மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

கமலை இழுக்க சபரீசன் விடாமுயற்சி: காரணம் 12 ஆயிரம்!

கமலை இழுக்க சபரீசன் விடாமுயற்சி: காரணம் 12 ஆயிரம்!

இந்திய அரசியல் வரலாற்றில் பல ஆயிரம் கட்சிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்சி துவக்கத்துக்குப் பின்னாலும் பொதுநலமாகவும், சுயநலமாகவும் பல காரணங்கள் இருந்திருக்கும். ஆனால், சினிமாவை மட்டுமே அதி தீவிரமாக நேசித்துக்கொண்டிருந்த கமல், அரசியல் கட்சியை ஆரம்பித்தபோது, தமிழகமே அதிர்ந்து போனது. அவர் என்ன நோக்கத்தில் எந்த நம்பிக்கையில் புதிய கட்சியைத் துவக்கினார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், அவரைப் பின்பற்றுவோருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. கலைஞர், ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில், தமிழகத்தில் நல்லதொரு அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக அவர் நினைத்ததன் வெளிப்பாடுதான், அவர் திடீரென அரசியலில் குதித்ததற்கான காரணம் என்று ஊடகங்கள் விமர்சித்தன.

ஆனால், எந்த விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல், மத்திய, மாநில ஆளும்கட்சிகளையும் கடுமையாகச் சாடி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை கமல் விளக்கினார். அவருடைய பேச்சை, அவர் கட்சி துவக்கியதற்குச் சொன்ன காரணத்தை படித்த, நகர்ப்புற மக்கள் பலரும் நம்பினர். அதன் விளைவாக, 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், கமலின் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும் பல ஆண்டுகளாகச் செய்ய முடியாத சாதனை அது.

கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரையிலும், திராவிடக் கட்சிகளால்தான் தமிழகமே பின் தங்கி விட்டது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியினரின் பிரதான பிரச்சாரமாக இருந்தது. அதே குற்றச்சாட்டை முன்வைத்துத்தான் கமலும் கட்சியைத் துவக்கியதால்தான், அவர் பிஜேபியின் ‘பி டீம்’ என்ற சந்தேகம் கிளம்பியது. பாரதிய ஜனதாவின் பல்வேறு திட்டங்களையும் அவர் கடுமையாக எதிர்த்தபோதும்கூட, பலருக்கும் அதில் பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் கமலின் தொடர்ச்சியான பேட்டிகள், பேச்சுகள், நடவடிக்கைகள், அவர் யாருக்கும் ‘பி டீம்’ இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்வதாக இருந்தன. திராவிடக் கட்சிகளுடன் தேசியக் கட்சிகளின் செயல்பாட்டையும் அவர் வெளுத்து வாங்கினார்.

எல்லோரையும் எதிர்த்து அரசியல் செய்து, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது உடனே நடக்கிற காரியமில்லை. அதுவரையிலும் கட்சியை நடத்துவதற்கு பல விஷயங்களில் பணிந்து, குனிந்துதான் செல்ல வேண்டியிருக்கும். கமல் அப்படிச் செல்வாரா என்பது தெரியவில்லை. ஆனால், கமலுக்கு இருக்கும் வாக்கு வங்கியையும், அவருக்கு அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கையும் பார்த்து அவரை தங்கள் கூட்டணிக்குள் இழுப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. அதிலும் திமுக தரப்பில்தான் இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகத்தின் நடவடிக்கைகளை அறிந்த ஒருவரிடம் பேசினோம்...

‘‘கமலுடன் சபரீசன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான். அதற்குக் காரணமும் இருக்கிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, போன்ற நகரப்பகுதிகளில் கமல் கட்சி, நல்ல வாக்கு வாங்கியிருக்கிறது. மொத்தம் 34 தொகுதிகளில் 6 சதவிகிதமும், 15 தொகுதிகளில் 10 சதவிகிதமும், 6 தொகுதிகளில் 13 சதவிகிதமும் வாங்கியுள்ளனர். சராசரியாகப் பார்த்தால், 55 தொகுதிகளில் 6 சதவிகிதம் வாங்கியுள்ளனர். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இது 12 ஆயிரம் அல்லது அதற்கு மேலான வாக்குகளாகும். பல தொகுதிகளில் வெற்றியின் திசையைத் திருப்பிவிட்டது இந்த வாக்குகள்தான்.

ஒரு வேளை அவர் திமுகவிற்கு வந்தால் இந்த வாக்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் திமுக, அதிமுக இரண்டும் பிடிக்காமல் அவருக்கு வாக்களித்தவர்கள் 2 சதவிகிதம் பேர் இருப்பார்கள். ஆனால் அத்தகைய மனநிலையில் உள்ள வாக்காளர்களைத் தவிர்த்து, கமலுக்காக மட்டுமே இருக்கும் வாக்குகள் 4 சதவிகிதம் என்று வைத்தால்கூட, அது 8,000 வாக்குகளாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனதற்கு பல தொகுதிகளில் எட்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசமே காரணமாக இருந்ததால், இதை விட்டு விடக்கூடாது என்றுதான் கமலுடன் சபரீசன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி கைநழுவிப் போனதற்கே இதுபோன்று மிகக்குறைவான வாக்கு வித்தியாசம்தான் காரணமாக இருந்தது. அதனால் ஆட்சியை முடிவு செய்யும் அதிகாரம் தங்களிடம் இருப்பதாக கமல் நினைத்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். எப்படியும் அவர் திமுக கூட்டணிக்குள் வந்துவிடுவார் என்றுதான் நாங்கள் நம்புகிறோம்!’’ என்று விளக்கினார்கள்.

ரஜினி படம் தோற்றபோதெல்லாம் கமல் படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அரசியலே வேண்டாமென்று ரஜினி ஒதுங்கிவிட்ட நிலையில் கமலின் அரசியல் கட்சியும் கவனம் ஈர்க்கத் துவங்கியுள்ளது. அவர் எந்தக் கூட்டணிக்கு வந்தாலும் வராவிட்டாலும் கண்டிப்பாக பல படிகள் முன்னேறுவார் என்பது நிச்சயம்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 16 பிப் 2021