Eஅரசியல் களத்தில் சகாயம்….

politics

அரசியலுக்கு வருவதாக ஆதரவாளர்கள் மத்தியில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்தார்.

மதுரையில் ஆட்சியராக இருந்த போது, அரசுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இவருக்கு நேர்மையான அதிகாரி என்ற பெயர் இளைஞர்கள் மத்தியில் உண்டு. எங்கு எதாவது பிரச்சினை, ஊழல் போன்ற சம்பவங்கள் நடந்தாலும் அங்குச் சகாயத்தை பணியமர்த்த வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்துவர். அதுபோன்று சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே, தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தபடியே சகாயம், மக்கள் பாதை இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். பின்பு மக்கள் பாதை அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து மக்கள் பாதை தலைவர் நாகல்சாமி கூறுகையில், “மக்கள் பாதை அமைப்புக்குச் சகாயம் வழிகாட்டி என்று சொல்வதை விட அவர் மக்கள் பாதை அமைப்பை நிர்வகித்து வந்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் மக்கள் பாதை அமைப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் அவர் செயல்பாடு எதுவும் சரியில்லை. அவருக்கு நெருக்கமான நிர்வாகிகளை மட்டும் சந்தித்த அவர், மற்றவர்களைப் புறக்கணித்து வந்தார் என்று கூறி அவர் மக்கள் பாதை அமைப்பிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அதுபோன்று சகாயத்துக்கு மக்கள் பாதை அமைப்பிலிருந்து வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. அதில், “மக்கள் பாதை அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட சில முன்னாள் நிர்வாகிகளை வைத்து மக்கள் பாதை என்ற பெயரில் நீங்கள் இயங்குவதாகச் செய்தி வந்துள்ளது. இது சட்டவிரோதமாகும். எனவே மக்கள் பாதை அமைப்பு பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம், ‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்துப் பேசினர்.

இறுதியாகப் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,

தமிழகம் ஊழலில் மாட்டிக்கொண்டிருக்கிறது. எனவே அதை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். நான் இந்த மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசு பணியில் சேர்ந்தேன். 29 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சியக் கனவுகளோடு பணியில் சேர்ந்தேன். நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் இந்நேரம் உயர் பதவிகளிலிருந்திருக்கலாம். நான் அரசியல் தாக்கத்தோடு பயணிக்கவில்லை. அந்த எண்ணத்தோடும் ஓய்வு பெறவில்லை. நான் ரஜினிகாந்த் போன்றவர்களுடன் சேர்ந்து அரசியலில் பயணிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்களுடன் தொலைபேசியில் கூட பேசியதில்லை. இத்தனை ஆண்டுகள் நான் மட்டும் பாடுபட்டுவிட்டேன். போதும், இனி நான் மட்டும் பயணிக்கப் போவதில்லை.

அரசியலில் ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டு வருவது மிக கடினம். அரசியலில் ஈடுபட்டால் எனது நேர்மைக்குப் பங்கம் வந்துவிடுமோ? என பயந்திருந்தேன். ஆனால் நான் எங்குச் சென்றாலும் இளைஞர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என பல ஆண்டுகளாக அழைக்கிறார்கள். தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்து, மொழிப்பற்றோடு தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரசியல் களம் காண்போம் என்ற உங்களுடைய கோரிக்கை வாசகத்தை நான் ஆமோதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், இளைஞர்களே நீங்களும் பெருந்தலைவர் காமராஜர் போல நேர்மையாக, அண்ணா போல எளிமையாக இருக்க வேண்டும். ஜாதி, மத வேறுபாடுகளை உடைத்தெறியக் கூடிய லட்சிய உணர்வாளர்களாக இருக்க வேண்டும். சுயநலத்துடன் பணியாற்றக்கூடாது. மற்ற கட்சிகள் போல வெடி கலாச்சாரம் கூடாது. லட்சியம் கொள்கை உணர்வோடு புதிய சமுதாயம் அமைத்திட நீங்கள் புறப்பட்டால், அதற்கு நான் வலதுகரமாக இருந்து துணை நிற்பேன் என்று பேசினார்.

மிகவும் கடினமான பணி ஊழல் எதிர்ப்பு பணி என்று தெரிவித்த அவர் தனது பணிகாலத்தில் தான்பட்ட சிரமங்களையும், அதனால் ஏற்பட்ட பணியிட மாற்றங்கள் பற்றியும் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *