மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயர்: அறிவித்தார் பிரதமர்! கிருஷ்ணசாமியின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு வெற்றி!

தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயர்: அறிவித்தார் பிரதமர்!  கிருஷ்ணசாமியின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு வெற்றி!

தமிழகத்திற்கு பிரதமர் மோடி இந்த முறை வந்து சென்றதில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் நடந்திருக்கிறது. ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தேவேந்திர குலவேளாளர் என்று பொதுப்பெயரில் அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர். இந்த அறிவிப்பின் மூலமாக நீண்ட காலமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்வதானால், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பலரும், தங்களை தாழ்த்தப்பட்டோர் என்றும், பழங்குடியினர் என்றும் அறிவிக்க வேண்டுமென்றும் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், பட்டியலினத்திலிருந்து தங்களை வெளியேற்ற வேண்டுமென்று போராடியது இந்த சமுதாயம் மட்டுமே. இதில் முன்னணியில் நின்றவர் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. சலுகைகளை விட சமுதாய கெளரவமே முக்கியமென்று அவர் முதல் முதலாக குரல் கொடுத்தபோது, தமிழகமே வியப்போடு அவரை நோக்கியது. தேவேந்திர குல வேளாளர் என்பவர்கள், தமிழ் மண்ணின் பூர்விக வேளாண் குடிமக்கள்; அதாவது மருத நிலத்தின் மக்கள் என்பதை தங்களுடைய மக்களிடமும் அரசிடமும் ஆணித்தரமாக வாதிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்தான் இந்த மக்கள் ஆதி திராவிடர் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்திலேயே இந்த சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தும் அது கேட்கப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பின், இந்த கோரிக்கையை கேட்பதற்கே யாரும் முன்வரவில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை, இட ஒதுக்கீடு என்பதற்கான போராட்டங்களே வலுப்பெற்றிருந்த நிலையில், 50, 60 ஆண்டுகளுக்குப் பின் இந்த கோரிக்கைக்குப் புத்துயிர் கொடுத்தார் கிருஷ்ணசாமி.

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப்பெயரில் அழைக்க வேண்டுமென்ற கோரிக்கையை தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ் போன்றோரும் வலியுறுத்திவந்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில், திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் இதுகுறித்து பரிசீலித்து நடைமுறைப்படுத்த நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான ஒரு நபர் குழு அமைத்து பரிந்துரை பெற அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார். அதன் பின்பு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததில், அந்தக்குழுவின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டது. விடாமல் போராடினார் கிருஷ்ணசாமி. பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் தனது பூர்விக அடையாளத்தை இழந்திருப்பது குறித்து அந்த ஏழு பிரிவுகளின் மக்களிடமும் சென்று விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார். சென்னையில் மக்களைத் திரட்டி மாநாடு நடத்தினார். டெல்லிக்கும் ஆட்களை அழைத்துச் சென்று பேரணி நடத்தினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார் கிருஷ்ணசாமி. இதனால் அரசியல்ரீதியாக பல சவால்களையும், சறுக்கல்களையும் சந்தித்தார். ஆனாலும் இந்த கோரிக்கையிலிருந்து அவர் பின்வாங்கவே இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கு மத்திய அரசுக்கு உரிய பரிந்துரையை அனுப்ப தமிழக அரசு தாமதிப்பதாக அதிமுக அரசின் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் இதற்காக மீண்டும் ஒரு குழுவை அமைக்க அதிமுக அரசு முன்வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் மீண்டும் ஒரு குழுவை அமைத்து, இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அந்தக் குழு, இது தொடர்பாக பல தரப்பினரையும் சந்தித்துக் கருத்துக் கேட்டது. சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டது. ஆனாலும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பும் வரை முதல்வரைச் சந்திக்க மாட்டேன் என்று கடுமை காட்டி வந்தார் கிருஷ்ணசாமி. ஒரு வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த பரிந்துரை முறைப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்றது.

அதை ஏற்றுத்தான் இனி ஏழு உட்பிரிவினரும் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுவர் என்று பிரதமர் மோடி இன்று சென்னையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது நீண்ட நாள் கோரிக்கை என்பதையும் சுட்டிக்காட்டி, அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடம் மகிழ்ச்சி, வருத்தம் என கலவையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படுமென்று தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அரசாணை நடைமுறைக்கு வந்தால் அது தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் நல்ல பலனைத் தருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகளை விட சமுதாய அந்தஸ்தே முக்கியமென்று போராடி இந்த மக்கள் அதில் வென்றுள்ளனர். ஆனால் சமுதாயரீதியாக ஏற்படப்போகும் மாற்றங்கள்தான் இவர்களுக்கான நிஜவெற்றியாக இருக்கும்.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 14 பிப் 2021