மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: தேர்தல் சீர்திருத்தங்கள்: நாளைய கனவும் இன்றைய தேவையும்!

சிறப்புக் கட்டுரை: தேர்தல் சீர்திருத்தங்கள்: நாளைய கனவும் இன்றைய தேவையும்!

அ.குமரேசன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம், வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை 93,000 ஆக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. கொரோனா நிலைமைகளின் அடிப்படையில், சமூக இடைவெளி பராமரிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு பல கட்சிகளும் ஆணையத்திடம் இக்கோரிக்கைகளை வைத்திருந்தன. வியாழனன்று (பிப்.11) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவற்றை அறிவித்தார்.

கட்சிகள் முன்வைத்த வேறு கோரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஒரே கட்டமாக இங்கே தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும், தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களிலும் வாக்குப் பதிவு முடிந்தபின்னரே இங்கே வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். செலவினக் கண்காணிப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் தெரிவித்தார்.

அதிகாரம், அரசு எந்திரப் படைகள் என ஆளுங்கட்சிகளுக்கு சாதகமான நிலைமைகளும், எதிர்க்கட்சிகளுக்குத் தவிர்க்க முடியாத சட்டப்பூர்வ வாய்ப்புகளும் இருக்கின்றன. மக்களின் முக்கியமான வாய்ப்பு, சொல்லப்போனால் ஒரே வாய்ப்பு, தேர்தல் மட்டுமே. ஜனநாயகத்தில் மக்களே எசமானர்கள் என்று சொல்லப்பட்டாலும், அந்த எசமானர்களுக்கு அடுத்த தேர்தல் வரையில் எவ்வகையிலும் தலையிடும் உரிமையோ, அரசை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தட்டிக்கேட்கும் வல்லமையோ கிடையாது. அந்த வல்லமையைச் சட்டங்கள் வழங்கவில்லை. ஆகவே, கட்சிகள் சார்ந்து இயங்குவோர் தவிர்த்துப் பொதுமக்களைப் பொறுத்தவரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டும் புலம்பிக்கொண்டும் பொருமிக்கொண்டும் காத்திருக்க வேண்டியவர்கள்தான்.

பெரும்பான்மை பிரதிபலிக்கிறதா?

அத்துடன், கட்சிகளுக்கு உண்மையாகவே மக்களிடம் உள்ள ஆதரவுத் தளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற, மாநில சட்டமன்றப் பிரதிநிதிகளின் விகிதம் அமைவதில்லை. தேர்தல் சட்ட விதிகள் அதற்கு இடமளிக்கவில்லை. மேலும், தற்போதைய ஒற்றைப் பெரும்பான்மை முறையால், பதிவானதில் அதிகமான வாக்குகளைப் பெறுகிற வேட்பாளர் அல்லது கட்சி அல்லது அணி வெற்றிபெற்றுவிட முடிகிறது. 100 பேர் வாக்களிக்கிறார்கள் என்றால், 27 பேரின் வாக்குகளைப் பெற்றவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்த 73 பேருக்கும் சேர்த்தே பிரதிநிதியாகிறார். தனித்தனியே களமிறங்கும் எதிர்க்கட்சிகள் மொத்தம் 60 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், நேரடியாகவும் கூட்டாளிகள் மூலமாகவும் 40 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சி ஆட்சியதிகாரத்திற்கு வர முடிகிறது. அதாவது இந்த ஒற்றைப் பெரும்பான்மை முறையால், உண்மைப் பெரும்பான்மையின் தேர்வாகத் தேர்தல் முடிவுகள் வருவதில்லை.

