மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: இன்று அரசுப் பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்:  இன்று அரசுப் பேருந்துகள் ஓடுமா?

தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 25) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் இன்று காலையிலிருந்து அரசுப் பேருந்துகள் அதிகளவில் சாலைகளில் காண முடியவில்லை.

நேற்று பிப்ரவரி 24ஆம் தேதி, இரவு திட்டக்குடியிலிருந்து கடலூர் நோக்கி அரசுப் பேருந்தில் பயணித்தபோது ஓட்டுநரும் நடத்துநரும், "வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளை மதியத்திலிருந்து இயக்காமல் டிப்போவில் நிறுத்தி வருகிறார்களாம். நமது பேருந்தை எந்த டிப்போவில் நிறுத்துவது?" என்று பேசிவந்தார்கள்.

அவர்களிடம், “என்ன சார் ஸ்டிரைக் நடத்துறீங்க, வெளியூர் போகக்கூடிய மக்கள் என்ன செய்வார்கள்?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “சார் மக்களில் சிலரும் ஊடகங்களில் சிலரும் சொல்வது மாதிரி திடீர் போராட்டமெல்லாம் இல்லை. பல கட்டங்களாகப் போராட்டங்களை நடத்தி முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துத்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். எங்களுக்கு ஆயிரம் குறைகள் உள்ளது சார்” என்றார்.

எப்படியோ கடலூர் பஸ் நிலையம் வந்தோம். போக்குவரத்துத்துறை டெப்போவில் போலீஸ்காரர்களும் ஊழியர்களும் நிறைந்து போயிருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சிஐடியூ துணைப் பொதுச்செயலாளர் கண்ணனிடம் போராட்டத்தைப் பற்றிக் கேட்டோம்.

“தமிழகம் முழுவதும் 21,000 பேருந்துகள், ஓட்டுநர் நடத்துநர், மெக்கானிக், டெக்னீசியன், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் என ஒரு லட்சத்து 40,000 பேர் இருக்கிறோம். இரவு பகல் என்று பாராமல் உயிரைப் பணயம் வைத்து பேருந்துகளை இயக்கி மக்களைப் பாதுகாப்போடு கொண்டு சென்று வருகிறோம்.

ஊதிய ஒப்பந்தம் முடிந்து 19 மாதங்கள் கடந்துவிட்டன. எங்கள் சரண்டர் கொடுக்கவில்லை, சீருடை கொடுக்கவில்லை, கடந்த இரண்டு ஆண்டில் ஓய்வுபெற்ற சுமார் 25,000 ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் பி.எஃப் கொடுக்காமல் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத்தான் கேட்கிறோம். அதற்கு ஆயிரத்தெட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால், எந்த பலனும் இல்லை.

கடைசியாக பிப்ரவரி 18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து அமைச்சர், ‘நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று போய்விட்டார். 23ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையில் ஏதாவது நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான் அடைந்தோம். தற்போது நடைபெறும் வேலை நிறுத்தம் போராட்டம் அரசை ஸ்தம்பிக்க வைக்கும்” என்றார்.

கடலூர் பணிமனை தொமுச நிர்வாகி ராமுவிடம் பேருந்துகளை இயக்கக்கூடாது என்று மறிப்பது தவறில்லையா என்று கேட்டோம்.

“போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பி.எஃப், எல்.ஐ.சி, சொசைட்டி பணம் சுமார் 9,000 கோடியை இந்த அரசு திருடி ஆட்சி செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆறு மாதங்கள் ஊதியம் கொடுக்கவில்லை. மாறாக ஊழியர்களின் விடுப்பு, சரண்டர் பணத்தைக் கொடுத்துக் கணக்குக் காட்டினார்கள். சம்பளப் பணத்தை ஏமாற்றியது இந்த அரசு.

நாங்கள் அடாவடியாகக் கேட்கவில்லை. எங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்ததைக் கேட்கிறோம், ஊதிய உயர்வு கேட்கிறோம், விடுப்பு சரண்டர் கேட்கிறோம், சொசைட்டி பணம் எங்கே என்றுதான் கேட்கிறோம்.

எங்கள் கோரிக்கைகளைப் பலவிதமான போராட்டங்கள் மூலமாக தெரியப்படுத்திட்டோம். பேச்சுவார்த்தையில் சொல்லிவிட்டோம். அமைச்சரிடமும் கெஞ்சி கேட்டோம். அவர்கள் எங்களைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் இரவு முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளோம். தொழிலாளர்கள் போராட்டம் எப்போதும் தோல்வியடைந்ததில்லை” என்றார்.

"போக்குவரத்துத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். அரசு தலையிட்டு போராட்டத்தை சுமுகமாக முடிக்கவில்லை என்றால், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்குவார்கள் என்பதை அரசு உணர வேண்டும்" என்கிறார் அரசு ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதி.

-எம்.பி.காசிநாதன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 25 பிப் 2021