மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

அமமுக கூட்டணி வெல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன்: டிடிவி தினகரன்

அமமுக  கூட்டணி வெல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன்: டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி காணொலிக் காட்சி முறையில் பத்து மையங்களில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் அரியணையில் தினகரனை அமர வைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை வட்டார நிர்வாகிகளுடன் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். மேலும் ஒன்பது மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபங்களில் வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களுடன் காணொலி மூலமாக பேசினார் டிடிவி தினகரன்.

“அம்மா  தொகுதியிலே நமக்கு வெற்றியைக் கொடுத்த குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் நமக்கு மீண்டும்  கொடுத்திருக்கிறது. கிளைக் கழகங்கள் வரை நமது கட்டமைப்புகளை பலப்படுத்தி தேர்தலுக்காக தயாராகியிருக்கிறீர்கள். நம் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் இந்த பொதுக்குழு அங்கீகாரம் அளித்திருக்கிறது.

அமமுக விருப்பமனு

இந்நிலையில் ஆர்வமுடன்  ஓர் அறிவிப்பு. 2021 தேர்தலுக்கு விருப்ப மனு பெறுவதற்கு மார்ச் 3 முதல்  10 வரை  அமமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை தலைமைக்கழகத்திலே விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்”என்று அறிவித்தார்.

தொடர்ந்த தினகரன், “இந்தத் தேர்தலில் அமமுகவின் தலைமையில் கூட்டணி வைக்க பல கட்சிகளுடன் பேசி வருகிறோம். நிச்சயம் கூட்டணி அமையும். அதேநேரம் திமுக என்ற தீய சக்தியை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வர விடக் கூடாது என்று அமமுக பாடுபட்டு வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். அதற்காக எந்த ஒரு தியாகத்தையும் அமமுகவை சேர்ந்தவர்கள் செய்வோம். தியாகம் என்றதும் சிலர் திரித்துவிடுவார்கள். உழைப்பைதான் நான் தியாகம் என்கிறேன்.

அண்ணன் பழனியப்பன் தான், இந்த இயக்கம் உருவாக முதல் காரணியாக இருந்தவர். நான் அப்படி ஒரு எண்ணம் கூட இல்லாதவனாக இருந்த நிலையில் நமக்கு ஒரு இயக்கம் வேண்டும், நமக்கு ஒரு சின்னம் வேண்டும் என்று யோசனை கூறி என்னை பல முறை வலியுறுத்தியவர் அவர்தான்.

என்னை நம்பி வந்தவர்களை ரோட்டிலே நிறுத்திவிட்டேன் என்கிறார்கள். அவர்கள் எல்லாம் கம்பீரமாக என்னோடு நின்று தோளோடு தோளாக நின்று இக்கட்சியை நடத்தி வருகிறார்கள். என்னோடு ரோட்டில் நிற்கிறார்கள் என்று பச்சாதாபப் படுபவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்...இந்த இயக்கம் உருவாகக் காரணமே அந்த 18 தியாகிகள்தான்.

நிர்வாகிகள் விலைபேசப்படுகிறார்கள்

இன்று நம் இயக்கத்தில் நிறைய பேர் விலைபேசப்படுகிறார்கள். கொங்கு மண்டலப் பொறுப்பாளர் சண்முகவேலுவை இன்று காலை வரை வந்துவிடுங்கள் வந்துவிடுங்கள் என்று பேசியிருக்கிறார்கள். நான் நியாயத்தின் பக்கம் நிற்பேன் என்று கொங்குமண்டலத்தின் சண்முகவேல், மாவட்டச் செயலாளர் சுகுமார் போன்றவர்கள் எனக்காக போராடுகிறார்கள். அங்கே நாம் ஒருவரை நிர்வாகியாக நியமிக்க முடிவு செய்தால் முதல் நாளே அவர் மிரட்டப்படுகிறார்.

.எந்த ஒரு கட்சியும் சந்திக்காத வினோதமான கஷ்டங்களை கொங்குமண்டலத்தில் நமது கட்சி சந்தித்து வருகிறது. சிலரை விலைபேசி விலைக்கு வாங்கப் பார்த்தார்கள், தூக்கிச் சென்ற நிர்வாகிகள் திரும்ப வந்துவிட்டார்கள். துரோகத்தால் எத்தனையோ  இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

என்னை நம்பி வந்த உங்களின் அரசியல் வளர்ச்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய டிடிவி தினகரன் தயாராக இருக்கிறான். நான் கனவிலும் ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படி ஒரு கட்டாயம் ஏற்பட்டது. உண்மை எங்கள் பக்கம் இருக்கிறது. ஆட்சி அதிகாரம் என்றைக்கும் நிற்காது. உண்மையில், திமுகவை வீழ்த்தப் போகிற சக்தி அமமுகதான் என்பதை நிரூபிப்போம்” என்று பேசிய தினகரன் தொடர்ந்தார்,

2454 பேரில் 2374 பேர் வந்தனர்

“நமது கரிகாலன் ஒரு மண்டபத்தை புக் செய்து வைத்திருந்தார். ஆனாலும், பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 2454 பேர் இருக்கிறார்கள். அவர்கள் சமூக இடைவெளியோடு அமரவேண்டுமென்றால் சுமார் 5 ஆயிரம் இருக்கைகள் வேண்டும் என்பதால்தான் தமிழ்நாடு முழுதும் ஒன்பது இடங்களில் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களை அழைத்திருக்கிறோம், சிறப்பான வகையில் முதல் செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 2374  பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். கொங்கு தளபதி சேலஞ்சர் துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வர முடியவில்லை. உடல் நலக் குறைவால் சிலர் வர முடியவில்லை. மற்றபடி அனைவரும் கலந்துகொண்டுவிட்டார்கள்” என்று ஒவ்வொரு மண்டலமாக வருகை தந்தவர்களின் பட்டியலை வாசித்தார் தினகரன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன்

“எந்த ஒரு நல்ல முடிவையும் எடுப்பதற்கு நீங்கள் எனக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறீர்கள். உங்களில் ஒருவனாக செயல்படுவேன். என்னை பொதுச் செயலாளராக நினைத்துக் கொள்பவன் அல்ல. இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து தருவேன். நம் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றிபெற வைத்து தமிழகத்தில் ஒரு சரித்திர சாதனை படைத்திட ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இந்தத் தேர்தலில் திமுகவை தடுத்துவிட்டால் எந்த காலத்திலும் திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்துவிடலாம்”என்று கூறி உரையை முடித்தார் டிடிவி தினகரன்.

அமமுக கூட்டணி வெற்றிபெற எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்வேன் என்று தினகரன் கூறியதையடுத்து, தினகரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் வேலைகளை தீவிரமாக்கிவிட்டார்கள் அக்கட்சியினர்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வெள்ளி 26 பிப் 2021