மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

அமித்ஷாவின் அரசியல் ஆட்டம் : முளைக்கும் மூன்றாவது அணி!

அமித்ஷாவின் அரசியல் ஆட்டம் :  முளைக்கும் மூன்றாவது அணி!

திமுக திருப்பித்தாக்குமா?

முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டுப் போய்விட்டார் பிரதமர் மோடி: அடுத்து அமித்ஷா வந்திருக்கிறார். கோவையில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், மோடி வெளுத்து வாங்கியது திமுகவைத்தான். அமித்ஷா தமிழகத்தில் சந்திக்கப்போகும் பலரும் திமுகவுக்கு எதிரான அவருடைய அதிரடி வியூகங்களைச் செயல்படுத்தும் கருவிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள் என்பதுதான் தமிழக அரசியலை இப்போது பரபரப்பு விவாதமாகக் கிளம்பியிருக்கிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் தேர்தல் வியூகம் எப்படியிருக்கிறது என்பதை அகில இந்தியாவே ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அமித்ஷாவின் அரசியல் சதுரங்கம் எல்லா மாநிலங்களிலும் வென்றது. தமிழகத்தில் தலைகீழாகிவிட்டது. அதனால்தான் இந்த முறை வேறுவிதமான வியூகத்துடன் பாரதிய ஜனதா களமிறங்கியிருக்கிறது. இதை விளக்கும் வகையில், ‘திமுகவை வீழ்த்த ரூ.5,000 கோடி பாஜக பட்ஜெட்: விழுமா விக்கெட்?’ என்ற தலைப்பில், தமிழகத்தில் கமல் தலைமையில் மூன்றாவது அணியை அமைக்க பாரதிய ஜனதா கடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது என்று மின்னம்பலத்தில் நேற்றுதான் விலாவாரியாக எழுதியிருந்தோம்.

இந்த கட்டுரை வெளியான ஒரே நாளில், தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையில், நாம் பெயர் குறிப்பிடாமல் ஒரு கட்சியை கூட்டணியை விட்டு வெளியேறுவதற்காக தீவிர முயற்சி நடக்கிறது என்று கூறியிருந்தோம். நாம் சொன்னதைப் போலவே, இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, பல விஷயங்களையும் உறுதிப்படுத்திவிட்டார். அத்துடன் நாம் எழுதியதைப் போலவே மூன்றாவது கூட்டணியை அமைப்பதற்கான வேலைகளும் இன்று காலையிலிருந்தே வேகமெடுத்து விட்டன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக தோல்வியைத் தழுவவும் அதிமுக ஆட்சியில் தொடரவும், விஜயகாந்த்தை முதல்வராக முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி பிரித்த வாக்குகள்தான் காரணமாக இருந்தன. அதே பாணியில் இப்போது கமலை முதல்வராக முன்னிறுத்தி மூன்றாவது அணியை உருவாக்கி, திமுகவை மீண்டும் வீழ்த்துவதற்கு முயற்சி நடக்கிறது என்பதையும் பல கட்டுரைகளில் நாம் எழுதி இருக்கிறோம். நாம் சொன்னதைப் போலவே தமிழக அரசியல் களத்தில் காய்கள் நகர்கின்றன.

அதிமுக கூட்டணியில், மக்களிடம் வாக்குகளை ‘வாங்கும்’ பொறுப்பை, அதிமுகவிடம் விட்டுவிட்டு, திமுகவை பலவீனப்படுத்தும் வேலைகளை பாரதிய ஜனதா செய்யத் துவங்கி விட்டது. அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குத் தருவதற்கான ‘அனைத்தும்’ மாவட்டந்தோறும் ஏற்கெனவே பிரித்து அனுப்பப்பட்டு பத்திரமான இடங்களில் இருக்கின்றன. ஆனால் திமுகவுக்கு தேர்தல் செலவுக்காக வந்து சேர வேண்டிய தொகை எதுவும் போய்ச் சேருவதற்கு முன்பே, அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுபற்றியும் ‘தேர்தல் தேதி அவசரமாக அறிவிப்பு: திமுகவுக்கு வைத்த ஆப்பு’ என்று மற்றொரு கட்டுரையிலும் விளக்கியிருக்கிறோம். தமிழக அரசியல் அரங்கில் மின்னம்பலம் சுட்டிக்காட்டும் பல விஷயங்கள் அப்படியே நிகழ்வதைப் போலவே, மூன்றாவது அணி அமைக்கும் வேலையும் நடந்து வருகிறது.

