மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

கமல் கட்சி தீர்மானங்கள் மீது ஒரு ‘டார்ச்’ வெளிச்சம்…

கமல் கட்சி தீர்மானங்கள் மீது ஒரு ‘டார்ச்’ வெளிச்சம்…

அ.குமரேசன்

கமல்ஹாசன் கட்சியின் பொதுக்குழு கூட்டம், அதன் 25 தீர்மானங்கள் ஆகியவை தமிழகத்தில் இந்நாளைய பரபரப்புச் செய்திகளில் ஒன்றாக இடம்பிடித்திருப்பது அவருடைய நிலைப்பாடுகளில் மாறுபாடு உள்ளவர்களும் மறுக்க முடியாத நிகழ்வு. அதன் முதன்மையான ஒரு தீர்மானம், பொதுக்குழு கூட்ட அரங்கப் படம் ஆகிய இரண்டும் கருத்துப் பகிர்வைத் தொடங்குவதற்கான இடமாக அமைகின்றன.

‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயர் இருக்கிறபோது ‘கமல் கட்சி’ என்று குறிப்பிடுவது சரிதானா என்று பார்க்கலாம். அந்தத் தீர்மானமும் படமும் இதற்கான பதிலைச் சொல்வதாகத் தோன்றுகிறது. கட்சியின் நிரந்தரத் தலைவர் அவர்தான் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது. இதற்கு முன்பாகவும் சில கட்சிகளில் நிரந்தரத் தலைவர், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று பேசப்பட்டதுண்டு. ஏன் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்று கூட சொல்லப்பட்டதுண்டு. ஆனால் அவையெல்லாம் அந்தத் தலைவர்கள் மீதான பற்றின் வெளிப்பாடாக, உயர்வு நவிற்சியணியாக இருந்தன. தீர்மானகரமான அறிவிப்பாக இருந்ததில்லை.

விறுவிறுப்பான எதிர்பார்ப்புகளுக்கும், வெறும் ஊகங்களுக்கும், சினிமாவை ஓடவைப்பதற்கான உத்தி என்ற விமர்சனங்களுக்கும் இடமளிக்காமல், அறிவித்தது போலவே அரசியல் களத்துக்கு வந்தவர் கமல். அவர் தொடங்கிய கட்சிதான், அவர் சூட்டிய பெயர்தான், அவர் நியமித்த பொறுப்பாளர்கள்தான் என்ற முறையில் இது கமல் கட்சிதான். இதை மேலும் உறுதிப்படுத்துவது போல், பொதுக்குழுக் கூட்ட அரங்கில் முன் வரிசைக்கும் முன்பாக ஒற்றைத் தனி இருக்கையில் அவர் அமர்ந்திருக்கிற படம் வெளியாகியுள்ளது. அது ஏதோ கொரோனா காலத்து சமூக இடைவெளி ஏற்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

கட்சியின் கொள்கைகள் கூட்டணி உள்ளிட்ட அணுகுமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்கிற அதிகாரம் முற்றிலும் அவருக்கே என்று மற்றொரு தீர்மானம் தெளிவுபடுத்துகிறது. கூட்டுத் தலைமை, கூட்டுச் செயல்பாடு என்று ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் கமல் வெளிப்படுத்தியிருந்தாலும், இந்தத் தீர்மானங்களில் அவை வெளிப்படவில்லை. இவை பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்பி நிறைவேற்றிய தீர்மானங்களே, அவர் கொண்டுவந்தவையல்ல என்று சொல்லிக்கொள்ளலாம்தான். ஆனாலும், அவற்றை முன்மொழிய அனுமதித்த தொடக்க அதிகாரமும், அங்கீகரித்த இறுதி அதிகாரமும் அவருடையதுதானே? ஆகவேதான் ஊடகங்களின் செய்திகளில் கமல்தான் நிரந்தரத் தலைவர் என்பதே தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. அந்த வகையிலும் கமல் கட்சி எனக் கூறுவது பொருந்துகிறது.

வேறு பல கட்சிகளிலும் இதுபோல் ஏகத்தலைவருக்கே இறுதி அதிகாரம் என்று தீர்மானங்கள் போடப்படுவது வழக்கம்தான். சில கட்சிகளில் தலைமைக்குழு, செயற்குழு, மாநிலக்குழு, தேசியக்குழு ஆகிய குழுக்களுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும். தேர்தல் கூட்டணி அமைப்பது போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்தக் குழுக்களின் முடிவு இறுதியானது என்றும் அறிவிக்கப்படும். இப்படியான கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதாகக் காட்ட இந்தத் தீர்மானங்களா?