ஆகவேதான், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைத் திரும்பப்பெறுகிற உரிமை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இரண்டு மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவை நடத்தி, ஒவ்வொரு கட்டத்திலும் குறைவான வாக்குகள் பெறுகிறவர்களைக் கழற்றிவிட்டு, கூடுதல் வாக்குகள் பெறுகிறவர்களிடையே இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிற நடைமுறை பெருமளவுக்குப் பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

ஜனநாயகம் என்பதற்கான உண்மைப் பொருளை நோக்கிச் செல்லக்கூடிய இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்கள் இன்னமும் இதில் அக்கறையுள்ளோரின் கனவுகளாகவே இருக்கின்றன. எப்போதாவது அல்லது தேர்தல் குழப்பங்களின்போது நடைபெறக்கூடிய விவாதங்களில் இவை போன்ற சீர்திருத்தங்களைச் சிலர் வலியுறுத்துவார்கள். ஆனால் தற்போதைய நடைமுறையில், குறைந்த ஆதரவு பெற்றிருந்தாலும் பதவிகளைப் பிடிக்க முடியும், அதற்காக சாதி/மத பின்னணிகளைப் பயன்படுத்த முடியும் என்ற தற்போதைய ஏற்பாட்டை மாற்றுவதற்கு எத்தனை கட்சிகள் மனப்பூர்வமாக முன்வரும்? தொலைக்காட்சி விவாதங்களில் யாராவது இந்த ஏற்பாட்டை விமர்சித்தால், சட்ட விதி அப்படித்தானே இருக்கிறது என்றும், எந்தக் கட்சியும் இந்த வழியில் ஆட்சிக்கு வர முடியுமே என்றும் பதில்கள் வருவதைப் பார்க்கலாம். மாற்றத்திற்குத் தயாராக இல்லை என்பதன் எதிரொலியே அந்தப் பதில்கள்.

உடனடித் தேவைகள்

தேர்தலில் அடிப்படையான மாற்றத்தின் தேவையை மக்கள் புரிந்துகொள்ளச் செய்வதற்குத் தொடர்ச்சியான கருத்துப் பரவல்களே இப்போது தேவைப்படுகின்றன. அதற்கான முயற்சிகளே இப்போது சாத்தியமும் கூட. ஆகவே அந்த அடிப்படைச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே,, தற்போதைய தேர்தல் நடைமுறைகளிலேயே உடனடியாகச் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் வலியுறுத்த வேண்டியதாகிறது. தேர்தல் ஆணையத்திடம் தமிழகக் கட்சிகள் அளித்த ஆவணங்களில் அப்படிப்பட்ட உடனடி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் இருக்கின்றன.

பணப் பட்டுவாடாவை தடுக்கத் திட்டவட்டமான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கை. கடந்த தேர்தல்களில் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தலைமை ஆணையரே விமர்சித்திருக்கிறார். ஆக இதில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை அல்லது ஆணையத்திற்கு முழுமையான அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது.

கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் பணம் பாய்ந்த தொகுதிகளில் கூட ஆணையத்தால் அதைத் தடுக்க முடியவில்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் குறிப்பிட்ட தொகுதியில் வாக்குப்பதிவை நிறுத்திவைக்க முடியும். கூடுதலாகப் போனால் தேர்தலையே விலக்கிக்கொள்ள முடியும். அவ்வளவுதான். ஆனால், யாருடைய அத்துமீறல்கள் இந்த நடவடிக்கைகள் தேவைப்பட்டனவோ, அவர்களே மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறபோது வேட்பாளர்களாக வலம் வர முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தேர்தல் அத்துமீறல் வழக்கு கொடுக்கப்படுமானால், அதை விசாரித்து தீர்ப்பளிக்க அதிகாரம் நீதிமன்றத்திற்குத்தானே இருக்கிறது? ஏற்படுத்துவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடுகிறதே!

அன்றே தொடங்கிவிட்டது!

வாக்குக்குப் பணம் கொடுப்பது இன்று நேற்றல்ல, சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டபோதே தொடங்கிவிட்டது! ஊரின் “பெரிய மனிதர்கள்” (அதாவது பணக்காரர்கள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெரிய ஆட்கள்…) அல்லது அவர்களின் ஆதரவு பெற்றவர்கள் வேட்பாளர்களாக நின்றபோது, வாக்காளர்களுக்கு வெற்றிலையில் ஒரு ரூபாய் காசு வைத்து சத்தியம் வாங்கிக்கொள்வார்களாம். ஒரு ரூபாய் என்பது அன்றைக்குப் பெரிய பணமா இல்லையா என்பதை விட, எளிய மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்படும் பண்பாட்டை இவ்வாறு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியது. மற்ற பல நடப்புகளிலும் “வளர்ச்சி” ஏற்படுவது போல, வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதிலும் “வளர்ச்சி” ஏற்பட்டு, புதுப்புது நுட்பங்கள் கையாளப்படுகின்றன. வாக்குறுதிகளால் கவர்வதை விட ஒரு பகுதி வாக்காளர்களையாவது பணம் கொடுத்துக் கவர்வது தொடர்கிறது.

