மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

நமசிவாயம் Vs ரங்கசாமி: புதுச்சேரியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

நமசிவாயம் Vs  ரங்கசாமி:  புதுச்சேரியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இல்லாமல் நேற்று (பிப்ரவரி 22) ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அடுத்து அங்கே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 23) புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி, “ஆட்சி அமைக்க என்னை அழைத்தால் அதுகுறித்து பாஜக, அதிமுக போன்ற கட்சிகளோடு ஆலோசித்து அடுத்து என்ன என்பதை முடிவு செய்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

அதாவது தன்னை அடுத்த முதல்வராக பாஜக முன்னிறுத்தும் என்று எதிர்பார்த்தார் ரங்கசாமி. ஆனால் பாஜகவின் திட்டமே வேறு என்கிறார்கள் அக்கட்சித் தரப்பில்.

“காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிப்ரவரி 22 ஆம் தேதியே, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார். சிலரிடம் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுவிடுவோம், தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் காபந்து அரசாக நம் அரசே இருக்கும் என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறார்.

ஆனால் புதுச்சேரிக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, ரங்கசாமியை சந்தித்து, ‘நமது நோக்கம் உடனடியாக மாற்று ஆட்சி அமைப்பது இல்லை. காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும். அதன் மூலமாக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். சட்டமன்றத் தேர்தலில் மக்களைச் சந்தித்து அவர்கள் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்’என்று கூறியுள்ளார்.

அப்போது ரங்கசாமி தரப்பில், ‘சரி...முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டனர் பாஜக தரப்பில்” என்கிறார்கள் பாஜக தரப்பில்.

ஏற்கனவே காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்றிருக்கும் நமசிவாயம் தானே முதல்வர் என்ற முன்னிபந்தனையோடுதான் அங்கே சென்றிருக்கிறார். ரங்கசாமியின் நெருங்கிய உறவினர்தான் நமசிவாயம். காங்கிரசில் இருந்தபோதே இருவருக்கும் ஆகாது. இப்போது நமசிவாயம் பாஜகவில் சேர்ந்துவிட்டதால் இந்த அணியிலும் முதல்வர் பதவி தனக்குக் கிடைக்காது என்று கருதுகிறார் ரங்கசாமி.

இதையறிந்த காங்கிரசார் சிலர், “ஆனது ஆகிவிட்டது. நமசிவாயம் பாஜகவுக்கு சென்றுவிட்ட நிலையில் ரங்கசாமிக்கு அங்கே மதிப்பு கொடுப்பது அரிது. நமசிவாயம் காங்கிரஸில் இல்லாத நிலையில் இப்போது ரங்கசாமி மீண்டும் காங்கிரசுக்கு வருவது அவருக்கு நல்லது. என்.ஆர். காங்கிரசை காங்கிரஸோடு சேர்ப்பதற்கு இதுதான் நல்ல நேரம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி அரசியல் என்பதே தனி நபர்களை மையப்படுத்தியதுதான் என்பதால், மீண்டும் சில அதிரடிகள் தேர்தலுக்கு முன்பே அங்கே அரங்கேறக் கூடும்.

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

செவ்வாய் 23 பிப் 2021