மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

அதிமுகவின் இலைக்கோட்டையும் திமுகவின் மலைக்கோட்டையும்! கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு கைவசமாகாத சென்டிமென்ட்!

அதிமுகவின் இலைக்கோட்டையும் திமுகவின் மலைக்கோட்டையும்!  கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு கைவசமாகாத சென்டிமென்ட்!

வெறும் எதுகை மோனைக்காக வைத்த தலைப்பு இல்லை இது. கட்டுரையைப் படித்தால் உங்களுக்கே புரியும். அதிமுகவின் இலைக்கோட்டை என்பது கொங்கு மண்டலம். முக்கியமாகச்சொன்னால் கோவை. திமுகவின் மலைக்கோட்டை என்பது நீலகிரி மாவட்டம். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளுக்கும் இதயத்துக்கு நெருக்கமான ஊர்கள் இவை.

கோவை என்றால் கருணாநிதிக்கு கொள்ளைப்பிரியம். கோவையை தன்னைத் தாலாட்டிய தொட்டில் என்று சொல்வார் கருணாநிதி. அவருடைய திரையுலக வாழ்க்கையும், முதல் மனைவியுடனான மணவாழ்வும் தொடங்கியது கோவை நகரில்தான். கோவை சிங்காநல்லூர் அவரும் எம்ஜிஆரும் ஒரே அறையில் தங்கியிருந்த சரித்திரப்பெருமை வாய்ந்த பகுதி. ஆனால் கோவை தன்னை அரசியல்ரீதியாக ஆதரிக்கவே இல்லை என்ற வருத்தம், கடைசி வரை அவரிடம் இருந்து கொண்டே இருந்தது. அதை அவர் நேரடியாக சுட்டிக்காட்டிய சம்பவங்கள், பகிர்வுகள் நிறையவே இருக்கின்றன.

2003ஆம் ஆண்டில், கலைஞர் எழுதிய ‘தொல்காப்பியர் பூங்கா’ நுால் வெளியீட்டு விழா, கோவை எஸ்.என்.ஆர். கல்லுாரி அரங்கில் நடந்தது; அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, திடீரென மயங்கிச் சரிந்துவிட்டார். அங்குள்ள கோவை கே.ஜி.மருத்துவமனையில் சிறிது நேரம் சிகிச்சை பெற்று திரும்பியவர், அன்றிரவு கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார். கூட்டம் பிரமாண்டமாக இருந்தது. அதில் பேசிய கருணாநிதி, ‘‘இந்த கூட்டத்தைப் பார்த்து, நான் பிரமிக்கவில்லை; இது கருணாநிதி உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று பார்க்க வந்த கூட்டம்’’ என்றார்.

கோவைக்கும் தனக்குமான பிணைப்பை வெளிப்படுத்தும்விதமாக, 2011 மார்ச் 30 அன்று சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்தபோது கருணாநிதி பேசியது உருக்கத்தின் உச்சம்...

‘‘நான் அரசியலுக்காக வந்து போகும் இடமல்ல கோவை; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். கோவை என்றால் கொள்கை வீரர்களின் கோட்டை; என்னைத் தாலாட்டிய தொட்டில்; நான் விளையாடிய தாழ்வாரம்; என்னைப் படிக்க வைத்த, கலை உலகுக்கு அறிமுகம் செய்த மண்; இந்த உணர்வோடுதான் நான் உங்களை சந்திக்கிறேன்.

இதே ஊரில்தான், 1945க்கு முன் நானும் எம்.ஜி.ஆரும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். பிளேக் நோய் பரவி வந்த நிலையில், சிங்காநல்லுாரில் குடியிருந்த நான், ராமநாதபுரத்தில் இருந்த அவர் வீட்டுக்குக் குடி மாறினேன். இந்த மண்ணுக்கும் எனக்கும் உள்ள சொந்தம் சாதாரணமானதல்ல; இந்தப் பிணைப்பு, அலட்சியப்படுத்தக்கூடியது அல்ல. அந்த உறவைப் புதுப்பிக்கிற நாளாக இந்த நாளை நினைக்கிறேன்.

இந்த கோவை மண்ணிலேதான் செம்மொழி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டையொட்டி, கோவையில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்தன. எந்த ஒரு நிகழ்ச்சியை நான் நடத்தினாலும், அதற்கு அரசியல் சாயம் பூசி, அந்த நிகழ்ச்சிக்குரிய கருப்பொருளைச் சிதைப்பது, இங்குள்ள சில அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கை. செம்மொழி மாநாட்டுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது; பலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கொங்கு மண்டலத்திலே உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றியைப் பறித்து, எனது காலடியில் வைப்பதாக ராமநாதன் பேசினார். காலில் வைத்து வணங்குவது, பூஜா மனப்பான்மை; வெற்றியை எனது கழுத்திலே மாலையாக அணிவித்தால் ஏற்றுக்கொள்வேன்” என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

ஆனால், அந்தத் தேர்தலில் பத்துத் தொகுதியிலும் மொத்தமாய்த் தோற்றது திமுக. அதற்குப் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் கோவைக்குப் பரப்புரைக்கு வந்தார். அதுதான் அவர் கோவையில் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி. அதை அவரே கணித்திருந்தார்...

கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘இதுவே கோவையில் நான் பங்கேற்கும் கடைசிக் கூட்டமாக இருக்கலாம்’’ என்று பேசினார். அதுவே உண்மையாகிப்போனது. அதே பொதுக்கூட்டத்தில், கோவை மக்களைப் பார்த்து, ‘‘எப்போதுமே அடிமையாகத்தான் இருக்கப் போகிறீர்களா?’’ என்று ஒரு கேள்வியையும் அவர் கேட்டார். அதாவது இரட்டை இலையின் அடிமைகளா நீங்கள் என்று கேட்காமல் கேட்டார் கருணாநிதி.

இதற்கெல்லாம் முன்பாக 1975இல் அவர் தமிழக முதல்வராக இருந்தபோது, மாநில சுயாட்சி மாநாட்டை கோவையில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக நடத்தினார். தேசியத்தலைவர்கள் பலரையும் அழைத்து வந்து அவர் நடத்திய மாநாடு, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. கண் கவரும் ‘கட்–அவுட்’கள், கண்காட்சி, கருத்தரங்கு என ஒரு மாநாடு என்றால் எப்படி நடக்க வேண்டுமென்று நடத்திக் காட்டினார். வ.உ.சி. மைதானத்தில் நடந்த கூட்டத்தின் உரையை, அவினாசி ரோடு மேம்பாலம் வரையிலும் மக்கள் கூட்டம் கேட்டது; மக்கள் பார்ப்பதற்காக, முதன் முறையாக பொதுக்கூட்டத்தில் ‘டிவி’ வைத்ததும் அந்த மாநாட்டில்தான். டிசம்பரில் மாநாடு நடந்தது; ஜனவரியில் ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பின்பு, 1989 வரை மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல, கடந்த 2010ஆம் ஆண்டில் கோவையில் மிகப் பிரமாண்டமாக நான்கு நாட்களுக்கு செம்மொழி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு ஜூனில் நடந்தது. அடுத்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பத்துத் தொகுதியிலும் மொத்தமாய்த் தோற்றது திமுக. கடைசியாக அவர் ஆட்சி அமைத்த 2006 சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதிருந்த ஒருங்கிணைந்த கோவையில் (திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்படும் முன்பு) 14 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. அந்தத் தேர்தலில் தாராபுரத்தையும் உள்ளடக்கிய 15 தொகுதிகளில், வெறும் 16,802 வாக்குகள் வித்தியாசத்தில் பத்துத் தொகுதிகளை திமுக இழந்தது. அவர் உயிரோடு இருக்கும்போது கடைசியாக நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் கருணாநிதியும் எம்ஜிஆரும் சேர்ந்து வாழ்ந்த சிங்காநல்லுார் தொகுதியில் மட்டும் திமுக வென்றது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, கொங்கு மண்டலம் கருணாநிதியின் கைவசமாகவே இல்லை. இரட்டை இலையின் கோட்டையாகவே அது இருந்தது.

