மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

லிஸ்ட்ல இல்லையே பேரு...!’ திமுகவில் வசூல் வேட்டை ஜோரு! விருப்ப மனு கொடுப்போரிடம் ‘கறக்கும்’ உடன்பிறப்புகள்!

லிஸ்ட்ல இல்லையே பேரு...!’ திமுகவில் வசூல் வேட்டை ஜோரு! விருப்ப மனு கொடுப்போரிடம் ‘கறக்கும்’ உடன்பிறப்புகள்!

ஒரு தொகுதியைக் கூட விட்டு வைக்காமல், 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அவருக்கு ‘ஐபேக்’ ஆட்கள் என்ன ரிப்போர்ட் கொடுத்தார்கள், எந்த நம்பிக்கையில் இப்படிச் சொல்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் சொல்வதை திமுக நிர்வாகிகள் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எம்எல்ஏ, அமைச்சர், கவுன்சிலர், மேயர் என கலர் கலரான கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதையும் தாண்டி கமிஷன், காண்ட்ராக்ட் என்று அவர்கள் இப்போதே திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருப்பதுதான் கட்சியின் எதிர்காலத்தைக் காவு வாங்கி விடுமோ என்று கட்சியின் மீது உண்மையான அக்கறையுள்ள சீனியர்கள் பலரும் சீரியஸ் ஆக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவலைப்படுவதற்கும் ஒரு காரணமும் உருவாகியிருக்கிறது. திமுகவில் இப்போதே தீவிரமாக நடந்து வரும் வசூல்வேட்டைதான் அது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனு கொடுக்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதியிலிருந்து அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வாங்கப்படுகின்றன. வரும் 24 ஆம் தேதி வரை இந்த மனுக்கள் வாங்கப்படவுள்ளன. ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கிப் பூர்த்தி செய்து, ரூ.25 ஆயிரம் கட்டணத்துடன் விருப்ப மனுவை பலரும் சமர்ப்பித்து வருகின்றனர். தனித் தொகுதிகளுக்கும், பெண்களுக்கும் ரூ.15 ஆயிரம் கட்டணம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விருப்ப மனு வாங்கத் துவங்கிய முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் அலுவலக நிர்வாகிகள் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். தலைமைக்கழகத்தில் விருப்ப மனு கொடுப்பதற்காக சென்னையில் திமுக நிர்வாகிகள் குவிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் விருப்ப மனுவை சமர்ப்பித்து விட்டு ஊருக்குக் கிளம்புவதில்லை. அவரவர்க்குத் தெரிந்த திமுக தலைவர்கள் யாரையாவது பார்த்து, கொஞ்சம் காய் நகர்த்திவிட்டுப் போவோம் என்று சிலரைச் சந்தித்தும் வருகின்றனர்.

துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து, ‘இந்த முறை சீட் கிடைச்சா கண்டிப்பா ஜெயிச்சிரலாம். எப்படியாவது சீட் வாங்கிட்டாப் போதும்ணே. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைண்ணே’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர், ‘‘பார்க்கலாம்பா...இந்த முறை ஐபேக் கொடுக்குற லிஸ்ட்லதான் தலைவர் ஆள் எடுக்கப் போறாரு. அந்த லிஸ்ட்ல உன் பேரு இருந்தா முயற்சி பண்ணுவோம். இல்லைன்னா ஒண்ணும் செய்ய முடியாது!’’ என்று பளிச்சென்று சொல்லி விடுகின்றனர். இன்னும் சிலர், தங்களுடைய கெத்தைக் காண்பிப்பதற்காக, ‘‘நீ அந்த கோஷ்டி ஆளாச்சே. நான் சீட் வாங்கிக்கொடுத்தாலும் ஜெயிச்ச பிறகு நம்மளை மதிக்கமாட்டியே!’’ என்று மிரட்டுவதாகவும் அறிவாலயத்தில் செவிகளில் செய்திகள் வந்து விழுகின்றன.

