pவிருப்ப மனுக் கட்டணம்: தொடங்கியது போட்டி!

politics

வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான அதிகாரபூர்வ தொடக்கப் பணிகளை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடங்கிவிட்டன.

பிப்ரவரி 15ஆம் தேதி காலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வந்து அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நேரு ஸ்டேடியத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு தனிப்பட்ட முறையில் 10 நிமிடங்கள் ஆலோசனை செய்தார். இந்த நிலையில் மோடி வந்து சென்ற அடுத்த நாளே அதிமுக தலைமை கழகம் சார்பில் விருப்ப மனு பெறுகிற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பை வெளியிட்ட சில மணிநேரங்களில் நேற்று இரவு திமுகவும் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை திமுகவின் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம்” என்று அறிவித்துள்ளார் இரு முக்கிய கழகங்களும் அடுத்தடுத்து விருப்ப மனு பெறும் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் தமிழ்நாடு தேர்தல் களம் முறைப்படி சூடாகி விட்டது,

ஒரே நாளில் இரண்டு கழகங்களின் விருப்பமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால் இதை ஒட்டி சில ஒப்பீடுகள் விவாதிக்கப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ரூபாய், புதுச்சேரியில் ஐந்தாயிரம் ரூபாய், கேரளாவில் 2000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த பத்து வருடங்களாக எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக சார்பில் விருப்ப மனு கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் மற்றும் தனித்தொகுதி 15 ஆயிரம் ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு விஷயமாக கூட்டணிக் கட்சிகளுக்கு என ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விருப்ப மனு கட்டி இருந்தவர்களுக்கு அந்த கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் எனவும் திமுக அறிவித்துள்ளது.

விருப்ப மனு கட்டணம் அதிமுகவில் குறைக்கப்பட்டிருப்பதையும் திமுகவில் அதை விட அதிகமாக இருப்பதையும் பற்றி சில திமுக மாசெக்களிடம் பேசினோம்.

“திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.அதை ஒட்டி விருப்ப மனுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. எனவே விருப்ப மனு கட்டணம் ஒரு பிரச்சினை இல்லை. திமுகவை சொல்கிறீர்கள். இப்போது ஆரம்பித்த மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள்.

தேர்தல் செலவு கோடிக் கணக்கில் ஆகும் நிலையில் விருப்ப மனுக் கட்டணத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே பார்க்க வேண்டியதில்லை என்பது இரு கழக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *