேர்தல் இயந்திரமாக இருந்த அதிமுகவுக்கு ஈடுகொடுத்து கட்சியை மீள்கட்டமைக்கவும் திமுகவின் இளைஞரணியே மிக முக்கிய செயல்முனை ஆனது. 90களுக்குப் பிறகு திமுகவில் அதிகாரத்துக்கு வந்த பல மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற வாய்ப்புகளைப் பெற்றவர்களில் பலர் இளைஞர் அணியைச் சார்ந்தவர்களே.

இப்படி களத்தில் திமுகவின் தேர்தல் இயக்கத்தை விரிவுபடுத்தும் வலுவான களப்பணியாளர்களை உருவாக்கும் இடமாக இளைஞர் அணி தகவமைத்துக் கொண்டது. மிக நுணுக்கமாக அணுகினால், திமுகவுக்குள் நிகழ்ந்த செயல் தலைகீழாக்கம் இது.

ஏனெனில், திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே திராவிட நாடு கோரிக்கை, மாநில சுயாட்சி முழக்கம், தமிழர்களுக்கான புத்துலக கனவுகள் என மிகத் தீவிரமான கொள்கைவாதத்தை முன்வைத்தே தனக்கான தொண்டர் பட்டாளத்தை உருவாக்கியது. கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இத்தொண்டர் பட்டாளத்தை வைத்தே தேர்தலை திமுக எதிர்கொண்டது. மாறாக, ஸ்டாலின் இயங்கத்தொடங்கிய காலத்தில் தேர்தல் இயக்கத்தை முழுமைப்படுத்தும் செயல்வீரர்களை கொள்கை உணர்வுடன் சேர்த்து உருவாக்க வேண்டிய இடத்துக்கு திமுக வந்திருந்தது. அது முதல், கவர்ச்சிவாதத்தை ஈடுகட்டும் கொள்கை பிரச்சாரத்தை தங்கள் இலக்காகக்கொண்டு செயல்பட்டாலும், அதன் இறுதிப் பயன் என்பது தேர்தல் அரசியல் வெற்றிக்கானது என திமுக தன் இயல்பைத் திருத்திக்கொண்டது. கண்ணுக்குப் புலப்படாமல் நடந்த இந்த அணுகுமுறை தலைகீழாக்கமே, ஸ்டாலினின் ஆளுமையை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஆட்சியியலும் அரசியலும்

தீவிரமான கொள்கை அடிப்படை கொண்ட சமூக வளர்ச்சியையே, அரசின் பொருளாதாரச் செயல்பாடாக திமுக கருதிவந்தது. 1967இல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு செய்த மாற்றங்கள் அனைத்துமே கொள்கை அடிப்படையிலானவை. ‘மாநில இறையாண்மை’ என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட மாநில அரசுக்கான அமைப்புகள், பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளை அமலாக்கும் வகையிலான சமூக திட்டங்கள் போன்றவற்றையே பொருளாதாரச் செயல்பாட்டின் ஆதாரமாகக் கொண்டிருந்தது திமுக.

ஆனால், எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபிறகு, தன் கவர்ச்சிவாத அரசியலுக்கு ஏற்றவகையில் அரசின் செயலூக்கத்தை மாற்றினார். இயக்கத்தின் கொள்கை அடிப்படையிலான அரசின் செயல்பாடு என்பது, அரசின் தலைவரான எம்ஜிஆரின் ஆளுமைக்கு ஏற்றவகையில் கவர்ச்சியான நலத்திட்டங்களாக உருமாற்றப்பட்டன. இந்த நலத்திட்டங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகளுக்கு மத்தியிலேயே தன் கட்சிக்கான ஓர் அமைப்பை ஸ்டாலின் வழிநடத்த வேண்டியிருந்தது.

அதிகாரத்தை இழந்திருந்த திமுகவுக்குள் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், பின்புலமற்ற சாமானியர்களைக் கட்சி அதிகாரத்துடன் இணைக்கவும் திமுகவுக்கு இவ்வமைப்பே பெரிதளவில் கைகொடுத்தது. இளைஞர் அணி என்ற அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, அதிகார பகிர்ந்தளிப்பு, உறுப்பினர் சேர்க்கை போன்றவற்றின் வழியாக நிறுவன அதிகாரத்தின் செயல்விளைவுகளை (Actional effects of institutional power) அறிந்துகொண்டிருக்கிறார். இதன் வழியாகவே அமைப்பு மைய அரசியலைச் செய்யத் தெரிந்தவராக தன்னை மாற்றிக்கொண்டார். ஆனால், இளைஞரணியின் பிரதான இலக்கு தேர்தல் எந்திரமான அதிமுகவை முறியடிப்பதுதான். எனவே, சமூக அமைப்பு - அரசியலதிகார அமைப்பு இரண்டுக்குமான உறவில் இயங்கும் வாய்ப்பே தேர்தல் அரசியல் வழியாக மட்டுமே அவருக்குக் கிடைத்தது. இது ஸ்டாலினுக்கு முந்தைய தலைமுறை திமுக தலைவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்கு முரணானது.

