மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

சட்டமன்றத்தில் முப்பெரும் தலைவர்கள்-அரசியல் கடந்த ஆதரவு!

சட்டமன்றத்தில் முப்பெரும் தலைவர்கள்-அரசியல் கடந்த ஆதரவு!

இன்று நாம் பார்க்கும் சட்டமன்றத்தின் முன்னோடித் தலைவர்கள் திருவுருவப் படங்களாய் சட்டமன்றத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பி. சுப்பராயன், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார் ஆகியோரின் திருவுருவப்பட திறப்பு விழா நேற்று (பிப்ரவரி 23) சட்டமன்ற வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை தாங்க, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று பெரும் தலைவர்களின் படங்களை சட்டமன்றத்தில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருடைய பேரன் சிதம்பரம் வாலேஸ்வரன் மற்றும் கொள்ளுப் பேத்தி செல்வி முருகானந்தம், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பி. சுப்பராயனின் கொள்ளுப் பேத்தி சிவகாமி மற்றும் கொள்ளுப் பேரன் மோகன் குமாரமங்கலம் (தற்போதைய காங்கிரஸ் செயல் தலைவர்), மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் சகோதரர் பேரன் ஓ.பி. வெங்கடாசலபதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதல்வர் முப்பெரும் தலைவர்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

“ கப்பலோட்டிய தமிழர் அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் மட்டுமல்ல சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கியவர். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையை எழுதத் தொடங்கிய அவர், சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். ஒருசில நாவல்களையும் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலன் என்னும் தத்துவ எழுத்தாளரின் பல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடும்போது, அந்நூலின் முகப்பில் "இந்நூலின் எழுத்து, கட்டமைப்பு, அச்சு, மை யாவும் சுதேசியம்" என்று குறிப்பிட்டு, தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உடல் வருத்தி, கடும் இன்னல்களைப் பெற்று நாட்டின் சுதந்திரத்தைத் தங்கள் உதிரத்தால் உருவாக்கி, விடுதலையை பெற்றுத் தந்த சிதம்பரனாரை நினைவில் வைத்துப் போற்றுவோம்”என்று குறிப்பிட்டார் முதல்வர்.

முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் பற்றி பேசிய முதல்வர், “டாக்டர் சுப்பராயன் அவர்கள் தனது வாழ்நாட்களில் ஒரு சமூக சீர்த்திருத்தாளராக வாழ்ந்தார். எடுத்துக்காட்டாக சுப்பராயன் அவர்களின் ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை அமல்படுத்தப்பட்டது. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றும் போது, நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட முதல் ஆட்சிமொழிக் குழுவின் உறுப்பினராக இருந்தபோது, ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக தொடர வேண்டும் என வலியுறுத்தினார். செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சுகபோகமாக வாழாமல், தனது வாழ்நாளை நாட்டின் விடுதலைக்காகவும், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்த டாக்டர் சுப்பராயன் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்”என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர்களின் முதல்வர் என்று போற்றப்படும் ஓமந்தூர் பி. ராமசாமி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அவர் பற்றி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“அரசியலில் தூய்மை, நேர்மையான நிர்வாகம், மக்கள் நலனுக்கே முன்னுரிமை என்று தமது கொள்கையை வகுத்துக்கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு படைத்து, தமிழக மக்களால் "ஓமந்தூரார்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இன்றைய தினம், இந்த சட்டமன்றப் பேரவையில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் முழு திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன். வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் இயக்கம் நடத்திய உப்பு சத்தியாகிரகப் போராட்டம் (1930), சட்டமறுப்பு போராட்டம் (1932), தனிநபர் சத்தியாகிரகம் (1940), வெள்ளையனே வெளியேறு போராட்டம் (1942) ஆகியவற்றில் தீவிரமாகக் கலந்து கொண்டவர்.

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக 1947-ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமைக்கு உரியவர்.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிரிட்டிஷ் இந்தியாவில், அந்தக் காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள் அனைவரும் ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவே இருந்தனர். தான் பதவி ஏற்றவுடனேயே ஓமந்தூரார் ஓர் உத்தரவில் ஐ.சி.எஸ். அந்தஸ்து இல்லாத .ஏ.அழகிரிசாமி என்பவரைத் தனது நேர்முக செயலாளராக நியமித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும்பங்காற்றினார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற சிந்தனையில் தெளிவு கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில், பட்டியலின மக்கள் நலனுக்கென தனியாக ஒரு துறை என்று இல்லாமல், தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்தத் துறையைப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஓர் ஆணையரை நியமித்தார். எனவே, அவர் இன்றைக்கும் ஆதிதிராவிட நலத்துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்”என்று நினைவுகூர்ந்தார்.

மேலும், “ஓமந்தூரார் அவர்கள் மறைந்தாலும் அவர் வழிகாட்டிச் சென்ற நேர்மையான அரசியலை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்வோம்; தமிழ்நாட்டை இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவிலும் உயரச் செய்வோம்”என்று குறிப்பிட்டார் முதல்வர்.

வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன், ஓமந்தூரார் ஆகிய தலைவர்களின் படங்கள் சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதமின்றி சட்டமன்ற உறுப்பினர்களும், பொதுப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

முப்பெரும் தலைவர்களும் தாங்கள் சார்ந்த சமுதாயத்துக்கு அப்பாற்பட்டவர்களாக முழு தமிழகத்துக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றாலும்... இந்த படத் திறப்பு நிகழ்வின் மூலம் இந்தத் தலைவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையிலும் இந்த அரசு பற்றி ஒரு நல்லெண்ணம் தோன்றியிருப்பதை மறைக்க முடியாது என்றார் விழாவில் பங்கேற்ற ஓர் அரசியல்வாதி.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 24 பிப் 2021