மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

குழந்தையின் தலையிலும் 62 ஆயிரம் ரூபாய் கடன்!- பட்ஜெட்டை புறக்கணித்த ஸ்டாலின்

குழந்தையின் தலையிலும் 62  ஆயிரம் ரூபாய் கடன்!- பட்ஜெட்டை புறக்கணித்த ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 23) 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார்.

அப்போது தொடக்கத்தில் தமிழகத்தின் மீதான கடன் சுமை பற்றி அவர் தெரிவித்தார். அதில், “2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவிகிதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

பட்ஜெட் உரையை எதிர்த்து கண்டனத்தோடு வெளிநடப்பு செய்தது திமுக. இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

“நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் - தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு - வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்”என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் மேலும்,

“2006 - 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி!

இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவிகிதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவிகிதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.

2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா!”என்று தெரிவித்துள்ளார்.

“தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.

தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ் “நிதி நிலை அறிக்கையின் இலக்கு குறித்து” ஆறு மாதத்திற்குள் வைக்க வேண்டிய ஆய்வு அறிக்கையைக் கூட தாக்கல் செய்யாத, தனது அலுவல் பொறுப்பு உணராத ஒரே நிதியமைச்சர் - நாட்டில் நிதி மேலாண்மையில் தோற்றுப் போன மிக மோசமான ஒரு நிதியமைச்சர் என்றால் - அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்கும்!

இப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதலமைச்சரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்தி விட்டு - தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி - வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் சௌமியா அன்புமணி, ஜான் பாண்டியன்? ...

3 நிமிட வாசிப்பு

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் சௌமியா அன்புமணி, ஜான் பாண்டியன்?

திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின் ...

4 நிமிட வாசிப்பு

திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின்

இறுக்கும் அதிமுக... ஏற்கும் தேமுதிக?

4 நிமிட வாசிப்பு

இறுக்கும் அதிமுக... ஏற்கும் தேமுதிக?

செவ்வாய் 23 பிப் 2021