மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

ஓட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமியின் மகன் போட்டி?

ஓட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமியின் மகன்  போட்டி?

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட ரீதியாக அரசியல் மாநாடுகளை நடத்திவருகிறார் அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்த வகையில் நேற்று பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு தூத்துக்குடியில் புதிய தமிழகத்தின் அரசியல் மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். இம்மாநாட்டில் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் கலந்துகொண்டார்

1996 இல் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி 27 விழுக்காடு வாக்குகள் வாங்கி பெரும் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் கொடியன்குளம் பிரச்சனையை முன்னிறுத்தி சுயேச்சையாக நின்று வென்றார் கிருஷ்ணசாமி. 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதே ஓட்டப்பிடாரத்தில் வென்றார்.

இந்தப் பின்னணியில் நேற்று நடந்த மாநாட்டில் ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் புதிய தமிழகம் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் வலுவாக தென்பட்டது.

இந்த பின்னணியில் நேற்றைய கூட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம்,

“96 தேர்தலின்போது எனக்கு ஐந்து வயது. அப்போதில் இருந்தே ஓட்டபிடாரம் தொகுதிக்குக் கூட்டி வந்திருக்கிறார் தந்தை. என்னை டூர் அழைத்துச் சென்றதைவிட இந்தத் தொகுதிக்குத்தான் என் தந்தையான தலைவர் அதிகமாக கூட்டிவந்திருக்கிறார்.

.

தேவேந்திர குலத்தின் அரசியல் இந்த மண்ணில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது. இந்த சமுதாயம் நினைத்தால் யார் துணையும் இல்லாமல் ஒருவரை சட்டமன்றம் அனுப்பலாம் என்பதை நிரூபித்த மண் இந்த மண்.

ஒருத்தர் விடியலைத் தருகிறேன் என்று சொல்லி வருகிறார். அவர் அப்பா ஐந்து முறை ஆண்டபோது விடியல் வரவில்லையா? இன்னொருத்தர் வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொல்லி வருகிறார். யார் வெற்றி நடைபோடுகிறார்கள்? யார் வளர்ந்திருக்கிறார்கள்?” என்று திமுக, அதிமுகவைத் தாக்கிய ஷ்யாம் கிருஷ்ணசாமி தொடர்ந்து பேசும்போது,

“நாம் எப்போதும் கோரிக்கை வைக்கும் இடத்திலேயே இருக்கக் கூடாது. நாம் அதிகாரத்துக்கு வந்து எல்லாருக்கும் செய்ய வேண்டும். தலைவர் இருமுறை இந்த சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிறார்.

அரசியல் அதிகாரம் சாதாரணமாக வந்துவிடாது. யாரும் நம் கையில் தூக்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். இதையெல்லாம் உணர்ந்து புதிய தமிழகத்தின் கொள்கையை உணர்ந்து இளைஞர்கள் திரள வேண்டும். நாம் இலக்கை நோக்கி போக வேண்டும் என்றால் ஹைவேயில்தான் போகவேண்டும். சந்துகளில் போகக் கூடாது. ஹைவே என்பது புதிய தமிழகம், சந்துகள் என்பது யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று பேசி இச்சமுதாயத்துக்குள்ளேயே இருக்கும் பிற அமைப்புகளை சாடியிருக்கிறார் ஷ்யாம்,

மேலும், “பொதுப்பெயர் என்று பிரதமர் அறிவித்தது போதாது. பட்டியல் வெளியேற்றம்தான் இறுதி இலக்கு” என்று பேசினார் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

அடுத்து மாநாட்டில் நிறைவுரையாற்றிய டாக்டர் கிருஷ்ணசாமி,

“ தேவேந்திர குல வேளாளர்க ள் என்ற பொதுப் பெயர் அளித்ததற்காக மத்திய அரசுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அதே நேரம் பட்டியல் வெளியேற்றம் தான் எங்கள் இறுதி இலக்கு என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நமக்கென்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாறு இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமை கொண்ட திருக்கோயில்களில் எல்லாம் முதல் மரியாதை தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு தான். அதன் பிறகான இஸ்லாமிய படையெடுப்புகளால் நம் நம் நிலம் பிடுங்கப்பட்டு நம் அடிமைகளாக்கப்பட்டோம்.

நாம் காந்தி குறிப்பிட்டது போல ஹரிஜன் கிடையாது. நாம் அரசன். இந்த வரலாற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பிற கட்சிகளுக்கு உழைத்தது போதும். இந்த சமூகத்தின் அடையாளம் புதிய தமிழகம் தான். ஓட்டப்பிடாரம் என்பதே புதிய தமிழகத்தின் பிறந்த மண். இது நம் கோட்டை. கடந்த தேர்தலில் ஒருத்தருக்கு வெற்றியை கொடுத்தீர்களே... அந்த தளபதி உங்களுக்காக என்ன செய்தார்? தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

உங்களது வீட்டு சுவர்களை கூட பிற கட்சியினரின் சின்னங்களை எழுதிட அனுமதிக்காதீர்கள். ஒவ்வொரு கிராம நாட்டாமைக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கோயில் கட்டித் தருகிறேன், கோயில் சுவர் கட்டித் தருகிறேன் என்று சொல்வதற்காக கிராமத்தை விலை பேசி விடாதீர்கள்.

புதிய தமிழகம் மீண்டும் ஓட்டப்பிடாரத்தில் வரலாறு படைக்க வேண்டும். 96 வெற்றி மீண்டும் திரும்ப வேண்டும். நமது சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்து நமக்காக வேலை செய்தால் பிற சமுதாயத்தினரும் நமக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள். எனவே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டுங்கள்.இனி அடுத்தடுத்த மாவட்ட மாநாடுகள் நடத்த வேண்டி உள்ளது. எனவே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு நான் ஒவ்வொரு கிராமமாக வர வாய்ப்பு இல்லாவிட்டாலும் தம்பி ஷ்யாம் வருவார்"என்று பேசியிருக்கிறார் கிருஷ்ணசாமி.

எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடாத பட்சத்தில், அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி வேட்பாளராக இருக்கலாம் என்கிறார்கள் புதிய தமிழகம் வட்டாரத்தினர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 18 பிப் 2021