பணப்புழக்கத்தை உண்மையாகவே கட்டுப்படுத்த முடிந்தால் அது வாக்காளர்களை ஊழல் பேர்வழிகளாக்குகிற அத்துமீறல்களைத் தடுத்து, தேர்தலை முறையாக நடத்துவதற்குத் துணை செய்யும். அது மட்டுமல்ல, தேர்தலுக்கான சட்டப்பூர்வ தேவைகள் அல்லாத நோக்கங்களுக்காகப் பணம் திரட்ட வேண்டிய கட்டாயத்திலிருந்து, அதிலே ஈடுபடுகிற கட்சிகளுக்கும் பெரிய நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, இதிலே “அனுபவம் வாய்ந்த” கட்சிகளுக்கு நிகராக நிற்கவியலாத கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் நம்பிக்கையளிக்கிற போட்டிச் சமதளம் உருவாகும்.

சமதளப் போட்டிக்காக

சமதளப் போட்டியை உறுதிப்படுத்துவதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்கப்பட்ட மற்றொரு கோரிக்கை, மிக மிக முக்கிய நபர்கள் (விவிஐபி) பேசுகிற பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பரப்புரை நிகழ்ச்சிகளுக்குத் தரப்படுகிற சலுகைகள் தொடர்பானது. அந்த மிக மிக முக்கிய நபர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் “சாதா” நபர்களின் நிகழ்ச்சிகளுக்குக் காவல்துறையினர் அனுமதி தருவதில்லை. சட்டம் ஒழுங்கு தொடர்பான காரணங்கள் கூறப்படும்.

தேர்தல் என்று வந்துவிட்டால் எல்லோரும் சமமானவர்களே. மிக மிக முக்கியமானவர்கள், மிக முக்கியமானவர்கள், வெறும் முக்கியமானவர்கள், முக்கியமல்லாத சாதாரணர்கள் என்று பாகுபடுத்துவதில் அறமில்லை. யார் சொல்வதையும் கேட்டு முடிவெடுக்கிற சுதந்திரம் வாக்காளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தலைமை அமைச்சர்களோ, இதர அமைச்சர்களோ தங்கள் பதவிப்பொறுப்பின் காரணமாக அரசு சார்ந்த பிரச்சினைகளில் தலையிடவும், விரைந்து பயணங்கள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவது வேறு. தேர்தல் கள வேட்பாளர்கள் என்ற முறையிலோ, வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பேச வந்தவர்கள் என்ற முறையிலோ வருகிறபோது அப்படிப்பட்ட சிறப்புச் சலுகைகள் விலக்கப்படுவதே ஜனநாயகத்தின் ஆரோக்கியம்.

அந்த ஆரோக்கியத்தை வளர்ப்பதற்குத் தடையாக இருக்கிற மற்றொரு அத்துமீறல்தான், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அரசு எந்திர அமைப்புகளை அரசியல் ஆதாய நோக்கத்திற்குப் பயன்படுத்துவது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நாள் முதல் இவ்வாறு பயன்படுத்த முடியாது என்பதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குப் பதிவு நாளன்று, வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் ஆணையத்தின் வாக்குச் சாவடி அடையாளச் சீட்டுகளைப் பல இடங்களில் ஆளுங்கட்சியினரிடம் அதிகாரிகள் கொடுப்பது பற்றிய புகார்கள் நிறையவே உண்டு. ஆள்மாறாட்டத்திற்கு வழிசெய்யும் இந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். சாவடிக்குள் வருகிறவர்களிடம் விசாரித்து, ஆவணங்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்து வாக்களிக்க அனுமதிப்பதற்கென்றே சிறப்பு அலுவரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை கூறப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எல்லோரும் இன்னமும் புகைப்பட அடையாள அட்டை பெற்றுவிடவில்லை என்பதால், அதற்கான பணிகளை விரைவுபடுத்துவதோடும் சம்பந்தப்படுகிற ஆலோசனை இது.