ஏனெனில், அதற்கு முந்தைய தலைமுறை என்பது ஆரிய - சனாதன எதிர்ப்பு அரசியல், தமிழ்த் தேசிய பொருளாதார நலன் போன்ற பெருங்கனவுவாதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது. கருணாநிதி தொடங்கி, அவருக்குக் கீழ் இருந்த திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் ஆளுமை மரபும் இவற்றை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. கருணாநிதியின் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளாக இருந்த வைகோ உள்ளிட்டோரும் இம்மரபை மீற முடியாத வட்டத்துக்குள் இருந்தே செயல்பட்டனர். திமுகவுக்குள் இப்பெருங்கனவுவாத அரசியல் மரபின் மீதான ஓர் உடைசல் ஸ்டாலின்.

எனில், ஸ்டாலின் காலத்து அரசியலின் கனவுவாதம் எதைச் சார்ந்தது?

சீர்திருத்த மரபில் வளர்ச்சி அரசியல் போக்கு

பொதுவாக, திமுக போன்ற சீர்திருத்த மரபுக் கட்சிகளில் வளர்ச்சி அரசியலைப் பிரதானப்படுத்தும் தலைவர்கள் உருவாகுவது இயல்பு முரண்.

ஏனென்றால், நடைமுறையில் நாம் கடைப்பிடிக்கும் பொருளாதாரம் சமூக சீர்திருத்தத்துக்கும் - சமூகநீதிக்கும் நேர் எதிர்திசையில் செயல்படுவது. ஆனால், ஸ்டாலின் அடிப்படையில் வளர்ச்சி அரசியலில் நாட்டம் கொண்டவர். மிக எளிமையாக சொன்னால், ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் மாதிரி வளர்ச்சியில் ஈர்ப்பும் நாட்டமும் அதிகம். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அதன் வழியே உருவாகும் தன்னிறைவு பெற்ற சமூக சூழலைக்கொண்டே சமத்துவ லட்சியங்களை உருவாக்கும் ‘மக்கள் நல்வாழ்வு’ அரசியலே ஸ்டாலின் காலத்து அரசியலின் முக்கியமான கனவுவாதம்.

மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்து ஸ்டாலின் செய்த பணிகள் இத்தகைய ‘மக்கள் நல்வாழ்வு’ கனவுவாதம் சார்ந்தவையே. அமைப்பைச் செயல்பட வைத்தால்தான் காரியமாகும் - அமைப்பை அதற்கான ஒழுங்கிசையோடு செயல்பட வைப்பதுதான் இருப்பதிலேயே கடினமான பணி என்கிற புரிதலை தன் அனுபவங்களின் வாயிலாகக் கற்றுக்கொண்ட ஸ்டாலின், அதையே தன் அரசியலின் முதன்மைத் தன்மையாகவும் ஆக்கிக்கொண்டார். இந்த இயல்புகளோடு உருவான ஆளுமையோடே அவர் தமிழ் நிறுவன அதிகாரத்தின் முக்கிய கூறான திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.

பகிர்ந்தளிக்கும் ஒற்றைத்தலைமை

கள அரசியலில், 2011க்குத் தேர்தலுக்குப் பிறகு பிம்ப ரீதியாகவும் - அரசியல் வெற்றி ரீதியாகவும் தன் வாழ்வின் உச்சத்துக்கு ஜெயலலிதா வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு எதிரான நேரடி அரசியல் போட்டியாளராக ஸ்டாலின் தன்னை நிறுவ வேண்டிய நேரம் அது. எம்ஜிஆர் யுகத்தின் விளைவுகளோடு ஸ்டாலின் பெற்ற அனுபவங்கள் ஜெயலலிதாவுக்கு எதிரான போட்டியில் அவருக்குக் கைகொடுத்தன.

