மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

ஓ.பி.எஸ். சொத்து மதிப்பு ! தேனியில் தாக்கிய ஸ்டாலின்

ஓ.பி.எஸ்.  சொத்து மதிப்பு !    தேனியில்  தாக்கிய ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் பங்கு பெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 18) தேனியில் நடந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்டாலின் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்கள் சிலரின் கோரிக்கைகளைக் குறிப்பிட்டு பதிலளித்துப் பேசிய ஸ்டாலின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தைக் கடுமையாக தாக்கினார்.

“தேனி என்பது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருக்கக் கூடிய ஒ.பன்னீர்செல்வம் பிறந்த வட்டாரம்! இந்த நாட்டுக்கு மூன்று முறை முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது செய்தாரா என்றால் இல்லை! இதுவும் அதிமுக ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட வட்டாரமாக, மாவட்டமாகத் தான் இருக்கிறது என்பது உங்கள் பலரது கோரிக்கைகள் மூலமாகத் தெரிகிறது.

முல்லைப்பெரியாறு உரிமையை நிலைநாட்டி உள்ளாரா என்றால் இல்லை! பி.டி.ஆர். கால்வாயை விரிவுபடுத்துவதற்கான வாக்குறுதியை பத்தாண்டு காலமாக அவர் நிறைவேற்றவில்லை. பல்வேறு கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தரக் குடிநீர் வசதியை செய்து தரவில்லை! முதியோர் பென்சன் பிரச்னையைக் கூட பன்னீர்செல்வம் தீர்க்கவில்லை! இப்படி ஏராளமான கோரிக்கைகளை இந்த வட்டாரத்துக்கு நிறைவேற்றிக் கொடுக்காத பன்னீர் செல்வம் தான் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்”என்ற ஸ்டாலின் தொடர்ந்து பேசும்போது,

“ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை! ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கிறாரா? இல்லை! அவருக்கு இரண்டு முறை முதலமைச்சர் பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் சேர்ந்தார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை இதுவரை தீர்க்கவில்லை. மூன்றாவது முறை அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தவர் சசிகலா. அவருக்கும் உண்மையாக இல்லை. அவரை எதிர்த்தே தனியாக போனார்.

அடுத்து பழனிசாமியிடம் போய் சேர்ந்து துணை முதலமைச்சர் ஆனார். இப்போது அவருக்கும் உண்மையாக இல்லை. தான் முதலமைச்சர் ஆவதற்காக பழனிசாமியை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்! ஊரை ஏமாற்றுவதற்காக 'அயோத்திக்கு கிடைத்த பரதனைப் போல தமிழகத்துக்கு கிடைத்த ஓ.பி.எஸ்' என்று விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ராமன், பரதன்,அயோத்தி என்று சொன்னால் தான் பாஜகவுக்கு புரியும் என்பதால் இப்படி விளம்பரம் கொடுக்கிறார். இவர் பரதன் என்றால் அதை பக்தர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அயோத்தியைப் பற்றி பேசுவதற்கு பன்னீர்செல்வத்துக்கு அருகதை இருக்கிறதா? என்பது தான் முக்கியமான கேள்வி!

சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முடக்கப்படுகிறது என்றால் அவர்களுக்கு அப்போது வசூல் செய்து கொடுத்தவர்கள் யார்? இந்த பழனிசாமியும் பன்னீரும் தானே? ஜெயலலிதா மரணம் அடையும் வரை, சசிகலா சிறைக்குப் போகும் வரை இவர்களிடம் கைகட்டி நின்றவர்கள் தானே பழனிசாமியும் பன்னீரும்? இன்றைக்கு பிரிந்து விட்டதால் உங்கள் இருவருக்கும் அவர்களது பாவத்தில் பங்கில்லை என்று ஆகிவிடுமா?

இப்போதும் தன்னை நரேந்திர மோடி முதலமைச்சர் ஆக்கிவிட மாட்டாரா? சசிகலா முதலமைச்சர் ஆக அறிவித்துவிட மாட்டாரா என்று துடிக்கிறார் பன்னீர்செல்வம்”என்று சாடு சாடென சாடிய ஸ்டாலின், அடுத்து ஓபிஎஸ்சின் சொத்துக் கணக்குக்கு வந்தார்.

“ 2001-ம் ஆண்டு, பன்னீர்செல்வம் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல் அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் எனப் பதவி வகித்த ஐந்து வருடங்களில் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இன்றைக்கு பன்னீரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இதை விசாரிக்க வலியுறுத்தித்தான், தி.மு.க சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பது அவர்கள் ஆட்சி. லஞ்ச ஒழிப்புத்துறை அ.தி.மு.க அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. எனவே, பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாற்றுகள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். அது நமது அரசு அமைந்தவுடன் நிச்சயமாக நடந்தே தீரும்.

அமெரிக்க நிறுவனமே இவருக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட விவகாரத்தை நாங்கள், ஆளுநரிடம் புகார் மனுவாகக் கொடுத்துள்ளோம்! இந்த ஊழல் முகத்தை மறைப்பதற்காகத் தான் பரதன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பன்னீர்செல்வம்! 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' - என்று சில மாதங்களுக்கு முன்னால் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்! இப்போது நான் சொல்கிறேன் ‘இனி எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்”என்று பேசினார் ஸ்டாலின்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 18 பிப் 2021