மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 பிப் 2021

நாராயணசாமி: சட்டமன்றத்தைக் கூட்டி ராஜினாமா?

நாராயணசாமி: சட்டமன்றத்தைக் கூட்டி ராஜினாமா?

பாஜக நெருக்கடியால் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தைக் கூட்டி கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வது என்று ரகசியத் திட்டம் போட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதுச்சேரியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 15, திமுக 2, மாஹி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ ராம்சந்திரன் உட்பட 18 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து முதல்வரானார் நாராயணசாமி.

காங்கிரஸ் ஆட்சிக்கு செக் வைக்கும் விதமாகத் துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்தது மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு. முதல்வர் பதவியை நம்பியிருந்த நமச்சிவாயத்துக்கு ஏமாற்றம் கிடைத்ததால் அன்று முதல் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்துவந்தார்கள். நமச்சிவாயத்துக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் விரிசல்கள் ஏற்படுவதை அறிந்த பாஜக பிரமுகர்கள், நமச்சிவாயத்துடன் தொடர்பிலிருந்து வந்தார்கள்.

நாராயணசாமி முதல்வர் பதவியேற்றதிலிருந்தே , நமச்சிவாயம் பாஜகவுக்கு தாவுகிறார், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குப் போகிறார், ஆட்சி கவிழப்போகிறது என்று நாளுக்கு ஒரு வதந்தி பரவிவந்தது.

நான்கு வருட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அமைச்சர் நமச்சிவாயமும், தீபாஞ்சான் எம்.எல்.ஏ இருவரும் அண்மையில் பாஜகவுக்கு மாறினார்கள். அவர்களை தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் இருவரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேல் கட்சிக்கு எதிராகப் பேசுகிறார் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில் நமச்சிவாயமும் பாஜக நியமன எம்.எல்.ஏ. சாமிநாதனும் இரண்டு நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு திரும்பினார்கள். அவர்களிடம் முக்கியமான அசைன்மென்ட்களை கொடுத்து அனுப்பியுள்ளார் அமித் ஷா.

அன்றைய தினமே என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் ஒன்று சேர்ந்து ராஜ்நிவாஸ் மாளிகைக்குச் சென்று நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற மனுவைத் துணைநிலை ஆளுநர் தனி செயலாளர் தேவநீதி தாஸிடம் கொடுத்தார்கள்.

அந்த மனு நேற்று 18ஆம் தேதி காலையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வைக்கு வைக்கப்பட்டது. அலசி ஆராய்ந்து முதல்வர் நாராயணசாமி 22ஆம் தேதி சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று மூன்று நாள் கெடு கொடுத்துள்ளார்.

இதை எதிர்பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி தற்போது தன்னுடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாகப் பேசினார். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும் கூட்ட இருக்கிறார்.

வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க கடந்த ஐந்து வருடங்களாக பாஜக என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துவந்தது, ஆட்சிக்கு ஆளுநர் மூலம் கொடுத்த நெருக்கடிகள், பாஜக செய்யும் ஜனநாயக படுகொலைகள் அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு, முதல்வர் உட்பட அனைவரும் ராஜினாமா செய்வது என்று திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

-வணங்காமுடி

'ராகுல் சென்றதும் ராஜினாமா செய்யுங்கள்' நாராயணசாமி உருக்கம்!

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 19 பிப் 2021