புதுச்சேரி: ராகுல் வருகைக்குப் பின்பு ஆட்சிக் கவிழ்ப்பு?


புதுச்சேரி மாநிலத்தில், ராகுல் காந்தி வருகைக்குப் பின்பு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதிவேலைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி அமைத்து காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது, மாஹி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமச்சந்திரன் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்ததால் கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு ஆட்சியமைத்து முதல்வரானார் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி.
அதிமுக நான்கு தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது,
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2016 தேர்தலில் நமச்சிவாயத்தை முன்னிறுத்தி அதிகமான இடங்களில் காங்கிரஸ் வென்றது ஆனால் நமச்சிவாயத்தை முதல்வராக்காமல் நாராயணசாமி டெல்லி தொடர்புகள் மூலமாக முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டார்,
அன்று முதல் அமைச்சர் நமச்சிவாயத்துக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தது. இதையறிந்த பாஜக, நமச்சிவாயத்துக்கு கொக்கி போட்டு, பாஜக,வில் இணையுங்கள் உங்களை முதல்வராக்குகிறோம் என்ற உத்தரவாதம் கொடுத்ததால், பத்து நாட்களுக்கு முன்பு அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீபாஞ்சா இருவரும் பாஜகவில் இணைந்தார்கள்.
இதற்கிடையே காங்கிரஸ் கரைந்து வருவதை அறிந்த புதுச்சேரி திமுக மாநில நிர்வாகிகள், தங்கள் தலைமைக்கு திமுக ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
அதன்படி அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் உயிர்ச்சத்து ப ஆதரவோடும் சமுதாய பலத்தோடும் தேர்தலைச் சந்திக்கக் களத்தில் இறங்கி புதுச்சேரி அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கினார், திமுக ஆட்சி கனவைத் தவிடுபொடியாக்க நினைத்த நாராயணசாமி, கார் மாறி பயணம் செய்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தும், ராகுல் காந்தி மூலமாகவும் திமுக ஆட்சி அமைக்கும் முயற்சிக்குத் தடைபோட்டார்.
இந்த நிலையில் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ,வும் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ் சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கடிதம் கொடுத்ததாக அறிவித்தார், நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி, எம்.எல்.ஏ, பதவி ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகக் கூறியிருந்தார்.
மல்லாடி தனது ராஜினாமா கடிதத்தை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பியிருந்தார், அவரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ராஜினாமா கடிதத்தை உறுதிசெய்துகொண்டு, ஒரிஜினல் கடிதத்தை விரைவு தபாலில் அனுப்பச் சொல்லியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் சபாநாயகர்.
மேலும், காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமார் டெல்லியில் பாஜக தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி, புதுச்சேரி திரும்பியிருப்பவர் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சபாநாயகர் சிவகொழுந்து மற்றும் முன்னாள் அமைச்சரும் இன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ,வுமான லட்சுமிநாராயணன் இருவரும் பாஜக தலைமையோடு நெருக்கமான தொடர்பில் இருந்துவருவதாக சொல்கிறார்கள்.
தனவேல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார், நமச்சிவாயம், தீபாஞ்சா இருவரும் பாஜக,வில் இணைந்து விட்டார்கள், மல்லாடி தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டார், மேலும் மூன்று எம்.எல்.ஏ,க்கள் ராஜினாமா செய்யவுள்ளார்கள். மொத்தம் 7 எம்.எல்.ஏ.க்களின் பலம் குறைந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும்.
கவர்னர் ஆட்சி பலத்தோடு பாஜக தேர்தலைச் சந்திக்கும் என்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ,கள்.
நாளை பிப்ரவரி 17ஆம் தேதி புதுச்சேரி ஏ.எஃப்.டி மைதானத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார், ஒரு வாரத்திற்கு பிறகு பிப்ரவரி 25ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்.
அவர் வரும்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து கவர்னர் ஆட்சியிருக்கும் என்கிறார்கள் நமச்சிவாயம் ஆதரவாளர்கள்.