மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

உசிலம்பட்டியில் சாதி வன்மம்: முடிதிருத்தும் கடையில் முதுகலை மாணவர் மீது தாக்குதல்!

உசிலம்பட்டியில் சாதி வன்மம்: முடிதிருத்தும் கடையில் முதுகலை மாணவர் மீது தாக்குதல்!

ச.மோகன்

நவீன உலகம் என்று சொல்லிக் கொள்ளும் நிலையிலும், சாதித் தீண்டாமை எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சலூனில் நடந்த நிகழ்வே மிகச் சமீபத்திய உதாரணம்.

சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் பாரதிதாசன், நந்தனம் தெருவில் உள்ள முடி திருத்தும் கடையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது இன்னொரு சாதியைச் சேர்ந்த ராமன் என்பவரால் சாதி வன்மத்துடன் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிப்புற்றவரின் குடும்பப் பின்னணி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், வடுகப்பட்டி அஞ்சல், A-இராமனாதபுரம், 3/9- மேற்குத் தெரு, இந்திரா காலனியைச் சேர்ந்த ராமன் மகன் பாரதிதாசன் (21/2021) பட்டியலினத்தில் உள்ள பறையர் சாதியைச் சேர்ந்தவர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயோ டெக் (MSc., Bio Tech) படித்து வருகிறார். இவர் தந்தை ராமன் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.கம்யூனிசக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டவர்.

பாதிப்புற்ற பாரதிதாசனின் வாக்குமூலம்:

சாதிய வன்கொடுமையால் பாதிப்புற்ற முதுகலை மாணவர் பாரதிதாசன் மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்திற்கு நேரில் வந்து சட்ட உதவி வேண்டி கூறியதாவது,

“கடந்த 16.01.2021 அன்று மதியம் சுமார் 1.10 மணியளவில் உசிலம்பட்டி நந்தனம் தெருவில் உள்ள மணி என்பவரின் சலூன் கடைக்கு முடிவெட்டச் சென்றேன். அப்போது மணி வேறு ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்ததால் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போது அங்கு வந்த அம்பட்டையன்பட்டி கிராமம், கள்ளர் சாதியைச் சேர்ந்த ராமன் என்பவர் என்னைப் பார்த்து உனது பெயர் என்ன? என்ன படிக்கிற? எந்த ஊர்? குடும்ப விவரம், முகவரி ஆகியற்றைக் கேட்டு இறுதியில் நீ என்ன சாதி என்று கேட்டார். நான் அதற்கு ‘என் அப்பா, அம்மா, சாதி சொல்லி என்னை வளர்க்கவில்லை‘ என்று கூறினேன். அதன் பின்னர் உங்கள் ஊரில் உள்ள பசும்பொன் என்பவரைத் தெரியுமா? அவரை எப்படிக் கூப்பிடுவாய்’ என்று என்னிடம் ராமன் கேட்டார். அதற்குப் பதிலளித்த நான் ‘அவரை எனக்குத் தெரியும், அவரை அண்ணேன்னு கூப்பிடுவேன்’ என்று கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த ராமன், என்னைப் பார்த்து ‘ஏன்டா ஈனப்பயலே, காலேஜ் படிக்கிறேனு சொல்ற, அப்புறம் எப்படிடா சாதி தெரியாம இருப்ப’ என்று சொல்லிக்கொண்டே எனது வலது கன்னத்தில் மாறிமாறி அடித்தார். என் கழுத்தைப் பிடித்து நெரித்து, சட்டையைப் பிடித்து இழுத்து, கடையை விட்டு வெளியே தள்ளி , சாதியைக் குறித்து இழிவாகப் பேசி, நீ இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் கொன்னே போடுவேன்” என்று மிரட்டினார்.

ராமன் வந்தபோது பாரதிதாசன் நாற்காலியில் இருந்து எழாமல் உட்கார்ந்து இருந்ததே இந்நிகழ்விற்கு மூல காரணம் என்று நம்மால் உணர முடிகிறது

வேண்டுமென்றே கடமை தவறிய சார்பு-ஆய்வாளர்:

இதைத் தொடர்ந்து பாரதிதாசன் மேலும் கூறியதாவது, “இச்சம்பவத்தினைக் கேள்விப்பட்ட உசிலம்பட்டி நகரக் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் சலூன் கடைக்கு வந்து நேரில் என்னையும் ராமனையும் விசாரித்தனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சார்பு-ஆய்வாளர் சேகர் நடத்திய விசாரணையில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதன் காரணமாக சம்பவத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக, 16.01.2021 அன்றே மாலை சுமார் 3.00 மணிக்கு சார்பு-ஆய்வாளர் சேகர் அவர்களிடம் புகார் மனு கொடுத்தேன். ஆனால் சார்பு-ஆய்வாளர் சேகர் அவர்கள் சாதி வன்மத்தால் பாதிப்புற்ற எனக்கு மெடிக்கல் மெமோ கொடுக்க மறுத்ததோடு, சாதி வன்மத்தோடு என்னைத் தாக்கிய ராமன் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தார். மாறாகப் புகார் கொடுத்த என்னைக் குற்றம் சுமத்தப்பட்ட ராமனோடு சமாதானமாகப் போகுமாறு சார்பு-ஆய்வாளர் சேகர் வலியுறுத்தினார்” என்று அச்சத்துடன் கூறினார்.

