மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

முக்கிய துறைகளுக்கு அதிகாரிகள் இல்லையா? கடலூர் மாவட்ட நிலவரம்!

முக்கிய துறைகளுக்கு அதிகாரிகள் இல்லையா? கடலூர் மாவட்ட நிலவரம்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழுவினர் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது பல துறைகளுக்கு உரிய அதிகாரிகள் இல்லையென்ற விஷயம் தெரியவந்திருக்கிறது.

சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இருக்கிறார். அவர் வராத காரணத்தால், குழுவுக்கு மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரி முன்னிலையில், பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் குன்னம் ராமச்சந்திரன், சங்கராபுரம் உதயசூரியன், மைலாப்பூர் தொகுதி ஆர்.நடராஜ், டி.ஆர்.பி.ராஜா உட்பட சில உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்ரவரி 16ஆம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

துவக்கத்திலேயே குழு தலைவர் பழனிவேல் தியாகராஜன், “துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் உள்ளே இருக்கவேண்டாம். பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் வெளியே போய்விடுங்கள்”என்று கூறி வெளியே அனுப்பிவிட்டார்.

மேலும் அதிகாரிகளைப் பார்த்து, “உங்களுக்குத் தெரிந்தால் தெரியும் என்று சொல்லுங்கள். தவறாகவோ பொய்யாகவோ சொல்லாதீர்கள்” என்று எச்சரிக்கையோடே கூட்டத்தைத் தொடங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.பி. ராஜா பேசும்போது, “இந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரைத் தவிரப் பல துறைகளில் மாவட்ட அதிகாரிகள் பலரும் இரண்டு மூன்று துறைக்கு இன் ஜார்ஜ் (பொறுப்பு அதிகாரி) பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். டி.ஆர்.ஒ, உள்ளாட்சித் துறையில் மாவட்ட திட்ட அதிகாரி (பிடி), ஆதிதிராவிடர் மாவட்ட அதிகாரி, பி ஏ ஜெனரலாக இருக்கிறார். இதுபோன்ற துறைகளுக்கு தனியான அதிகாரிகள் இல்லாமல், சிறப்பான நிர்வாகம் எப்படிச் செய்யமுடியும்?” என்றார்.

மேடையிலிருந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியை அழைத்த, குழு உறுப்பினரும் அதிமுக எம்.எல்.ஏ,வுமான டாக்டர் பரமசிவம், “பல முக்கியத் துறைகளுக்கு உரிய அதிகாரிகள் இல்லை என்பதை மேலிடத்துக்கு தெரியப்படுத்தினிங்களா?” என்ற கேட்டபோது, “தெரியப்படுத்தியாச்சு சார், ஒவ்வொரு துறையாக போஸ்டிங் நிரப்பி வருகிறார்கள்” என்றார்.

நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா.இராஜேந்திரன் பேசும்போது, “எனது தொகுதியில் வடக்குத்து பட்டியலின மக்களுக்குச் சுடுகாட்டு பாதை வேண்டி ஆண்டுக்கணக்கில் கேட்டுவருகிறேன், இன்னும் கிடைத்தபாடில்லை” என்றார். உடனே டிஆர்பி ராஜா, ‘எதனால் சுடுகாடு பாதை பணி தடைப்பட்டிருக்கிறது?” என்று கேட்க, “நிலம் எடுக்க வேண்டியுள்ளது, நிலம் கொடுப்பவர்களுக்கு நிதி கொடுக்கவேண்டும். அதை அதிகாரிகள் அக்கறையோடும் வேகமாகவும் செய்தால் விரைவில் முடிக்கலாம்” என்றார்.

பல்வேறு காரணங்களாலும் புகார்களாலும் நிலுவையில் உள்ள பணிகளைச் சரிசெய்யவும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைச் சரிவரப் பயன்படுத்தி திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு உரிய நேரத்தில் கொண்டுவரவும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியது சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு.

நிறைவாக பேசிய பழனிவேல் தியாகராஜன், “அரசியல்வாதிகள் நாங்கள் வருவோம் போவோம், அதிகாரிகள் நீங்கள் நிரந்தரமாக இருப்பவர்கள். மக்களுக்கான சேவைகளை பணிகளை நேர்மையாகச் செய்யுங்கள்.எதுவும் நிரந்தரம் இல்லை மாற்றங்கள் நிச்சயம் வரும், கவனமாக உங்கள் பணிகளை நேர்மையாகச் செய்யுங்கள்” என்றார்.

பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான வந்த குழுவால் கடலூர் மாவட்ட அதிகாரிகள் கொஞ்சம் சுறுசுறுப்பாகியிருப்பதாக சொல்கிறார்கள் மாவட்ட அதிகாரிகள்.

-வணங்காமுடி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 17 பிப் 2021