குறிப்பாக, 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு கோஷ்டி பூசல்களால் அழுகிக்கொண்டிருந்த திமுக அமைப்பைத் திருத்தும் பணிக்காக, ஊர் ஊராகச் சுற்றி கட்சி வளர்க்க வேண்டிய தேவையை ஸ்டாலினுக்கு உணர்த்தியது. 2012 முதல் 2021 தேர்தல் காலம் வரை, கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுக் காலமாக திமுகவின் நிர்வாக அதிகாரத்தை முழுமையாக இயக்கும் செயல்தலைமையாக இருந்தவர் ஸ்டாலின் மட்டுமே. 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் என மூன்று பிரமாண்ட தேர்தல்களில் ஸ்டாலின் நிர்வாக லகானை முழுமையாக இயக்கியுள்ளார். இந்த 10 ஆண்டுக் காலத்தில் தேர்தல் வெற்றி - தோல்வி இரண்டும் அவருக்குக் கிட்டியுள்ளது. ஆனால், கவனிக்க வேண்டியது, இந்த வெற்றி - தோல்விகளுக்கு அப்பால் திமுக என்கிற அமைப்பை ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என்பதைத்தான்.

இந்த 10 ஆண்டுக் காலத்தில் பிரமிக்கத்தக்க அளவில் திமுகவின் கட்டமைப்பு புனரமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மாவட்ட அமைப்புகளாக இருந்த திமுக, இன்று சுமார் 75 மாவட்ட அமைப்புகளாகத் தளர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட அமைப்புகளின் எண்ணிக்கையில் நடந்திருக்கும் இத்தளர்வு சாதாரணமானதல்ல. ஏனெனில், திமுகவின் கட்டமைப்பே நிறுவப்பட்ட இரண்டாம்கட்டத் தலைமைகளின் அணிசேர்க்கைதான். தலைமைக்கு நிகரான செல்வாக்கு கொண்ட உள்ளூர் தலைமைகள் ஒவ்வொரு மண்டலத்திலும், மாவட்டத்திலும் இருந்திருக்கின்றன. இந்தச் செல்வாக்குத் தலைமைகளின் அதிகாரப் போட்டியின் வழியாகவே, திமுகவின் நிறுவன செயல்பாடு இருந்திருக்கிறது.

ஆனால், மாவட்ட அமைப்பு தளர்வில் நடந்திருக்கும் மாற்றம் செல்வாக்குத் தலைமைகளைக் கரைத்திருக்கிறது. தனிப்பட்ட செல்வாக்கின் நோக்கங்களுக்காக இயங்குவதை ஒடித்து, தலைமையின் செயல்தளத்துக்கு கட்டுப்பட்ட அமைப்புகளாக அவை மாற்றப்பட்டுள்ளன. மாவட்ட அமைப்பு தளர்வுகளைத் தாண்டி, கிளை அணி உருவாக்கங்கள், அதற்கான நிர்வாகப் பொறுப்புகள் எனப் பலவகையிலும் திமுகவில் அதிகார பகிர்ந்தளிப்புக்கான கட்டமைப்புத் திருத்தம் நடந்திருக்கிறது. திருத்தப்பட்ட இக்கட்டமைப்பின் பதவிகளை, புதியவர்களைக் காட்டிலும், வாரிசுகளும், மிக நீண்டகாலமாக அதிகாரத்தோடு தொடர்பில் இருந்தவர்களுமே பெற்றிருக்கிறார்கள். ஆனாலும், இத்தளர்வுகள் மூலமாக நடந்திருக்கும் அதிகாரப் பரவலாக்கம் திமுகவின் இறுக்கத்தன்மையைக் குறைத்திருக்கிறது. ஒரு வாக்கரசியல் கட்சிக்குத் தேவையான நெகிழ்வுத் தன்மை (Liberal outfit) திமுகவில் கூடியிருக்கிறது. ஆனால், இன்னொருபுறம் இந்நெகிழ்வுத்தன்மை திமுகவின் லட்சியவாத வீரியத்தை களத்தில் மட்டுப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இந்த மட்டுப்படுத்தல்களை மீறி, லட்சியவாதத் தன்மையைத் தக்கவைக்கும் சுமை, ‘ஒற்றை வழிநடத்து தலைமை’யையே சாரும்.