வேண்டுமென்றே கடமை தவறிய விசாரணை அதிகாரி:

அடுத்து மேற்கொண்ட நடவடிக்கைகளை பாரதிதாசன் கூறியதாவது, “சார்பு ஆய்வாளர் சேகர் அவர்கள் மெடிக்கல் மெமோ கொடுக்க மறுத்த நிலையில் நான் 17.01.2021 அன்று நேரடியாக உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றேன் (OP No:20020721000011317).

அதே நாள் (17.01.2021) மாலை மூன்று மணிக்கு இதன் விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் அவர்களை நேரில் சந்தித்துக் கொடுத்த புகார் மனுவை அவர் வாங்க மறுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். மீண்டும் மாலை சுமார் 6.30 மணிக்கு என்னுடைய தந்தை ராமனுடன் விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் அவர்களை நேரில் சந்தித்துக் கொடுத்த புகார் மனுவை அவர் மீண்டும் வாங்க மறுத்து இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த நான் மறுநாள் 18.01.2021அன்று எனது தந்தை ராமன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த குருசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த செல்லக்கண்ணு, வழக்கறிஞர்கள் தெய்வம்மாள், முருகன் ஆகியோருடன் விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜனை நேரில் சந்தித்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியதைத் தொடர்ந்து, சம்பவ சாட்சியான சலூன் கடை மணி என்பவரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் நேரில் விசாரித்தார்.

அவர் நடந்த சம்பவத்தைத் துல்லியமாகக் கூறினார். இருப்பினும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன், சாட்சியம் போதுமானதாக இல்லை என்று கூறி 17.01.2021ஆம் தேதியிட்ட CSR (எண்:15/2021)ஐ கொடுத்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் 17.01.2021ஆம் தேதியிட்ட CSR (எண்:15/2021)ஐ 18.01.2021 அன்று தான் என்னிடம் கொடுத்தார்” என்று தெளிவாகத் தெரிவித்தார்.

சாதிய வன்மத்தின் உச்சமாய்க் கொலை மிரட்டல்:

இதற்கிடையில் குற்றம் சுமத்தப்பட்ட ராமன் என்பவர் தன்னை மிரட்டியது குறித்துப் பாரதிதாசன் கூறியதாவது, “சாதிய வன்மத்துடன் என்னைத் தாக்கிய ராமன் என்னைப் பார்த்துப் புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் ‘உன்னைக் கொலை செய்து விட்டு, உன்னுடைய ஊரையும் அழித்து விடுவேன்’ என்று மிரட்டினார்.

வன்கொடுமைகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு:

மனித உரிமை மீறல்களுக்கெதிராய்க் களமாடும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் /இயக்கங்கள் / அரசியல் கட்சியினர் ஆகியோர் இந்நிகழ்வைக் கேள்வியுற்று, ஒன்றிணைந்து ஒத்த கருத்துடன் “பட்டியலின வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிதாசனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இக்குழுவின் பிரதிநிதிகள் மதுரை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரை 12.2.2021 அன்று நேரில் சந்தித்து உண்மைநிலையை எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கக் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தியுள்ளது.

வழக்கு பதிவில் கால தாமதம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14இல் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமத்துவ உரிமையின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள, முதுகலைப் பட்டம் பயிலும் பாரதிதாசன் மீது 16.01.2021 அன்று நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைக்கு அதே நாளில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் 13 நாட்கள் கழித்து 29.01.2021 அன்று முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கால தாமதத்துக்குக் காரணம் புகார்தாரர் பாரதிதாசன் என்று கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.

புகார் பெறுவதற்கு சார்பு ஆய்வாளர் சேகர் மறுத்துள்ளார். காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான ஆய்வாளரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் அவர்களும் புகார் பெறுவதற்கு மறுத்துள்ளார். இதன் காரணமாகவே கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடு.

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை:

சார்பு-ஆய்வாளர் சேகர், காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர், விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் வேண்டுமென்றே கடமை தவறியுள்ளனர். எனவே பட்டியலின / பழங்குடியின (வன்கொடுமைகள் தடுப்பு) திருத்தச் சட்டம் 2016 பிரிவு 4(2)இன் படி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் நியாயமான முறையில் விசாரணை நடைபெற, வேண்டுமென்றே கடமை தவறிய அதிகாரிகளான 1. சார்பு-ஆய்வாளர் சேகர், 2. உசிலம்பட்டி நகரக் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர், 3. விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க அனுமதி மறுக்கப்பட வேண்டும். இதற்குப் பதில் வேறு விசாரணை அதிகாரி ஒருவர் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட வேண்டும்.

பாரதிதாசனுக்குப் பாதுகாப்பு:

சாதிய வன்மத்துடன் பாரதிதாசன் மீது தாக்குதல் நடத்திய ராமன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரைத் திரும்பப் பெறாவிட்டால், பாரதிதாசனைக் கொலை செய்து அவரது ஊரையும் அழித்து விடுவதாக ராமன் மிரட்டியுள்ளார். எனவே “சாட்சி பாதுகாப்புத் திட்டம் 2018”இன் படி மாவட்டக் குற்றவியல் நீதிபதி மூலம் பாரதிதாசனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14, 15 & 17 ஆகியவற்றின் மீது பாதிப்புற்ற பாரதிதாசனுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றே கடமை தவறிய காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் நவீன கால நாகரிகச் சமூகத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை மட்டுப்படுத்த முடியும்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 16 பிப் 2021