முதலமைச்சராவதே வழியா?

அவரை தமிழகத்தின் முதலமைச்சராக்குவதற்குப் பாடுபடுவோம் என்று உறுதியேற்கும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சுற்றி வளைக்காமல் இலக்கைக் கூறியியிருப்பது நல்லதுதான். அவர் தனது கடந்த காலப் பேச்சுகளில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள், மற்ற சில தீர்மானங்களில் சொல்லப்படும் நோக்கங்கள் ஆகியவற்றை நிறைவேற்ற முதலமைச்சர் இருக்கையில் அமர்வதுதான் வழி என்று அவரும் பொதுக்குழுவினரும் கருதுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்தத் தீர்மானத்தை உண்மையிலேயே நிறைவேற்றித்தர வேண்டியவர்களான மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது தேர்தலில் தெரிந்துவிடும்.

ஆனால், முதலமைச்சராகி விடுவதாலேயே மாநிலத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியாது என உணர்த்துவதாக, மாநில அதிகாரப் பறிப்புகள், மத்திய அதிகாரக் குவிப்புகள் நடைபெறுவது அரசியல் இயக்கங்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. இது முன்பும் நடந்திருக்கிறது, இப்போதும் நடக்கிறது. மொழிக்கொள்கை, தொழில்கொள்கை, வரிக்கொள்கை, கல்விக்கொள்கை, வேளான் கொள்கை, சமூகநீதிக்கான இடஒதுக்கீடு கொள்கை உள்பட பல களங்களில் அந்த அதிகாரப் பறிப்புகளும் குவிப்புகளும் நடத்தப்படுகின்றன. அந்த 25 தீர்மானங்களில் ஒன்றில் கூட இந்த அரசியல் அவதானிப்பு புலப்படவில்லை.

உழவர் மக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கும் வேளான் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று பரப்புரைகளில் பேசியிருக்கிறார் கமல். ஒலிபெருக்கியில் வந்த அந்தப் பேச்சு ஒரு தீர்மானத்தில் கூட எதிரொலிக்கவில்லை. “வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சுழல் சூறையாடப்படுவதையும் விவசாயம் பாதிக்கப்படுவதையும் 'கிராமியமே தேசியம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எட்டுவழிச் சாலை போன்ற விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ் மண்ணில் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது,” என்ற அளவோடு நிற்கிறது..

ஹிந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் என்று கமல் முன்பு பேசியிருக்கிறார். அது ஒரு தீர்மானமாகவும் எதிரொலித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது கல்விக்கொள்கை மீதான விமர்சனத்தோடும், நாட்டின் அரசமைப்பு சாசனத்தைப் பாதுகாப்பது பற்றிய கரிசனத்தோடும் இணைய வேண்டாமா?

பார்வை பதியவில்லையா?

கமல் தனது படைப்பாக்கங்களான திரைப்படங்கள், கவிதைகள் கருத்தாக்கங்களான உரைகள், உரையாடல்கள் போன்றவற்றில் பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறிவந்திருக்கிறார். அதற்கு எதிர்ப்புகள் வந்தபோது அவரை ஆதரித்தும் பலர் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். வரலாறு நெடுகிலும் தமிழ் மண் பகுத்தறிவுக்கும் ஆதிக்கவாத எதிர்ப்புக்குமான வெளியைப் பாதுகாத்து வந்திருக்கிறது. பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்பு மட்டுமல்ல. அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நீண்டகால கண்ணோட்டம், உடனடி அணுகுமுறை எனபல பரிமாணங்கள் கொண்டது பகுத்தறிவு. இன்றைக்கு அத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தினால் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாகச் சித்தரிப்பது உள்படப் பல்வேறு தடைக்கற்கள் போடப்படுகின்றன. மத உணர்வுகளை அரசியலுக்குப் பயன்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. ஏன், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கே கூட அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. பொதுக்குழுத் தீர்மானங்களில் இந்தப் பொதுவான நிலைமைகள் பற்றிய தீர்மானகரமான பார்வைகள் பதியவில்லையே?

எடுத்துக்காட்டாக, ஊழல் ஒழிப்பு என்ற லட்சியம் முற்றிலும் சரியானது, நியாயமானது. முறையாக உழைத்துச் சேர்த்த பணத்தை உறிஞ்சுவதோடு, முறைகேடுகளோடு அனுசரித்துப்போகிற மனத்தை மக்களிடையே ஊன்றியிருப்பது ஊழல் பின்னலமைப்பு. அதனை அறுத்து அகற்றுவது ஒரு இலக்குத் திட்டம் என்றால், அதற்கு வாகாக மக்களின் ஒற்றுமைத்தளம் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அந்தத் தளத்தை அரிப்பதற்கு ஊற்றப்படும் அமிலங்கள் பற்றி உரத்த குரலில் எச்சரிக்க வேண்டும். சன்னமான குரல் கூட தீர்மானங்களில் ஒலிக்கவில்லையே? கமல் சார், உங்களின் டார்ச் விளக்கை இந்த இருட்டுப் பகுதிகளிலும் திருப்புங்கள்.