முப்பெரும் தளங்கள்

ஆணையம் தானாக அப்படிப்பட்ட அதிகாரங்களை எடுத்துக்கொள்ள முடியாது என்கிற சட்டச்சூழலில் அத்தகைய அதிகாரங்களை ஆணையத்திற்கு வழங்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது. ஏதோவொரு வகையில் மக்களின் பிரதிநிதிகளுக்கு இப்படி ஆணையங்களின் அதிகாரங்களை உறுதிப்படுத்துகிற பொறுப்பு தரப்பட்டிருப்பது ஆரோக்கியமானதொரு ஜனநாயக ஏற்பாடுதான். ஆட்சியிலோ எதிர் வரிசையிலோ அமர்ந்திருக்கிற கட்சிகள் எந்த அளவிற்கு இந்த பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று பார்க்கவேண்டும். ஒரு கட்சி இதற்கான ஒரு சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தாலும் கூட, அதற்கு ஆதரவாக எல்லா உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி விட முடியாது, இன்று உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டம் அவ்வாறு கைகளை உயர்த்த விடாது. இதையெல்லாம் கடந்துதான் சீர்திருத்தங்கள் முளைவிட வேண்டியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் ஒருபக்கச் சார்புடன், குறிப்பாக மத்திய ஆளுங்கட்சிக்குத் தோதாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற ஆங்கிலப் பழமொழி அடிக்கடி மேற்கோள் காட்டப் படுவது உண்டு. அப்படியானால் சீசர் சந்தேகத்திற்கு உரியவராக இருக்கலாமா என்ற புதுமொழி எதிர்க்கேள்வியாக எழுப்பப்பட்டாக வேண்டும். அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறவர்களுக்கு, சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் இதர பல அமைப்புகளையும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சேவகக்கூடாரங்களாக மாற்றிவிடக்கூடாது என்ற நேர்மை தேவை.

ஒட்டுமொத்த நாடு, மாநிலம், ஒன்றியப் பகுதி ஆகிவற்றின் அரசியல்-நிர்வாகத் தலையெழுத்துகளைத் தீர்மானிக்கிற தேர்தலை நடத்திக்கொடுக்கும் ஆணையம் தன் மீது சந்தேகக் கறை படியாமல் இருப்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். ஆணையர்கள் நியமனம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதை உறுதிப்படுத்துதல், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவைத் துணைத்தலைவர், எதிர்க்கட்சித் த்லைவர், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட குழு அவர்களைத் தேர்வு செய்தல் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் முன்பு சொல்லப்பட்டிருக்கின்றன. முன்னாள் தேர்தல் ஆணையர்களிடமிருந்தே கூட இப்படிப்பட்ட கருத்துகள் வந்திருக்கின்றன.

அரசியல் சரிவுகள், ஒரு நுண்ணுயிரியால் ஏற்பட்ட நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள், மக்களின் வாழ்வாதாரச் சீர்குலைவுகள், அத்தனையையும் மறைக்கும் மதவாதத் திசைதிருப்பல்கள், மாற்றுக் கருத்துகளை மனந்திறந்து வெளிப்படுத்துவதற்குப் போடப்படுகிற தளைகள் என நாடு இன்று எதிர்நோக்கியுள்ள சவால் மிக்க சூழல்களில், தேர்தல் ஆணையம் இப்போது வரவிருக்கும் தேர்தல்களை முறையாக நடத்திக்கொடுக்கட்டும். பின்னர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கான மாற்றங்கள் குறித்த விவாதங்களைத் தொடங்கட்டும். ஏதோ சில அரங்குகளில் முடிந்துபோகாமல், “P-3” (Parliament, Parties, Public) ஆகிய முப்பெரும் தளங்களில் அந்த விவாதங்கள் நடைபெறுவதாக ஒரு கனவு.

கட்டுரையாளர் குறிப்பு:

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 13 பிப் 2021