அண்ணா இறந்தபிறகே, பொதுச்செயலாளர் என்ற கூட்டியக்கத் தலைமைக்கு மேலாக, 'தலைவர்' என்கிற ஒற்றை வழிநடத்தும் தலைமை அதிகாரத்தை திமுக உருவாக்கிவிட்டது. என்றாலும், கருணாநிதி கால திமுக, ஒரு கூட்டியக்கத் தலைமையாகவே செயல்பட்டது. காரணம், மிக நீண்டகாலமாக திமுகவில் கோலோச்சிய மண்டல அளவிலான செல்வாக்குத் தலைமைகள். ஆனால், மாவட்ட அதிகார அமைப்புகளில் செய்திருக்கும் தளர்வுகளின் மூலம் நெகிழ்வுத்தன்மைமிக்க ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கும் ஸ்டாலின், ‘ஒற்றை வழிநடத்து அதிகாரம்’ கொண்ட தலைமைத்துவத்தை நிறுவன அளவிலும் முழுமையாக நிறுவியிருக்கிறார். மிக முக்கியமாக, திமுக என்கிற அமைப்பைத் திருத்துவதன் மூலமாக, தன் ஆளுமையின் தன்மையை, கட்சியின் நிறுவன அதிகாரத்தோடு அவர் இணைத்துக்கொண்டுள்ளார். அதிமுகவின் தேர்தல் எந்திரத்துக்கு ஈடுகொடுக்கும் ஓர் அமைப்பை உருவாக்கும் நோக்கோடு தன் அமைப்பு அரசியலைத் தொடங்கிய ஸ்டாலின், தளர்வுபெற்ற மாவட்ட அமைப்புகள், பரவலாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பு என திமுகவை உருமாற்றியிருப்பதன் மூலம், தன் இலக்கில் வெற்றியடைந்திருக்கிறார் என வர்ணிக்கலாம்.

ஐரோப்பியவாத தாக்கத்தின் நீட்சி!

வளர்ச்சி மைய உணர்வுகளிலிருந்து வளர்ந்துவந்த ஸ்டாலின் தன் கனவு விரிவாக்கங்களை ஐரோப்பிய தேசங்களோடு இணைத்துக்கொண்டவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை, விருப்பங்கள், ரசனைகள் போன்றவைகளானாலும் சரி, அரசியல் செயல்திட்டங்களானாலும் சரி, அதில் ஐரோப்பியக் கருத்தாக்கத்தின் பாதிப்பு இருந்திருக்கிறது.

சென்னை மேயர் - தமிழ்நாடு துணை முதல்வர் என பொறுப்பு வகித்த காலங்களில் அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் அப்படியானவைதான். அதனால்தான் சென்னைக்குள் திமுகவின் முக்கிய வாக்கு வங்கியான பூர்வீகக் குடிகள் - குடிசைவாசிகளை புறநகரில் குடியேற்றுவது வாக்கு வங்கி அரசியலுக்கு நல்லதல்ல என்கிற விபரீதங்களைக் கருத்தில்கொள்ளாமல் நகரைச் சீர்படுத்தும் திட்டங்களை அவரால் செய்ய முடிந்தது. சென்னை மாநகருக்குள் திமுகவின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இதன் மறுபுறத்தில் ஸ்டாலின் சென்னையின் முகத்தை மாற்றி அமைத்திருந்தார். இன்றைக்கு சாதாரணமாக சென்னைக்குள் எங்கே நின்றாலும், அது ஸ்டாலின் காலத்து மாற்றங்களோடு தொடர்புடையதாகவே இருக்கிறது.

2015க்குப் பிறகு ஜெயலலிதா Vs ஸ்டாலின் அரசியல் மாறிய பிறகு, நாயகவாத பிம்ப அரசியல் செய்த ஜெயலலிதாவுக்கு எதிர்திசையில் ஐரோப்பிய பாணியிலான ‘மக்கள் நண்பன்’ அரசியலைக் கையில் எடுத்தார் ஸ்டாலின். ஜெயலலிதா உப்பரிகையைவிட்டு இறங்காமல், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்து, பொட்டல் வெயிலில் மக்களைச் சந்தித்தபோது, ஸ்டாலின் ஆட்டோவில் ஊர் சுற்றி, சைக்கிளில் பயணம் செய்து, பேருந்துகளில் செல்ஃபி எடுத்து, தெருக்கடையில் டீ குடித்து ‘நமக்கு நாமே’ என்றார். காட்சிப் பிரச்சாரங்களில் கடும் சரிவைச் சந்தித்திருந்த திமுகவுக்கு இம்மாற்றங்கள் பெருமளவில் கைகொடுத்தன. எம்ஜிஆரின் காட்சி பிம்ப அரசியலின் தாக்கங்களின் வழியே வளர்ந்துவந்த ஸ்டாலின் அதற்கு ஏற்ற பிரச்சார உத்திகளைக் கையாண்டது கவனிக்கத்தக்கது.

