மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

ஸ்ரீரங்கம் கோயிலைக் காப்பாற்றிய முத்தரையர்கள்: பாஜகவின் அடுத்த அஸ்திரம்!

ஸ்ரீரங்கம் கோயிலைக் காப்பாற்றிய முத்தரையர்கள்: பாஜகவின் அடுத்த அஸ்திரம்!

தமிழ்நாட்டு அரசியலில் அரசியல் பிரநிதித்துவம் இல்லாத சமுதாயங்களை கையிலெடுத்து தனது “பேக் போன்” ஆக பயன்படுத்தும் அரசியலில் தேவேந்திர குல வேளாளர்களை அடுத்து முத்தரையர்களை குறிவைத்துள்ளது பாஜக.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் (அருப்புக்கோட்டை, கடலாடி), மதுரை (மேலூர்) என்று அடர்த்தியாக வாழும் முத்தரையர்கள் தமிழத்தின் பரவலான இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். திமுக, அதிமுக இரண்டிலுமே இவர்களுக்கான அரசியல் பிரநிதித்துவம் மெச்சிக்கொள்ளும்படியாக இல்லை. அதிமுக இதில் கொஞ்சம் பரவாயில்லை.

இப்போது நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் முத்தரையர்களுக்கு வாய்ப்பில்லை. சட்டமன்றத்தில் இரு பெரும் கட்சிகளும் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே எம்பி.க்களே இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அண்மையில் மதுரையில் வீர முத்தரையர் சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வகுமார் முன்னெடுப்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாடு பாஜகவின் பின்புல ஆதரவோடு நடந்ததாக பேச்சு இருக்கிறது.

புதுக்கோட்டையில் 1979 இல் முத்தரையர் சங்க மாநாடு குழ. செல்லையா தலைமையில் நடந்தது. அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த மாநாட்டில் நடந்துகொண்டார். அந்த மாநாட்டில் திரண்ட கூட்டத்தைப் பார்த்துதான் குழ. செல்லையாவுக்கு புதுக்கோட்டை எம்பி வாய்ப்பைக் கொடுத்தார். அப்போது முசிறி செல்வராஜுக்கு திருச்சியில் எம்பி வாய்ப்பைக் கொடுத்தார் கருணாநிதி. அதன் பிறகு அதிமுக அவ்வபோது முத்தரையர்களை கண்டுகொள்கிறதே தவிர திமுகவில் அந்த அளவுக்கு இல்லை. எம்.ஜிஆருக்குப் பிறகு முத்தரையர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.

மதுரையில் நடந்த அந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் முருகனும் கலந்துகொண்டார். மாநாட்டின் போது மதுரைக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை முத்தரையர் சங்க பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது பல விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு பாஜகவின் கலை, கலாசார பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் முத்தரையர்கள் பற்றி டெல்லி தலைமைக்கு அனுப்பிய ஒரு செய்தி பாஜகவின் தேசிய தலைவர்களை கவர்ந்திருக்கிறது.

அதாவது, “படையெடுப்பின் போது சோமனாதர் கோவிலை பாதுகாத்த ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சார்ந்த கோலி சத்திரிய சமூகத்தினருக்கு எப்படி நன்றிக்கடன் பட்டிருக்கின்றோமோ அதைப்போல ஸ்ரீ ரங்கம் கோவிலை அந்நிய சக்திகளின் படையெடுப்பில் இருந்து வீரத்துடனும் தீரத்துடனும் போராடி பாதுகாத்த மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர்களின் வழித்தோன்றல்களான முத்தரையர்களுக்கும் இந்துக்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம். உரிய மரியாதையை அவர்களுக்கு அளித்தால் தேவேந்திர குல வேளாளர்களைப் போல முத்தரையர்களும் பாஜகவுக்கு நீண்ட நெடும் பலமாக இருப்பார்கள் ”என்பதுதான் காயத்ரி டெல்லிக்கு அனுப்பிய செய்தி. அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியின் கருத்தை டெல்லிக்கு அனுப்பி முத்தரையர்கள் பற்றி டெல்லிக்கு புதிய அறிமுகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் காயத்ரி.

விரைவில் பாஜகவின் டெல்லி தலைவர்கள் யாராவது தமிழகத்தில் முத்தரையர்களை முன்னெடுக்கும் வகையில் இந்த கருத்தை மேடையில் கூறலாம் என்கிறார்கள் தமிழக பாஜக புள்ளிகள்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 25 பிப் 2021