அயோத்தி ராமர் கோயில்: திமுக மாசெ நிதியுதவி!

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ராமர் கோயில் அமைய இருக்கிறது. இதற்கான பிரம்மாண்ட பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆகஸ்டு 5 ஆம் தேதி கலந்துகொண்டு கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தார்.
ராமர் கோயில் கட்டுவதற்காக தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் நிதி திரட்டுவது, கட்டுமானப் பொருட்கள் திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் ராமர் கோயில் கட்டுவதற்கு திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் பதினோராயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஏ.டி. கலிவரதன், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு மாவட்டம் முழுதும் விஐபிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 15) காலை திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் .செஞ்சி கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏவை சந்தித்தார்.
அப்போது ராமர் கோயில் கட்டுவதற்கு கலிவரதன் நிதியுதவி கேட்க.... மாவட்ட கழக செயலாளர் .செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ ராமர் கோயில் கட்டும் பணி சிறக்க வாழ்த்தி ரூபாய் 11,000 (பதினோராயிரம் ) நிதி வழங்கினார்.
திமுக மாவட்டச் செயலாளர், அதுவும் சிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் மஸ்தான் ராமர் கோயிலுக்கு நிதியுதவி அளித்ததை பாஜகவினர் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் மஸ்தானுக்கு நெருக்கமான வட்டாரங்களில் கேட்டபோது, “தொகுதிக்குள்ளும், மாவட்டத்துக்குள்ளும் கோயில் கட்டுவதற்கு, கும்பாபிஷேகம் செய்வதற்கு என்று தேடி வந்தால் மஸ்தான், தாராளமாக நிதியுதவி செய்வார், முடிந்தால் அந்த கோயில் விழாக்களிலும் கலந்துகொள்வார். விபூதி குங்குமம் இட்டால் ஏற்றுக் கொள்வார். பரிவட்டம் கட்டினால் ஏற்றுக் கொள்வார். எம்மதமும் சம்மதம் என்ற வகையில் செயல்படுபவர். அந்த வகையில் நண்பர் கலிவரதன் ராமர் கோயிலுக்காக கேட்டபோதும் அப்படியே நிதியுதவி செய்தார்”என்று கூறுகிறார்கள்.