ஸ்டாலினின் இந்த மாறுதல் வளர்ச்சி விருப்பங்களுக்கும், நடைமுறை தேச பொருளாதார கொள்கைக்கும் உள்ள தொடர்புகள், ஸ்டாலினை திராவிட சித்தாந்தவெளிக்கு அப்பால் நின்று இயங்கும் ஒரு செயல்திட்டவாதியாகவே மக்கள் மனதிலும் நினைவிலும் நிறுத்தியது. ஜெயலலிதாவுக்கு நேர் எதிர்முகமாக அவர் செயல்படத் தொடங்கிய காலத்தில் அதன் முழுமையான வடிவத்தை உணர முடிந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தோடு அதிமுகவில் நாயகக் கவர்ச்சிவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட்டுத்தலைமையாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமான சூழல் என்ற பார்வை இருந்தாலும், வலுப்பெற்ற மண்டல தலைமைகள் அதிமுகவில் உருவாகி வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. அதிமுக தேர்தல் எந்திரத்தின் அச்சு விசையாக இருந்த நாயக கவர்ச்சிவாதம் வீழ்ந்திருக்கும் நிலையில், அந்நாயக கவர்ச்சிவாத தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்ட ஸ்டாலினின் தலைமைத்துவம் இனி என்ன ஆகும்?

நாயகவாதமும், விளம்பர ஜனநாயகமும்

இந்துத்துவ நெருக்கடி, வடக்கு இந்தியா - தெற்கு இந்தியா முரண்கள், இன தேசிய எழுச்சி என சித்தாந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்விவாதமாகி இருக்கும் திராவிடச் சித்தாந்தத்துக்கு இது ஒரு மறுமலர்ச்சி காலம். திமுகவின் நாடாளுமன்ற வெற்றி, அந்த மீள்விவாதத்தின் வழியாகவே திமுக தன் தேர்தல் பாதையை அமைத்துக்கொள்வதற்கான சாத்தியத்தைக் காட்டியுள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றில் ஒரு தலைமுறை முடிவைச் சந்திக்கும் நிலையில், தாராளமயமாக்க யுகத்துக்கு ஏற்ப கிராம - ஊரக - நகர்புற இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவதே ஸ்டாலின் தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான செயல்களமாக இருக்கும்.

ஆனால், அதிகாரவாசமே அறியாத, கட்சியிலோ - அரசாங்கத்திலோ - அரசு ஊழியத்திலோ கூட எந்தவிதமான பதவியை அனுபவிக்காத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் திமுகவை தங்களுக்கான புகலிடமாக கருதுவதில் இன்னமும் தயக்கம் நீடிக்கிறது. வாரிசு அதிகாரம் ஓங்கியிருக்கும் கட்சி என்ற பிம்பம், அதிகாரப் பின்புலமற்றவர்கள் திமுகவிற்கு தங்கள் பங்களிப்பைத் தர வருவதில் ஒரு கூச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிகார வாசமே அறியாத எளிய பின்னணியைச் சேர்ந்தவர்களின் ஆற்றலை, திமுகவின் அதிகாரக் கட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலமே இதை ஈடுகட்ட முடியும். இல்லையென்றால், பழைய நாயகவாதத்தை ஈடுசெய்யும் வகையில் உருவாக்கப்படும் டிஜிட்டல் யுக விளம்பர ஜனநாயக உத்திகளுக்கு, இந்த எளிய பின்னணியைச் சேர்ந்தவர்களின் ஆதரவையும், ஆற்றலையும் பலிகொடுக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில், கட்சி பொறுப்புகளின் அதிகாரம் என்பது, வெறும் அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, சமூக அதிகாரமும்கூட. கட்சி அதிகாரத்துக்குள் நடக்கும் இம்மாற்றம் தாராளமயமாக்க சமூகத்திற்கான அதிகாரப் பங்கீட்டுக்கான தேர்ந்த சமூகநீதி உத்தி. கட்சியின் வெற்றிகளுக்கு சேதாரம் ஏற்படுத்தாமல் தான் விரும்பும் இந்த நல்லியல்பு மாற்றங்களைச் சாதித்து முடிப்பதில்தான் ஸ்டாலினின் தலைமைத்துவம் முழுமையடையும்.

கட்டுரையாளர் : விவேக் கணநாதன்

ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர், சாதி, மதம், பண்பாடு, சினிமா, மானுட உளவியல் சித்தாந்தங்கள் குறித்து எழுதிவருகிறார்.

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 28 பிப் 2021