மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

சசிகலா தேர்தலில் நிற்க முடியுமா?

சசிகலா தேர்தலில் நிற்க முடியுமா?

உச்ச நீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் நான்கு வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, அதை முடித்துவிட்டு கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் சசிகலா தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சில நாட்கள் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அமமுக மாவட்டச் செயலாளர் மா. சேகர், திருமண நிகழ்வுக்கு வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“அமமுகவின், அம்மாவின் உண்மையான தொண்டர்களுக்குத்தான் வரும் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். அமமுக மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம். சசிகலா தேர்தலில் நிற்பது பற்றி சட்ட ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”என்று பதில் கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

கிரிமினல் வழக்கில் நான்கு வருடம் சிறை தண்டனை பெற்ற சசிகலா தண்டனை முடிந்து ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்பதுதான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.. அதாவது தண்டனை பெற்ற சசிகலா, 2027 வரை தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த நிலையில் டிடிவி தினகரன், :சசிகலா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியிருப்பதன் பின்னணி பற்றி சட்ட, அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம்.

“மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சசிகலாவால் தேர்தலில் இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக அதிகாரத்தால் வேண்டுமானால் சசிகலாவின் தேர்தல் தடைக் காலம் குறைக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம். தேர்தல் ஆணையம் இப்போது சுயேச்சையான அமைப்பு என்று கருதப்பட்டு வந்தாலும் அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது.

எனவே மத்திய பாஜக அரசின் தயவும், அனுக்ரஹமும் இருந்தால் மட்டுமே சசிகலா தேர்தலில் போட்டியிட முடியும்.

இதற்கு ஏற்கனவே இரு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

25 வருடங்களாக சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிக்கிம் தேசிய ஜனநாயக முன்னணியைத் தோற்கடித்து, கடந்த 2019 மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி கட்சி வெற்றிபெற்றது. சிக்கிம் கிராந்திகாரி கட்சி பாஜகவின் கூட்டணிக் கட்சியாகும். இந்நிலையில் பிரேம் சிங் தமங் அதே ஆண்டு மே 27 ஆம் தேதி சிக்கிம் மாநில முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

அப்போதே இது அரசியல் சாசனத்துக்கு சவால் விடும் செயல் என்று விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் பிரேம் சிங் தமங் 1990 ஆம் ஆண்டு சிக்கிம் கால் நடைத்துறை அமைச்சராக இருக்கும்போது ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வருடம் சிறை தண்டனை அளித்தது. இதை எதிர்த்து சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றபோதும் உயர் நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்து பிரேம் சிங் தமங் க்கு சிறையை உறுதி செய்தது. இதன்படி 2017 ஆம் ஆண்டு சிறை சென்ற தமங் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையானார். ஆனாலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்பதால் தமன் தேர்தலில் நிற்கவில்லை.

ஆனால் பாஜகவோடு கூட்டணி வைத்து அவரது கட்சி வெற்றிபெற்ற நிலையில் தமங் சிக்கிம் மாநில ஆளுநரால் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் கேட்டு மத்திய அரசுக்கும்,சிக்கிம் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில்தான் கடந்த 2019ஜூலை மாதம் தமன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘எனக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு கால தடையை தேர்தல் ஆணையம் தனது தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் குறைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார் தமங்.

இந்த நிலையில் இந்த மனு மீது 2019 செப்டம்பர் 29 ஆம் தேதி தேர்தல் ஆணையம், பிரேம் சிங் தமங் க்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு கால தடையை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக அதிகாரம் மூலம் ஒரு ஆண்டு ஒரு மாதமாக குறைத்து உத்தரவிட்டது. இதன் மூலம் தமனுக்கு விதிக்கப்பட்ட தேர்தலில் நிற்கும் தடை செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைந்தது.

இதேபோல, தேர்தல் ஆணையம் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி சிக்கிம் முதல்வருக்கு அடுத்தபடியாக, கர்நாடக பாஜக தலைவரின் தகுதியிழப்பு காலத்தைக் குறைத்திருக்கிறது..

கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரான முனிராஜ் கவுடா கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். தனது செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால் இந்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி முதல் மூன்று வருடங்களுக்கு தேர்தலில் நிற்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து கவுடா தேர்தல் ஆணையத்துக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்தார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தடைக் காலத்தைக் குறைக்கும்படி கோரியிருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில்,

“செப்டம்பர் 9 ஆம் தேதி கவுடா மேல் முறையீட்டு மனு தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. இந்த மனு அக்டோபர் 9 ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 11 ஆவது பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக் காலத்தை நீக்கவோ, குறைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.

அந்த வகையில் கவுடாவின் மனுவை பரிசீலனை செய்து அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக் காலத்தை ஒன்பதுமாதம், ஒன்பது நாட்களாக குறைத்து உத்தரவிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இதுவரை அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக அதிகாரத்தால் பாஜகவின் கூட்டணிக் கட்சிக்காரர், பாஜக காரர் ஆகிய இருவருக்காக வளைக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா ஒரு வேளை தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் இந்த நடைமுறையை தவிர வேறு எந்த சட்ட ரீதியான வழியும் இல்லை. அப்படியென்றால் தினகரன் சொல்லியிருப்பதன் மூலம் பாஜகவை அனுசரித்துச் சென்று அதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக உத்தரவைப் பெற்று சசிகலா தேர்தலில் போட்டியிட முடியும்.

எனவே சசிகலா தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியான வழி இல்லை. அப்படி சட்ட ரீதியான வழியை ஏற்படுத்த அரசியல் ரீதியான வழி ஒன்றே இருக்கிறது. அது பாஜகவின் அனுக்ரஹம் கிடைத்தால் மட்டுமே” என்கிறார்கள்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 16 பிப் 2021