சீட் வாங்கியே தீர வேண்டுமென்று நினைக்கும் திமுக நிர்வாகிகள் பலரும், ‘‘அண்ணே! அப்படியெல்லாம் கிடையாதுண்ணே...உங்க கால்லயே விழுந்து கிடப்பேன்ணே...!’’ என்று பதில் டயலாக் பேசுகின்றனர். கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்கள் பலரும் இப்படி கட்சி நிர்வாகிகளை ‘டீல்’ செய்து கொண்டிருக்க, இந்தத் தலைவர்களுக்கும், கட்சியின் மிக முக்கியத் தலைகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவுள்ள சிலர், கட்சி நிர்வாகிகளை வேறு விதமாக ‘டீல்’ பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அறிவாலயத்தில் உள்ள திமுக நிர்வாகி ஒருவர் மிகவும் வருத்தத்துடன் நம்மிடம் பேசினார்...

‘ஒவ்வொரு தொகுதியிலும் ‘ஐபேக்’ நிறுவனம் பல கட்டங்களாக பல்வேறு ஆய்வுகளைச் செய்துதான், தொகுதிக்கு 3 பேர் வீதமாக பட்டியல் கொடுத்திருக்கிறது. அதைத் தாண்டி ஒருவரை யாராலும் பரிந்துரை செய்யவோ, மூவரில் ஒருவரை உறுதி செய்யவோ முடியாது. இந்தப் பட்டியலை வைத்து கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் கலந்து பேசிவிட்டு, நேர்காணலுக்குப் பின்புதான் ஒருவரை தலைவர் முடிவு செய்யப் போகிறார். ஆனால் அறிவாலயத்திற்கே சம்மந்தமில்லாத சிலர், ‘அவருக்கு நான் ரொம்ப நெருக்கம்’, ‘நான் சொன்னா தட்டவே மாட்டாங்க’ என்றெல்லாம் பில்டப் கொடுத்து கட்சி நிர்வாகிகளிடம் காசு கறப்பதாகத் தெரியவந்திருக்கிறது. ஐ பேக் கொடுத்த பட்டியலில் யார் யாருடைய பெயர்கள் இருக்கின்றன என்பது எங்களுக்கே தெரியாத நிலையில், சிலர், ‘அந்தத் தொகுதி லிஸ்ட்ல உங்க பேரு இல்லையே. எப்படியாவது சேர்த்துரலாம்’ என்று சொல்லி கலெக்சன் நடத்திக் கொண்டிருக்கின்றனர். சென்னையில் பல ஓட்டல்களில் ரூம் போட்டு இந்த வசூல் வேட்டை நடக்கிறது. இது கட்சியின் பெயரைக் கெடுத்துவிடும். தலைவர் வீட்டிலுள்ளவர்களின் பெயர்களையும் சிலர் பயன்படுத்துவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இதை தலைவரின் கவனத்துக்கு எப்படிக் கொண்டு செல்வது என்பதுதான் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் மீது இப்போதே கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். இல்லாவிட்டால் தேவையின்றி மீண்டும் ஒரு முறை வெற்றி மயிரிழையில் கைநழுவும் அபாயம் இருக்கிறது!’’ என்றார்.

நாம் விசாரித்த வரையிலும் இப்படியொரு வசூலுக்கான பேரங்கள் நடந்து கொண்டிருப்பதாகத்தான் தெரிய வந்துள்ளது. ஆனால் பணப்பரிமாற்றம் எதுவும் நடந்திருப்பதாகத் தகவல்கள் இல்லை. திமுக தலைமை இதை உடனே தடுக்காவிட்டால் மிகப்பெரிய வசூல் மேளா நடக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி பணம் கொடுத்த சிலர் சீட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து, தேர்தலுக்கு முன் போர்க்கொடி துாக்கினால் அது கட்சிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் நிச்சயம். தேர்தல் களத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் ஸ்டாலின், இத்தகைய தவறுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்பதே கட்சியின் மீது உண்மையான பற்றுள்ள உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருக்கிறது.

சீட் கொடுப்பதிலேயே வசூல் வேட்டை நடந்தால்...இப்பவே கண்ணைக் கட்டுதே!

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

சனி 20 பிப் 2021