இந்த அணி எந்தளவிற்கு ‘ஒர்க் அவுட்’ ஆகும், பாரதிய ஜனதா எதிர்பார்த்தபடி, ஆளும்கட்சிகளுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், இந்த மூன்றாவது அணிக்குச் சென்று திமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளைப் பிரிக்குமா, அதனால் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இதெல்லாம் எந்தளவிற்கு சாத்தியம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, முயற்சிகளைத் தொடர்வதில் பாரதிய ஜனதா உறுதியாக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளை அறிந்த அக்கட்சிக்கு நெருக்கமான ஓர் இந்து அமைப்பின் நிர்வாகி நம்மிடம் இது தொடர்பான பல விஷயங்களையும் விளக்கினார்...

‘‘அதிமுகவின் வாக்கு வங்கியையும், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளால் பயனடைந்த மக்களின் வாக்குகளையும் அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாங்க வேண்டுமென்பதுதான் அதிமுக தலைமைக்கு பாரதிய ஜனதா மேலிடம் கொடுத்துள்ள உத்தரவு. திமுகவை பணரீதியாகவும், மனரீதியாகவும் பலவீனப்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பதுதான் அவர்களுக்குத் தரப்பட்டுள்ள உறுதி.

ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைப்பது, திமுகவையும் திமுக கூட்டணியையும் உடைப்பது போன்ற முயற்சிகள் பெரிதாக பலன் தரவில்லை. அதனால்தான் இப்போது கமல் தலைமையில் மூன்றாவது அணியை அமைக்கும் வேலைகளை வேகப்படுத்தியிருக்கிறோம். கமல் கட்சிக்கு நகர்ப்புறங்களில் ஓரளவு வாக்குவங்கி இருக்கிறது. அவருடன் மேலும் சில கட்சிகளைச் சேர்த்தால் தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாக்குகளைப் பிரிக்கலாம் என்பதுதான் பாரதிய ஜனதாவின் திட்டம். அப்படிப் பிரித்துவிட்டால் நிச்சயம் திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிடலாம் என்பது கணக்கு.

ஏற்கெனவே பாரிவேந்தரை திமுக கூட்டணியிலிருந்து வெளியே கொண்டுவந்தாகிவிட்டது. அடுத்ததாக ஒரு சாதிக்கட்சியை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. பாரி வேந்தர், கமலுடன் விரைவில் இணைந்துவிடுவார். சரத்குமார் வந்து சேர்ந்துவிட்டார். டிடிவி தினகரன், சீமான் இருவருடனும் பேசியாகிவிட்டது. இவர்களைத் தவிர்த்து, மு.க.அழகிரியை வைத்து ‘கலைஞர் திமுக’ ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தையும் பல கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவிலேயே அவரும் வழிக்கு வந்துவிடுவார் என்று நம்புகிறோம். இவர்கள் அனைவரும் சேர்ந்தால் அந்த மூன்றாவது அணி பெரும்பலமுள்ள அணியாகிவிடும். நிச்சயமாக திமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை இந்த கூட்டணி கண்டிப்பாக திசை மாற்றிவிடும். அதில் அதிமுக–பாரதிய ஜனதா கூட்டணி மறுபடியும் ஜெயிக்கும். இதுதான் பாரதிய ஜனதா தலைமை வகுத்துள்ள ‘ஆபரேஷன் தமிழ்நாடு’ திட்டம். ஒரு வாரத்துக்குள் இந்த காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும்!’’ என்றார்.

அமமுக முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரனை முன்மொழிந்து, கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதற்கு அவர் ஒப்புக்கொள்வாரா என்று அமமுக மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘அதற்கு வாய்ப்பேயில்லை என்றுதான் தோன்றுகிறது. பாரதிய ஜனதா சொல்வதற்காக மூன்றாவது கூட்டணியில் அவர் இணையத் தயாராக இருந்தாலும் கமலை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டார். இப்போதைக்கு தேர்தல் கூட்டணியாக வைத்துக் கொண்டு, தேர்தலுக்குப் பின் அதை முடிவு செய்து கொள்ளலாம் என்பதுதான் அவருடைய நிலைப்பாடாக இருக்கும். ஆனால் மூன்றாவது அணியில் அமமுக இணைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது!’’ என்றார்.

இதையெல்லாம் திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று திமுக மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘எல்லாமே எங்களுக்கும் தெரியும். என்ன செய்ய முடியுமோ செய்யட்டும். நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள்!’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பலமுனை தாக்குதலைத் துவக்கிவிட்டது பாஜக...திமுக திணறப்போகிறதா, திருப்பி அடிக்கப்போகிறதா?

–பாலசிங்கம்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 27 பிப் 2021