மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவோம்: அமமுக பொதுக்குழு தீர்மானம்!

டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவோம்:  அமமுக பொதுக்குழு தீர்மானம்!

டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவது என்று அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிமுகவோடு அமமுக இணையும் என்ற வதந்திகளுக்கு அமமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை அதிமுகவோடு இணைத்து விட பாஜக உள்ளிட்ட சில சக்திகள் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் பாஜக அதை திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையில் சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்திய சசிகலா, “ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து வெல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில்தான் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. தமிழகத்தின் 10 நகரங்களில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் தினகரன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், சென்னை வட்டார பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கிருந்து காணொளி மூலமாக தமிழகத்தில் கட்சி அமைப்பு ரீதியாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி பற்றி முடிவெடுக்க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிகாரம் வழங்கிய பொதுக்குழு அடுத்து ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

“ஏழை, எளியோர் , பாலகர், வயோதிகர், பாமரர், படித்தவர் என எல்லாத் தரப்பு மக்களுக்கும் சிறந்த நல்லாட்சியை வழங்கிய ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட வேண்டும் என்ற மிகச் சரியான குறிக்கோள்- துணிச்சலான தலைமை -உண்மை தொண்டர்கள் -நேர்த்தியான செயல்கள் என அனைத்து நிலைகளிலும் பரிணமித்து வளர்ந்துவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தால் சிக்குண்டு இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுத்திடவும், அம்மாவின் மக்கள் நல கொள்கைகளை வாழவைக்கவும், தமிழகம் தலைநிமிர்ந்திடவும்...

சசிகலாவின் நல்வாழ்த்துக்களோடு செயல்படும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைப்பது என இப்பொதுக்குழு சூளுரை ஏற்கின்றது”என்பதுதான் அமமுக பொதுக்குழுவின் 14 தீர்மானங்களில் 14 ஆவது தீர்மானம்.

“தமிழகமே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போலாகும்” என்று சில நாட்களாகவே டிடிவி தினகரன் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கூறி வரும் நிலையில், டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவோமென்று அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வியாழன் 25 பிப் 2021