மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

திமுக அணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள்? உடைத்த வைகோ

திமுக அணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள்?  உடைத்த வைகோ

வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மதிமுகவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கக் கூடும் என்றும் அவர் கட்சியினருக்கு நேரடியாகவே கூறியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 12) மதிமுகவின் தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் நடந்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் ஒருகோடியே 97 லட்சம் ரூபாய் நிதியளிக்கப்பட்டது.

நிதியைப் பெற்றுக் கொண்டு வைகோ பேசுகையில், “ஏறத்தாழ, ஓராண்டுக்குப் பின்னர் உங்களை நான் சந்திக்கின்றேன். கொரோனா தாக்குதலுக்குப் பிறகு, பொது முடக்கம் காரணமாக, கடந்த ஓராண்டுக் காலமாக நாம் இயங்க முடியவில்லை. 2019 செப்டம்பர் 15 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுக்குப் பின்னர், நான் தோழர்களைச் சந்திக்கவில்லை. ஆனால், ஜூம் காணொளிக் காட்சிகளின் வழியாக சில நிகழ்வுகளில் பங்கேற்றாலும் கூட, நேரடியாகச் சந்திக்க முடியவில்லை.

கழகம் அதிகாரத்தில் இருந்தது இல்லை; அந்தப் பொறுப்பிற்கு வரும் என்ற நம்பிக்கையோடு பாடுபட வேண்டும் என்றும் சொல்வதற்கு இல்லை. இருப்பினும் கூட, நிதி திரட்ட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எல்லோரும் சொன்னபோது, ‘நிதி கிடைக்குமா?’ என நான் சந்தேகப்பட்டேன்.

இந்தக் கொரோனா காலத்தில், எந்தக் கட்சியும் மக்களிடம் நேரடியாகச் சென்று நிதி திரட்டவில்லை. அப்படி நிதி திரட்ட வேண்டிய தேவை, பல கட்சிகளுக்கு இல்லை. அவர்களிடம் நிதி குவிந்து இருக்கின்றது.

ஆனால், நமது இயக்கத்தில் இருக்கின்ற நீங்கள் எல்லோரும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வசதி குறைந்தவர்கள். இந்தக் கட்சிக்குப் பணம் கிடையாது; பதவியும் கிடையாது; எந்த அதிகாரமும் கிடையாது. அடுத்த தேர்தலில் நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் கிடையாது; இத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. மிகக் குறைந்த இடங்கள் கூடக் கிடைக்கலாம்” என்று மதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வைகோ தொடர்ந்து பேசுகையில்,

“ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் பாடுபடுகின்றீர்களே, உங்களைப் போன்ற தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கும் வாய்க்க மாட்டார்கள். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, நிதி திரட்ட வேண்டும என, தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வருகின்றது; தைப்பொங்கலும் வருகின்றது. அதற்குப் பிறகு, பத்துப் பதினைந்து நாள்களில் நிதியைச் சேகரித்து, இந்த அளவிற்குக் கொடுக்க முடியும் என்று சொன்னால், மக்கள் என் மீது வைத்து இருக்கின்ற நம்பிக்கை; கொள்கையின் மீது நீங்கள் வைத்து இருக்கின்ற பற்று; இலட்சியப் பிடிப்புதான் காரணம்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, கழகத்தின் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து இருக்கின்றேன். சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்து இருக்கின்றேன். சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்து இருக்கின்றேன். (கைதட்டல்). அடுத்த ஆண்டிலேயே நிலைமை மாறும். ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்து இந்தக் கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்கின்றேன். இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்தி உழைத்து இருக்கின்றேன்.

இந்தக் கட்சிக்கு அடுத்த கட்டத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதற்காகத் திட்டங்களை வகுத்து இருக்கின்றேன். ஏற்றுக்கொண்ட கொள்கைகள், இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்காக, இறுதி மூச்சு அடங்குகின்ற வரையிலும் வாழ்ந்தான் வைகோ என்று பெயர் பெற வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். (கைதட்டல்). உறுதியாக நாம் வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டோம். அதை அப்படியே தொடர்ந்து வந்து, இந்தச் சட்டமன்றத் தேர்தல் களத்திலும் அவர்களோடு இணைந்து செயல்படுவது எனத் தீர்மானித்து வேலை செய்கின்றோம்.

காரணம், சனாதன, வருணாசிரம சக்திகள், இந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்து, திராவிட இயக்கக் கொள்கைகளை ஒழித்துக் கட்டக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், அவர்களை முறியடிக்க வேண்டிய கடமையைக் கருதி நாம் செயல்படுகின்றோம். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பக்கபலமாக இயங்கிக்கொண்டு இருக்கின்றோம். நமக்கு இருக்கின்ற வலிமையை வீணாக்கி விடக் கூடாது என்பதனால், இணைந்து செயல்படுகின்றோம்.

நமக்கு எத்தனை இடங்கள் என்பது பிரச்சினை இல்லை. மிகக்குறைந்த எண்ணிக்கைதான் என்றாலும், அதற்காக முணுமுணுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. ஆனால், நமக்கு இடங்கள் குறைவாகக் கிடைத்தால், நமது வீடுகளிலேயே கூடக் கேலி செய்வார்கள். தெருக்களில் கேலி செய்வார்கள். அதற்காகக் கவலைப்படக்கூடாது. நீங்கள் வருத்தப்பட்டால், அதைவிடப் பலமடங்கு நான் வேதனைப்படுவேன். நமது இயக்கத்தில் தகுதி வாய்ந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும் என நான் விரும்புகின்றேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை. கொடுக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாது. இந்தச் சூழ்நிலையில் யாரைத் தேர்ந்து எடுப்பது எனத் திகைத்துக்கொண்டு இருக்கின்றேன். எத்தனை பேருக்குக் கிடைக்கின்றது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக்கொண்ட கொள்கைகளைக் காக்க உழைப்போம். இலட்சியங்களை நிறைவேற்றப் போராடுவோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம்”என்று பேசியிருக்கிறார் வைகோ.

ஏற்கனவே திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரட்டை இலக்கம் கிடைக்கும் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடையே ஒரு பேச்சு இருக்கிறது. இரட்டை இலக்கத்தில் குறைந்தபட்சம் என்றால் கூட 10 சீட்டுகள் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்,

ஆனால், “நமக்கு மிகக் குறைந்த எண்ணிக்கைதான் கிடைக்கும் என்றாலும் அதற்காக முணுமுணுத்துக்கொண்டிருக்க கூடாது” என்று வைகோ பேசிய பேச்சு மதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தையும், அதிர்வையும் உண்டாக்கியிருக்கிறது. வைகோ இப்படி வெளிப்படையாக பேசியிருப்பது திமுக கூட்டணியில் இருக்கும் ;பிற கட்சித் தலைமைகளிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஆரா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 13 பிப் 2021