மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

பச்சைக் கல் அவசர டெண்டர் - பாய்ந்து தடுத்த பார்த்திபன்?

பச்சைக் கல் அவசர டெண்டர் - பாய்ந்து தடுத்த  பார்த்திபன்?

ஆட்சி முடியும் தருவாயில் அவசர அவசரமாக பச்சைக்கல் சுரங்கம் டெண்டர் விடப்படுகிறது என்று முதல்வர் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் திமுக எம்பி பார்த்திபன் புகார் தெரிவித்திருக்கிறார்.

ஒருபக்கம் மக்களின் போராட்டம், இன்னொரு பக்கம் எம்பியின் புகார் என்று சேலம் இன்று பரபரப்பாகியிருக்கிறது.

சேலம் மேற்கு பகுதியில் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் செட்டிச் சாவடி என்ற பகுதி உள்ளது. இதை ஒட்டி நெல்லியாகரடு கிராமத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பச்சை கல் கொண்ட மலைப் பகுதி உள்ளது. இதில் குவாரி அமைத்து ஏலம் விடுவதற்காக மாவட்ட நிர்வாகம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஊர் மக்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இது பரவலாக தெரியவில்லை.

இந்நிலையில் டெண்டர் இன்று நடக்க இருந்த நிலையில்தான் நேற்று இந்தத் தகவல் பரவி மக்கள் பரபரப்பாகி அதை எதிர்த்து இன்று சாலைக்கு போராட வந்துவிட்டார்கள். நெல்லியாகரடு கிராமத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டத்துக்கு வந்து, சேலம் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.

தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘டெண்டரை கைவிட வேண்டும்’என்ற கோரிக்கையோடு பொது மக்கள் மறியலில் இருந்து கலைந்து சென்றனர்.

இதேநேரம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார்களோடு சென்றார் சேலம் எம்பி பார்த்திபன் .மின்னம்பலம் சார்பாக அவரிடம் பேசினோம்.

“சேலம் மேற்கு தாலுக்கா,செட்டிச்சாவடி கிராமத்தில் சர்வே எண்.14/1,பாகம்(4,5) இந்த சர்வே எண்களுக்கு சம்பந்தப்பட்ட சுமார் 20 ஏக்கர் நிலத்தில் உள்ள Dunite என்று சொல்லக்கூடிய பச்சைகல்களை ஏலம் விடுவதாக சேலம் மாவட்ட அரசிதழில் (எண் 14) கடந்த 09-02-2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது‌.

மேற்படி Dunite குவாரிகள் அமைந்துள்ள பகுதி செட்டிச்சாவடி கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட நெல்லியாக்கரடு ஒட்டியுள்ள சுமார் 5000 குடும்பங்கள் வசிக்கும் பகுதியாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த குவாரியை எந்த ஒரு அரசும் பொது ஏலம் நடத்தாத சூழ்நிலையில் திடீரென தற்பொழுது ஏலம் நடத்தப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் 5000 ஏழை குடும்பங்கள் பல்வேறு பாதிப்பிற்குள்ளாவார்கள்.இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் என்னிடம் தகவல் தெரிவித்தனர். எனது எம்.பி அலுவலகத்துக்கு வந்து என்னை சந்தித்தனர். இந்த டெண்டரில் பல விதிமீறல்கள் நடந்திருப்பதாக மக்கள் சொல்கிறார்கள்.

பொது ஏலம் விடுவதற்கு முன்பாக அந்த பகுதியில் வாழும் மக்களிடத்தில் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அப்படி கேட்கப்படவில்லை.

வருவாய் துறை தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திருக்க வேண்டும்.அதுவும் செய்யப்படவில்லை.

பிரபலமான தினசரி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.அவ்வாறு செய்யப்படாமல் பெரும்பாலான மக்கள் பார்த்திடாத நாளிதழில் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது‌.

அரசுக்கு பாத்தியப்பட்ட எந்த வகையான இனத்தின் பேரில் ஏலம் விடும் பொழுது அந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்,சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,ஊராட்சித் தலைவர் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிப்பு நகல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மேற்படி,ஏலம் சம்பந்தமாக எந்த தகவலும் எந்த மக்கள் பிரதிநிதிக்கும் தெரியப்படுத்தவில்லை.அப்படி தெரிவித்திருந்தால் மக்கள் பிரதிநிதிகள் ஏல நிலத்தின் நிறை குறைகளை ஆராய்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களுடைய பரிந்துரைகளை அல்லது ஆட்சேபணைகளை தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.ஆனால் இந்த ஏலத்தில் மாவட்ட நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை.

ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு மேற்படி ஏலம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு டெண்டர் தொகையை மிகக்குறைவாக நிர்ணயம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தொகையை மாவட்ட நிர்வாகம் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.ஆனால் அந்த ரகசிய நிர்ணயத்தொகை அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டு இந்த ஏலம் நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.

கோடிக்கணக்கில் இந்த ஏல சம்பந்தப்பட்ட கனிம வளங்கள் விலை போகும் நிலையில் சொற்ப தொகைக்கு ஏலம் விடுவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி,கோடிக்கணக்கில் அரசுக்கு வரவுள்ள வருவாயை பெருக்குவதற்கு உதவிட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும்,அரசுக்கு வருடம் 100 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் வரக்கூடிய வருவாயை தனி நபர் கொள்ளை இலாபம் ஈட்டுவதை தடுத்து நிறுத்திடவும் இன்று (25-02-2021) நடைபெற உள்ள பொது ஏலத்தை (G.No 14) நிறுத்தி வைக்குமாறு அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

மேலும்,மாவட்ட நிர்வாகம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த பொது ஏல நடைமுறையை செயல்படுத்தினால் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்படும். மக்களைத் திரட்டி பெரும் போராட்டமும் நடத்தப்படும்”என்று தெரிவித்தார் எம்பி பார்த்திபன்.

கனிமவள வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, “ஏற்கனவே இந்த பகுதியில் வெள்ளைக்கல் சுரங்கம் இருக்கிறது. சட்டத்துக்கு உட்பட்டும் மீறியும் வெள்ளைக்கல் சுரங்கங்கள் இருக்கின்றன.

ஆனால் பச்சைக்கல் சுரங்கம் இப்போதைக்கு இங்கே இல்லை. சேர்வராயன் மலை முழுதும் கனிமவளம் நிறைந்தது. அந்த மலையின் உயரமே பச்சைக்கல் வெட்டியெடுத்துதான் குறைந்துவிட்டது. சேர்வராயன் மலைத் தொடரில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, அதன் கிளையாறுகளான பவுனாறு அல்லது தங்கநதி ஆகியவற்றின் பெயர்களுக்குக் காரணமே கனிம வளம்தான். சேர்வராயன் மலையில் இருந்து இந்த ஆற்றோட்டம் வழியாக அடித்து வரப்படும் கனிமக் கற்கள் ஓடி வரும். இதனால்தான் இந்த ஆற்றுக்கு திருமணி முத்தாறு என்றும் பவுனாறு என்றும் அழைக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட பச்சைக்கல் நிறைந்த இந்த பகுதியைதான் இப்போது அவசரமாக டெண்டர் விட ஏற்பாடு செய்தார்கள். திமுக எம்பியின் புகாரால் டெண்டர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எம்பியின் செயல்பாட்டுக்கு அரசியல்தான் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் பார்த்திபன் பெரிய நன்மைதான் செய்திருக்கிறார். நாளை திமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட அவசரப்பட்டு டெண்டர் விட முடியாது” என்கிறார்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 25 பிப் 2021