மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து: தெற்கே வெளிப்பட்ட மேற்கின் அழுத்தம்!

சிஏஏ போராட்ட வழக்குகள்  ரத்து: தெற்கே வெளிப்பட்ட மேற்கின் அழுத்தம்!

சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை அரசு கைவிடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 19) நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.

தென் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குப் பின்னால் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் அதாவது கொங்கு மண்டலம் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுனாபுரத்தில் 1.75 ஏக்கர் நிலத்தை அரசிடம் பெற்று அதில் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் அமைக்கப்பட்டது.

இந்த கபர்ஸ்தானை இஸ்லாமியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபர்ஸ்தான் சாவியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்புகளிடம் வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் கோவை ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளருமான அப்துல் ஜப்பார், “இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு விளங்கி வருகிறது. ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை உயர்த்தி வழங்கியது, 20 ஆண்டுக் கால கோரிக்கையான கபர்ஸ்தான் மற்றும் பல கோரிக்கைகளை நிறைவேற்றினாலும் முக்கியமான ஒன்று பாக்கியுள்ளது” என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.

“மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமியர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளால் தொழுகைக்கு கூட செல்ல முடியாமல் நாங்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறோம். அதனால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய நீங்கள் தமிழக முதல்வரிடம் ஆவன செய்ய வேண்டும், நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக எங்கள் கோரிக்கை நிறைவேறும்” என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் அப்துல் ஜப்பார் கோரிக்கை வைத்தார். இதை செய்தால் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருப்போம் என்றும் அவர் பேசினார்.

அவருக்கு மேடையிலேயே பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கை ரத்து வேண்டும் என நீங்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை நான் முதல்வரின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வேன். உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பார்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அப்துல் ஜப்பார் உள்ளிட்ட இஸ்லாமியர்களின் கோரிக்கையை அன்றே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எஸ்.பி. வேலுமணி. இதே ரீதியான கோரிக்கைகளை முன்பு அன்வர்ராஜா போன்ற அதிமுக சீனியர்களும் முதல்வருக்கு பல மாதம் முன்பே வைத்திருந்தார்கள்.

எனினும் இப்போது மேற்கில் இருந்து எஸ்.பி.வேலுமணி கொடுத்த அழுத்தம் முதல்வரின் தென்மாவட்ட அறிவிப்பில் வெளிப்பட்டது.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 20 பிப் 2021