மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

மோடி - எடப்பாடி சந்திப்பு: ஓ.பன்னீருக்கு நெருக்கடியா?

மோடி - எடப்பாடி சந்திப்பு: ஓ.பன்னீருக்கு நெருக்கடியா?

பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 14) பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சுமார் மூன்று மணி நேரப் பயணமாக சென்னை வந்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் அரசு விழாவில் கலந்துகொண்ட மோடி அங்கேயுள்ள கிரீன் அறையில் தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியில் பங்கேற்க நேரு ஸ்டேடியம் வந்த பிரதமர் மோடி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது கைகளையும் உயர்த்திக் காண்பித்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின் நேரு உள்விளையாட்டரங்கில் இருக்கும் கிரீன் ரூமில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு மட்டும் மோடி சுமார் பத்து நிமிடங்கள் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ் இடம்பெறவில்லை.

அதிமுகவில் முதலில் பாஜக தலைமைக்கு நெருக்கமாக ஓபிஎஸ்தான் இருந்தார். ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியே தேவையில்லை என்று சொல்வதாக ஒரு தோற்றம் இருந்தது. இந்த நிலையில்தான் அமித் ஷா கலந்துகொண்ட சென்னை அரசு விழாவில் மரபுகளை மீறி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் அறிவித்தார். அரசியல் போக்கில் ஓபிஎஸ்ஸை மிஞ்சி டெல்லி தலைமையோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைகோக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி 18ஆம் தேதி டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கே உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பிரதமர் மோடியையும் தனித்தனியாக சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் அதிமுகவில் சசிகலா நூறு சதவிகிதம் இணைய வாய்ப்பில்லை என்று அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கருத்துக்கு சுமார் ஒரு மாதம் ஆகியும் இன்னமும் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லவில்லை அல்லது கருத்து வெளியிடவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் சென்னை வந்த மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. முதலில் இந்தச் சந்திப்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் இடம்பெறுவதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு ஏனோ அவர் தவிர்க்கப்பட்டார்.

பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி மிகவும் உற்சாகமாகிவிட்டார். கட்சியில் அவரது பிடி இதன் மூலம் இன்னும் அதிகமாகும். நாளை (பிப்ரவரி 16) தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போதைய பேச்சில் பிரதமர் மோடியுடன் அவர் நடத்திய தனிப்பட்ட சந்திப்பின் உற்சாகம் வெளிப்படும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

இதற்கிடையில் விமானப் படைத்தளத்தில் வந்து இறங்கியபோது பிரதமர் மோடி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடனும் சுமார் பத்து நிமிடங்கள் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழக நிலைமை குறித்தே விவாதித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 15 பிப் 2021