மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: தேவேந்திர குல வேளாளர் அரசாணை: தன்மரியாதைக்கான ஒப்புகை!

சிறப்புக் கட்டுரை: தேவேந்திர குல வேளாளர் அரசாணை: தன்மரியாதைக்கான ஒப்புகை!

ச.மோகன்

தன் இன மரபின் கடந்த கால வரலாற்றுத் தரவுகளைச் சமகால வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் உரையாடல் தேவேந்திர குல வேளாளர் மக்களிடையே சமீப காலமாக உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது. இம்மக்கள் தம் சமூக வரலாற்றை, அதன் பழைமைமிகுப் பண்பாட்டை, மிகைப்படுத்தல் ஏதுமின்றி மீண்டும், மீண்டும் பொதுவெளியில் உரையாடி, பொதுச் சமூகத்தின் ஒப்புதலோடு இன்று “தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்” கோரிக்கையை வென்றெடுத்திருக்கின்றனர். தேவேந்திர குல வேளாளர் என்ற சொல் ஏதோ கற்பனை வளத்தில் உதித்ததல்ல. கல்வெட்டு, இலக்கியம், அரசு ஆவணம் உட்பட மக்களின் வழக்காற்றில், வாழ்வியலில் நீக்கமற நிறைந்திருப்பதாகும். இது கடந்து வந்த பாதையைக் கால வரிசைப்படி காண்போம்.

முதலில் ஒலித்த குரல்

இந்திய அரசிதழில் பட்டியல்படுத்தப்பட்ட சாதிகளின் பிரிவில் இச்சமூகம் ஏழு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை 1. தேவேந்திர குலத்தான், 2. குடும்பன், 3. காலாடி, 4.பண்ணாடி, 5.கடையன், 6.வாதிரியான், 7.பள்ளன் ஆகியன ஆகும். ஆனால் பெரும்பாலும் “பள்ளன்” என்ற பெயரிலேயே சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நீர் மேலாண்மையை முறையாகச் செய்து பள்ளங்களில் நீரைத் தேக்கி பயிர்த்தொழில் செய்ததால் இவர்கள் "பள்ளர்கள்" என்று அழைக்கப்பட்டதாகச் சேதிகள் கூறுகின்றன.

1980களில் அரசுப் பணியில் இருந்த இச்சமூகத்தினர் பலர் ஒன்று கூடி அப்போதிருந்த ஒரே தலைவர் ஜான் பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கையை முன் வைத்தனர். அரசிதழில் தேவேந்திர குலத்தான் என்று உள்ளது. பள்ளன் என்பதற்குப் பதிலாகத் தேவேந்திர குலத்தான் என்ற சொல்லை நாம் பொதுவெளியில் பயன்படுத்த வேண்டும் என்று கோரினர். அதற்குப் பதிலளித்த ஜான் பாண்டியன் அவர்கள் “நாம் தேவேந்திர குல வேளாளர்கள்” இதற்கான வரலாற்றுத் தரவுகளை என்னுடைய அண்ணன் ஜெயப்பிரகாஷ் (காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர்) சேகரித்து வைத்துள்ளார். இச்சொல்லை நாம் பரவலாக்கம் பெறச் செய்ய வேண்டும்.அதை பொதுச் சமூகம் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று அன்றே கூறினார்.

அதன்படி 1980களில் கிராமங்களிலும், நகரங்களிலும் சமூகக் கொடியேற்றி “தேவேந்திர குல வேளாளர்கள்” என்ற சொல்லை மக்கள் மனங்களைப் பண்படுத்தி உழுது, விதைத்துப் பயிரிட்டார். முதன் முதலில் 1983இல் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பெயரில் ஊர்தோறும் சங்கம் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தார். 1986இல் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் என்பதைப் பதிவு செய்து சமூக அடையாளத்தை முறையாக ஆவணப்படுத்தினார். இதுவே தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கான அடித்தளம்.

சமூகக் கள யதார்த்தம்:

இதைத் தொடர்ந்து இச்சமூக மக்கள் தங்களைத் தேவேந்திர குல வேளாளர்கள் என்றே பொது வெளியில் உரையாடத் தொடங்கினர். துணை ஆட்சியராகப் பணிபுரிந்த அறிவர் தேவ ஆசீர்வாதம் என்பார் 1981இல் எழுதிய “வேளாளர் யார்?” என்ற நூல் ஜான் பாண்டியனின் உரத்த குரலுக்கு வலு சேர்த்தது. இந்நூல் இம்மக்களின் தொன்மையான வரலாற்றையும், மேன்மையான பண்பாட்டையும் உயிர்ப்புடன் எடுத்தியம்பியது. அறிவர் தேவ ஆசீர்வாதம் அவர்கள் எடுத்துரைத்தத் தரவுகள் மக்களின் சிந்தனைப் போக்கில் செல்வாக்குச் செலுத்தின.

இதனை அடியொற்றிக் கோவையைச் சேர்ந்த அறிஞர் குருசாமிச் சித்தர் அவர்கள் 1993இல் எழுதிய “தமிழ் இலக்கியத்தில் பள்ளர். மள்ளர், தேவேந்திரகுல வேளாளர் அடிபடைச்சான்றுகள்” என்ற நூல் எண்ணிலடங்கா வரலாற்றுத் தரவுகளை அள்ளிக் கொடுத்தது. தேவேந்திர குல வேளாளர் பற்றி இலக்கியங்களில் மண்டிக் கிடந்த வரலாற்றுத் தரவுகளை சல்லடை போட்டுக் கண்டுபிடித்தப் பெருமை அறிஞர் குருசாமிச் சித்தர் அவர்களையே சாரும். இதே போன்று இம்மக்களின் தொன்மையையும், மேன்மையையும் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் காலக் கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்த பெருமை முனைவர் ஞானசேகரன் அவர்களையே சாரும். இதைத் தொடர்ந்து 2004இல் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் முயற்சியில் ”இந்து தர்மப் பாதுகாப்புப் பேரவை” கோவையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளைத் தலைவர் தங்கராஜ் அவர்கள் பேசும்போது “இச்சமூகத்தின் பழம்பெருமை, ஆன்மிகப் பண்பாடு, சமூக மேன்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் ”பல பெயர்களில் அறியப்படும் தேவேந்திரர் சமூகத்தைத் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒற்றைப் பெயரில் அழைக்க வேண்டுகோள் விதித்தார்.”

பொதுச் சமூகத்தின் ஒப்புதல்:

இந்நிகழ்வின் இறுதியில் ஆன்மிகப் பேருரை நிகழ்த்திய தயானந்த சுவாமிகள், அரசு ஆணையிடும் முன், உங்களை நான் இங்கு தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கிறேன் என்றார். அங்கு கூடியிருந்த அனைத்துச் சமூக மக்களும் பெருத்தக் கரவொலியுடன் அதை ஆமோதித்தனர். இதுவே தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் பொதுச் சமூகத்தின் ஒப்புதலைப் பெற்ற வரலாற்று நிகழ்வு ஆகும்.

2010இல் தங்கராஜ் அவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மூலமாக இது தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அன்றைய திமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அப்படியே அது கிடப்பில் போடப்பட்டது. பிற அரசியல் கட்சிகளும் கள்ள மௌனம் காத்தன.

இதைத் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை அரசாணையாக வெளியிடக் கோரி நடைபெற்ற தேவேந்திரர் விழிப்புணர்வு மாநாடு-மதுரை, தேவேந்திரர் எழுச்சி மாநாடு (ஜனவரி 29,2012, திருச்சி ) ஆகியவற்றில் பங்கேற்ற பிற சமூகத் தலைவர்கள் அதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டுத் தங்கள் ஆதரவைப் பொதுவெளியில் தெரிவித்தனர்.

மதுரை மாநகரில் கடந்த மே 21,22-2012இல் நடைபெற்ற பாரதிய ஜனதா மாநில மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை அரசாணையாக வெளியிடக் கோரி தீர்மானம் (எண்:9) நிறைவேற்றப்பட்டது.

மதுரைப் பிரகடனம்:

கடந்த 6.8.2015 அன்று மதுரையில் தங்கராஜ் அவர்களின் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தேசியத் தலைவர் அமித் ஷா அவர்கள் தலைமையில், ஆடிட்டர் குருமூர்த்தி முன்னிலையில் இச்சமூகம் தங்களைத் “தேவேந்திர குலவேளாளர் ” என்று பிரகடனம் செய்தது. இதில் பிற சமூகத்தைச் சேர்ந்த ரெட்டியார் நலச் சங்கம், நாடார் மகாஜன சங்கம், யாதவர் தன்னுரிமைப் பணியகம், நாயுடு கல்ச்சுரல் அகாடமி, தேவர் தேசியப் பேரவை, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், நகரத்தார் சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் ஒப்புதல் அளித்துக் கையொப்பமிட்ட நிகழ்வு வரலாற்று மைல் கல்லாகும். “தன் சமூகப் பற்று , பிற சமூக நட்பு” என்ற சமூக நல்லிணக்கச் சேதியை உலகுக்கே உணர்த்திய நாளாகும்.

அன்றே பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி:

கடந்த 2016 ஜனவரி 27 அன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், “தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் என்னை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கையை என்னிடம் கூறினார்கள். அம்மக்களின் கோரிக்கையை நான் மேன்மையுடையதாகக் கருதுகிறேன். சமூக ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு அனைத்துச் சமூகத்திற்கும் வழங்கப் பெறும் நீதியைப் போல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கும் நீதி கிடைக்கும் என அப்போது உறுதியளித்தேன்.

இத்துடன் அச்சமூகத்திற்கான வாய்ப்புகளையும் பெற்றுத் தருவோம் எனக் கூறினேன். அதனைத் தொடர்ந்து அச்சமூகத்தின் கோரிக்கை நிறைவேறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இப்போது இப்பிரச்சினையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை நீங்கள் அறியும்போது மகிழ்ச்சி அடைவீர்கள். தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு:

கடந்த அக்டோபர் 2019இல் நான்குநேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் அரசாணைக் கோரிக்கை பேசு பொருளானது. இத்தொகுதியில் கணிசமாக இருக்கும் இச்சமூக மக்கள் நேர்த்தியாகச் செயற்பட்டு தேவேந்திர குல வேளாளர் அரசாணைக் கோரிக்கையை வலியுறுத்தித் தேர்தலைப் புறக்கணித்தனர். சமூகத் தலைவர்களையும் தேர்தல் பரப்புரைக்கு அனுமதிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேவேந்திரர்கள் குடியிருப்புப் பகுதியில் அரசாணை வேண்டி கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. இச்செயல் இச்சமூக மக்களின் தன்னெழுச்சியை அரசியல் பரப்பில் நிறுவியது.

மானிடவியல் குழு அறிக்கை:

சென்னை பல்கலைக்கழக மானிடவியல் குழு இம்மக்களின் சமூகப் பண்பாட்டு விழுமியங்களை நேரில் ஆய்வு செய்து தமிழக அரசிடம் அளித்தது. அதனடிப்படையில் தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடந்த டிசம்பர் 2020இல் அளித்தது. இதன் அடிப்படையில் 13.2.2021 அன்று தேவேந்திர குல வேளாளர் பெயர் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆக்ஸ்போர்டு இந்தியா 2014ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள மானிடவியல் ஆய்வு நூலில் (The Scheduled Caste- Revised Edition – Oxford India Paperbacks) இச்சமூக மக்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றனர். இவர்களின் தாய்மொழி தமிழ்.ஓரிடத்தில் நிலையாகக் குடியமர்ந்து வேளாண் தொழில் செய்கின்றனர். பலர் நில உடைமையாளர்களாக உள்ளனர். நவீன உலகத்தில் பலர் மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் போன்ற துறைகளில் உள்ளனர். இந்து மத நம்பிக்கை உடையவர்கள். சமூகப் படிநிலையில் பிற சமூகத்தோடு சமமாக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய “தென்னிந்திய குளங்களும் குடிகளும்” என்ற நூலில் 486ஆம் பக்கத்தில் இச்சமூக மக்களை வேளாண் தொழில் சார்ந்த பெயர்களிலேயே குறிப்பிடுகிறார்.

460 நாட்கள் கருஞ்சட்டைப் போராட்டம்:

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடும் வரை கறுப்புச்சட்டை அணிந்து அறவழியில் அமைதியாகப் போராடுவோம் என்று அறிவித்தார். கிராமங்கள் தோறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தினார். கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து பொதுவெளியில் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டு, கருஞ்சட்டைப் போராட்டத்தை அக்கட்சியினர் தொடர்ந்தனர். இன்று 460 ஆவது நாளில் பிரதமர் மோடி அறிவிப்பைத் தொடர்ந்து வெற்றிக் களிப்புடன் கருஞ்சட்டைப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

இது வெறும் பெயர் அல்ல!

14.2.2021 அன்று சென்னையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை பற்றிப் பேசிய பிரதமர் மோடி அவர்கள் இது வெறும் பெயர் அல்ல.... அச்சமூகத்தின் நீதிக்கான, நியாயத்துக்கான வாய்ப்பு. இப்பெயர் “அம்மக்களின் பண்பாட்டைக் காக்கும். அம்மக்களின் மாண்பைக் காக்கும். அம்மக்களின் தன்மதிப்பைக் காக்கும், அம்மக்களைக் கௌரவிக்கும்”என்று தெளிவுபடக் குறிப்பிட்டார். இச்சமூக மக்கள் தன்னம்பிக்கை உள்ளவர்கள், இணக்கமானவர்கள், சகோதரத்துவம் மிக்கவர்கள் என்று அவர்களின் சமூகத் தன்மையைப் போற்றிப் பாராட்டினார். இதையும் தாண்டி கடந்த 2015இல் இச்சமூகத்தின் பிரதிநிதிகள் நூறு பேர் அவரைச் சந்தித்த போது அவர்களிடம் “நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரர்கள், நம் இருவருக்கும் ஓர் ஒத்திசைவு உள்ளது” என்று உணர்வுபூர்வமாகக் கூறியதை இன்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அவர் கூறிய உண்மை தொடரட்டும்.

கால ஓட்டத்திற்கேற்ப உண்மையான திருத்தங்களை சமூகமரபில் வரலாறு ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்வு இச்சமூகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் புதிய விடியலுக்கான அடித்தளமாய்த் திகழட்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 15 பிப் 2021