மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

டிஜிட்டல் திண்ணை: பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தைச் சந்தித்த அமைச்சர்கள் - பின்னணி என்ன?

டிஜிட்டல் திண்ணை: பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தைச் சந்தித்த அமைச்சர்கள் - பின்னணி என்ன?

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“அதிமுக கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இடம்பெற்றாலே யாருக்கு முதல் மரியாதை என்ற பிரச்சினை கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. நேற்று (பிப்ரவரி 27) பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்த திடீர் அறிவிப்பு தேமுதிகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே, ‘கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்கி தொகுதிகளை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்று தேமுதிக சார்பில் பிரேமலதா தொடர்ந்து கூறி வந்த நிலையில்... நேற்று முன்தினம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவித்த கையோடு, நேற்று பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கி அறிவிப்பைச் செய்தது அதிமுக.

இந்த நிலையில் ராமதாஸை மூன்று முதல் நான்கு முறை சந்தித்த அதிமுக அமைச்சர்கள் விஜயகாந்தை ஒருமுறைகூட சந்திக்கவில்லையே என்று அதிமுக தலைமை மீது பிரேமலதா கோபத்தில் இருந்த நிலையில்தான் நேற்று பிரேமலதா சென்னையில் இல்லாத நிலையில், திடீரென விஜயகாந்தைச் சென்று சந்தித்துள்ளனர் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் 2020 டிசம்பர் 22ஆம் தேதி, மாலை அமைச்சர் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் இருவரும் கூட்டணியைப் புதுப்பித்துக் கொள்ள சந்தித்தனர்.

டிசம்பர் 25ஆம் தேதி, தேமுதிக தலைவர் வீட்டுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி மற்றும் தங்கமணி போவதாகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென மற்ற வேலைகள் காரணமாக விஜயகாந்த் சந்திப்பு திட்டத்தை மாற்றிவைத்து விட்டார்கள். ஆனால் அதன்பின் மீண்டும் 2021 ஜனவரி 30ஆம் தேதி, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அமைச்சர் வேலுமணி தலைமையில் மூன்று அமைச்சர்கள் சந்தித்தார்கள். மேலும் ராமதாஸோடு சில முறை அமைச்சர்கள் சந்திப்பு நடந்தது. அதன்பின் சென்னையில் தங்கமணி வீட்டிலும் பாமக, அதிமுக பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள்.

ஆனால், இது மாதிரியான சந்திப்புகளை, பேச்சுகளை ஏன் தேமுதிகவோடு அதிமுக நடத்தவில்லை என்ற கோபத்தில் இருந்தார் பிரேமலதா. இந்தப் பின்னணியில்தான் பிரேமலதாவின் அனுமதியோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேமுதிக மாசெ அனகை முருகேசன், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். சில மாவட்டங்களில் இருக்கும் பாமகவுக்குக் கொடுக்கும் மரியாதையை தமிழகம் முழுதும் பரவியிருக்கும் தேமுதிகவுக்கு, அதிமுக ஏன் கொடுக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இந்தச் சூழலில் 27ஆம் தேதி, காலையில் விஜயகாந்த் வீட்டுக்குத் தொடர்புகொண்ட அமைச்சர் தங்கமணி, ‘இன்று மாலை கேப்டனை பார்க்க வருகிறோம்’ என்று தகவல் கூறியுள்ளார். பத்து நிமிடங்கள் கழித்து விஜயகாந்த் வீட்டில் இருந்து தங்கமணிக்கு மீண்டும் பேசியவர்கள், ‘நீங்கள் வாருங்கள். ஆனால் அண்ணி (பிரேமலதா) இன்று கள்ளக்குறிச்சியில் நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். அதனால் அவர்கள் இருக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளனர். பிரேமலதாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவர், ‘அமைச்சர்கள் வந்து கேப்டனை சந்தித்துவிட்டுச் செல்லட்டும். நான் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வர முடியாது’ என்று சொல்லிவிட்டார்.

சொன்னதுபோலவே அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் விஜயகாந்தை சென்னையில் சந்தித்துக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி விஏஎஸ் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் பிரேமலதா.

சுமார் 1500 பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, ‘நேற்று தேர்தல் அறிவிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்காகத்தான் முதலில் கூட்டணியை முடிவு செய்யுங்கள் என்றேன், உடனே கூட்டணிக்காக அங்கும் இங்கும் செல்கிறார்கள் என்றும் நாம் ஏதோ கெஞ்சுகிறோம் என்று மீடியாக்கள் செய்திகள் பரப்பினார்கள். தேமுதிகவை வளரவிடாமல் அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிபார்க்கிறார்கள்.

நாம் தனியாக நின்றாலும் 234 தொகுதிகளிலும் 10% சதவிகிதம் வாக்குகள் குறையாமல் வாங்குவோம், இருந்தாலும் கட்சியில் பொருளாதாரம் இல்லாததால் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் தலைவரிடம் கூறியதால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். பொறுத்திருப்போம் காலம் வரும், வாக்கு வங்கியை நிரூபிப்போம், நாம் ஆட்சியை அமைப்போம். ஒரு சதவிகிதம்கூட தன்மானத்திற்கு இழப்பு வருமானால் தொண்டர்களைத் தலைகுனியவைக்க விடமாட்டோம். நிச்சயம் தனித்து போட்டியிடுவோம். தலைமையில் இருப்பவர்களுக்குத் தெரியும். நான் எப்போதும் தனித்து போட்டியிடுவதுதான் விரும்புவேன் என்று. ஆனால் நம்மிடம் பொருளாதாரம் இல்லை’ என்று பிரேமலதா கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்.... சென்னை விஜயகாந்த் வீட்டுக்கு அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.பி. கே.பி.முனுசாமி மூவரும் சென்றார்கள். தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி இருவரும் வரவேற்றுப் பேசினார்கள்.

கூட்டணியைப் புதுப்பிக்கும்விதமாக கேப்டனை அழைத்து உட்காரவைத்து அமைச்சர்கள் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். சுதீஷிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயங்களை மூவரும் சொல்லியுள்ளார்கள். இடையில் சுதீஷ் செல்போனை எடுத்துக்கொண்டு உள்ளேயும் வெளியிலும் போய்விட்டு வந்தவர் 'அக்கா லைன் கிடைக்கவில்லை மீட்டிங்கில் பேசிட்டு இருக்காங்க’ என்று கூறியுள்ளார். மேடத்திடம் தகவல் சொல்லுங்கள். அடுத்து எப்போது பேசலாம் என்று சொல்லுங்கள் என்று கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 28 பிப் 2021