அடுத்த ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவோம்...

ஆண்டால் தமிழ்நாடு; ஆளாவிட்டால் கோடநாடு என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கும் அளவுக்கு, ஜெயலலிதாவுடன் ஒன்றித்துப் போன மண், நீலகிரி. சொந்தஊர் ஸ்ரீரங்கம் என்றாலும், வாழவைத்து அடையாளம் தந்தது சென்னை என்றாலும், சிறுதாவூர், பையனூர் என எங்கெங்கோ சொத்துகளை வாங்கியிருந்தாலும் அவருடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமளித்தது கோடநாடுதான். தமிழகத்தில் உள்ள ஒரேயொரு மலை மாவட்டம் நீலகிரிதான். மாநிலத்திலேயே மிகச்சிறிய மாவட்டம். இருப்பது மூன்றே மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான். ஆனால் வெயிலுக்காக ஏங்குகிற குளுமை பூமி என்பதாலோ என்னவோ, அரசியலில் எத்தனை அலை அடித்தாலும் மலைமக்கள் தலைவணங்கியது சூரியனுக்குதான்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோடைக்கால தலைநகரமாக உதகை இருந்திருக்கிறது. அதேபோல ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதே பல நாட்கள், கோடநாடு எஸ்டேட் பங்களாதான் தலைமைச் செயலகம் போல செயல்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பெரிய பெரிய தலைவர்கள், விஐபிக்கள் அவரை அங்குதான் சந்திக்க வேண்டியிருந்தது. எப்போதுமே நடுங்க வைக்கும் ஏசி குளிரில் இருந்து பழக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அங்குள்ள இயற்கைக் குளிர் ஆரோக்கியம் தந்தது; ஆனந்தமும் தந்தது. அதனால்தான் 1996க்குப் பின், சென்னை தவிர்த்து அவர் அதிகமான நாட்கள் தங்கிய பகுதியாக நீலகிரி இருந்தது. அவருக்காகவே கோத்தகிரி ரோடு அகலமானது. தீட்டுக்கல்லிலும் கோத்தகிரியிலும் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. அவருடைய பெயரால் ஊட்டியில் ரோஜா பூங்காவே உருவானது. எதிர்க்கட்சித் தலைவராக பல ஆர்ப்பாட்டங்களை அங்கே அவர் நடத்தினார். முதல்வராக இருக்கும்போது, சாதாரண ஏடிஎம் திறப்பு விழாவிலும் பங்கேற்றார். மீண்டும் மீண்டும் அவரே அங்கு பரப்புரை செய்தபோதும் மூன்று தொகுதிகளை முழுதாக அவர் வெல்ல முடியவில்லை.

கருணாநிதி உயிரோடு இருக்கும்போது, அவர் வாழ்ந்த சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் திமுக வென்றதைப் போல, கோடநாடு அமைந்துள்ள குன்னூர் தொகுதியில் மட்டும் அதிமுக வென்றதுதான் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த ஆறுதல். தானே நேரில் களமிறங்கி பிரச்சாரம் செய்து அந்த இரட்டை தொகுதியில் இரட்டை இலையை ஜெயிக்க வைக்க முடியவில்லையே என்ற வேதனை, ஜெயலலிதாவிடம் கடைசி வரை இருந்திருக்கும். அரசியலில் அரங்கேறும் முரண்நகைகளில் இது முக்கியமான வரலாறு.

இப்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் கோவையிலும், நீலகிரியிலும் சுற்றிச்சுற்றி வந்து பரப்புரை செய்கிறார்கள். இருவருக்குமே இரண்டு மாவட்டங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு என்று ஏதுமில்லை. ஆனாலும் தங்கள் கட்சியின் கோட்டையை நழுவவிடக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பத்துக்கு மூன்று ஈடாகி விடாது; ஆனால் இந்த முறை ஒரு மாற்றம் வரலாம்... மொத்தமாய்!

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 24 பிப் 2021