மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

மெட்ரோ முதல் டெல்டா வரை: மோடி துவக்கும் திட்டங்கள் என்னென்ன?

மெட்ரோ முதல் டெல்டா வரை: மோடி துவக்கும் திட்டங்கள் என்னென்ன?

பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 14) சென்னை வருகிறார். பல்வேறு அரசுத் திட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வரும் மோடி மூன்று மணி நேரம் சென்னையில் இருக்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கேரளா செல்கிறார் பிரதமர்.

இதுகுறித்து தமிழிலேயே ட்விட் செய்துள்ள பிரதமர் மோடி, “பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது” என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று காலை 11.15 மணியளவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜுன் போர் பீரங்கி வண்டியை (எம்கே-1ஏ) ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.

பிரதமர், ரூ.3,770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கிவைத்து, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். 9.05 கி.மீ. தூர மெட்ரோ பாதை, வடசென்னையை விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் இணைக்கும்.

சென்னை கடற்கரைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த 22.1 கி.மீ நீள பிரிவு, ரூ.293.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்தப் பாதை சென்னை துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இந்த ரயில் பாதை சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகத்தை இணைப்பதுடன், முக்கிய தளங்கள் வழியே செல்லும். இது, எளிதான ரயில் போக்குவரத்து இயக்கத்துக்கு உதவும்.

விழுப்புரம் - கடலூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர், மயிலாடுதுறை - திருவாரூர் பிரிவுகளில் ரூ.423 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள ஒற்றை லைன் மின்மயமாக்கத்தையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். இந்த 228 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கம் விரைவான போக்குவரத்துக்கு உதவும். மேலும், இதனால் சென்னை எழும்பூருக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே ரயில்வே லைனை மாற்றவேண்டிய அவசியமிருக்காது. இதன் பயனாக, எரிபொருளுக்காக செலவாகும் தொகையில், நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.

இந்த நிகழ்ச்சியில், நவீன அர்ஜுன் முக்கிய போர் பீரங்கி வண்டியை (எம்கே-1ஏ) இந்திய ராணுவத்திடம் பிரதமர் ஒப்படைப்பார். உள்நாட்டிலேயே இந்த பீரங்கி வண்டி வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, டிஆர்டிஓ-வின் சிவிஆர்டிஇ மற்றும் 15 நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்களால் தயாரிக்கப்பட்டது.

மேலும், கல்லணை வாய்க்காலைப் புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இந்தக் கால்வாய் மிகவும் முக்கியமானதாகத் திகழ்கிறது. இந்தக் கால்வாயை நவீனப்படுத்தும் பணிகள் ரூ.2,640 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. கால்வாய்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் திறனை இது மேம்படுத்தும்.

சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். சென்னைக்கு அருகே, தையூர் என்னுமிடத்தில், ரூ.1,000 கோடி மதிப்பில் இந்த வளாகத்தின் முதல் பகுதி, 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 14 பிப் 2021