மாணவர்களை அரசியல் தாக்கும் முன்பாக அவர்களின் தாக்கம் அரசியலில் ஏற்பட வேண்டும் என்ற அழைப்பு சரியானது. வன விலங்குகளின் வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் ஆக்கிரமித்திருப்போர் எவ்வளவு பெரிய இடங்களோடு தொடர்புள்ளவர்களானாலும் அகற்றப்படுதல், நாட்டை அதிரச்செய்த பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கை விரைவாக முடித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரத்தால் அடக்குதல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட் மரணங்கள் தொடர்பான மர்மங்கள் குறித்த விசாணைகளை அலட்சியப்படுத்தாமல உண்மைகளை வெளிக்கொணர்தல், வாக்காளர்களை நோக்கிப் பணமும் பரிசுப்பொருள்களும் பாய்வதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்துதல், ஏழு தமிழர் விடுதலைக்குத் தமிழக அரசு உரிய அழுத்தம் அளித்தல், தமிழக மீனவர்களின் தொழிலுக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளித்தல், தமிழக அரசு வாங்கியுள்ள கடன்கள் பற்றிய வெள்ளையறிக்கையை வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. வழிமொழியப்பட வேண்டிய தீர்மானங்களே அவை.

எல்லை கடந்த கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் களம் காணும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள், அமைச்சர்கள், அரசியலாளர்கள், தன்னார்வலர்கள், வணிகர்கள் என அனைவரது சேவையையும் பாராட்டி. நன்றி தெரிவிக்கிற தீர்மானம், எல்லையில் கடும் பனியிலும் நின்று நாடுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரைப் போற்றுகிற தீர்மானம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

பெண்ணியலாளர்கள் குரலைக் கேட்கவில்லையா?

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற உச்சநீதிமன்றக் கருத்தோடு இணைந்த,, கமல் ஏற்கெனவே பேசிவருகிற கொள்கையும் ஒரு தீர்மானமாகியிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. கோட்பாட்டளவில் இதுவொரு முற்போக்கான கருத்துதான் என்றாலும், இந்த ஊதிய ஏற்பாடு இறுதிவரையில் இல்லத்தரசிகளை வீட்டு வேலைகளிலேயே கட்டிப்போட்டுவிடும் என்ற பெண்ணியலாளர்களின் கவலையையோ, அதைத் தடுப்பதற்கு வீட்டுப் பணிகளை சமூகப் பொறுப்பாக்குவது என்ற மாற்று வழிமுறைகளையோ கமல் படித்துப் பார்த்தாரா, பரிசீலித்தாரா என்று தெரியவில்லை. பரிசீலித்திருந்தால் பொதுக்குழு தீர்மானத்திலும் அது பதிவாகியிருக்கும்.

ஏற்கத்தக்க தீர்மானங்களைச் செயல்வடிவம் ஆக்குவதற்குத் தேவைப்படுவது மக்களிடையே கலந்து நிற்பதும், போராடுவதும், கூட்டாகச் செயல்படுவதும்தான். அந்தக் கூட்டுச் செயல்பாடுகளைக் கட்சிக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியேயும் கட்டமைப்பது ஒரு பொறுப்புள்ள அரசியல் இயக்கத்தின் கடமை. அரங்கத்தில் போடப்பட்ட ஒற்றைத் தனி இருக்கை போல, இவர்தான் முதலமைச்சர் என்பதான மறைமுக முன்நிபந்தனைத் தீர்மானங்கள் அப்படிப்பட்ட கூட்டுச் செயல்பாட்டைக் கட்டமைக்கத் தடையாகிவிடும். இதனை, கமலும் பொதுக்குழுவினரும் புரிந்து கொண்டால் நல்லது. உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஆபத்துகள் பற்றிய அக்கறைகளோடு, இலக்குகளை நோக்கிச் செல்லும்போது இடைவழியில் இன்றைய நிலைமைகளில் சாத்தியமாகிற மாற்றுக்கான அரசியல் கூட்டு அணுகுமுறைகளை வகுப்பது பொறுப்புள்ள அரசியல் இயக்கத்தில் மற்றொரு கடமை.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 14 பிப் 2021