�பேச்சு, பேட்டி, பதிலடி, சந்திப்பு, கனிவு, காட்டம்…. திருப்பூரை திகைக்க வைத்த கனிமொழி பரப்புரை!

politics

தமிழக அரசியல், இப்போது மையம் கொண்டிருப்பது கொங்கு மண்டலத்தில்தான். மீண்டும்மீண்டும் தமிழக முதல்வர் பழனிசாமி, கோவை, திருப்பூர், சேலம் என வலம் வந்து கொண்டிருப்பது, இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதிமுகவினர் தங்களுடைய கோட்டையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றனர். அதை உடைக்க வேண்டுமென்பதற்காக திமுக தலைவர்களும் கொங்கு மண்டலத்தைக் குறி வைத்து, பரப்புரையை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ஸ்டாலினும், ராகுலும், கனிமொழியும் வந்து மக்கள் கிராமசபை, தொழில் முனைவோர் சந்திப்பு என்று ஒரு ‘ரவுண்டு’ முடித்துவிட்டுப் போனதில் திமுக கூட்டணிக் கட்சியினர் சற்று உற்சாகமாகவே இருக்கின்றன

இந்நிலையில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரப்புரைப் பயணம் மேற்கொண்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கோவைக்கு கனிமொழி வந்தபோது, அவருக்குக் கிடைத்த வரவேற்பும், பெரும் திரளாகக் கூடிய பெண்கள் கூட்டமும் அங்குள்ள அதிமுகவினருக்கு லேசான ‘ஜெர்க்’ கொடுத்ததை அவர்களுடைய கட்சிக்காரர்களே மறுக்க முடியாது. கனிமொழியின் யதார்த்தமான பேச்சு, எளிமையான அணுகுமுறை, கட்சிக்காரர்களிடம் கனிவான விசாரிப்பு என திமுக நிர்வாகிகள் பலரும், அந்த பரப்புரைப் பயணத்தில் பரவசமடைந்ததும் உண்மை.

கோவையைப் போலவே திருப்பூரும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருப்பதால், அங்கு கனிமொழியின் பரப்புரைக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்குமென்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவருடைய இரண்டு நாள் பரப்புரைப் பயண நாட்களிலேயே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் திருப்பூரில் பரப்புரை மேற்கொள்ள, மேலும் பற்றிக் கொண்டது பரபரப்பு. இருவருடைய நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் கூட்டுவதற்கு இரண்டு கட்சிக்காரர்களுமே வழக்கமான யுக்திகளைக் கையாண்டிருந்தனர். ஆனால் முதல்வரின் கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமே அதிகமாகத் திரண்டதையும், கனிமொழியின் பேச்சைக் கேட்பதற்கு கட்சிக்காரர்களைத் தாண்டி, நடுநிலையாளர்களும், மற்ற கட்சிக்காரர்களும் வந்திருந்ததைப் பார்க்க முடிந்ததாக உள்ளூர் போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் பேசியதைக் கேட்க முடிந்தது.

கடந்த ஐம்பதாண்டு தேர்தல்களிலும், அத்திக்கடவு–அவினாசி திட்டம் குறித்த வாக்குறுதிகள் இடம் பெறாத தேர்தல் என்று எதுவுமே நடந்ததில்லை. கடந்த தேர்தலிலும் கூட அது இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் அது இடம் பெற்றிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இந்த முறை, அத்திக்கடவு–அவினாசி திட்டப் பணிகளைத் துவக்குவதற்கு நிதி ஒதுக்கியது அரசு. பணிகளும் துவங்கி நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் அதைத்தான் தங்களுடைய துருப்புச்சீட்டாக அதிமுக பயன்படுத்தப்போவது தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதை திமுக எப்படி எதிர்கொள்ளுமென்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்திருக்கிறது. கனிமொழி என்ன பேசுவார் என்பதைக் கேட்கவும் பலர் ஆவலாக இருந்தனர்.

அதற்கேற்ப, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் கனிமொழியின் 2 நாள் பரப்புரைப் பயணமும் திட்டமிடப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் சேவூரில் துவங்கிய அவருடைய பயணத்தில், தத்தனுார் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினருடன் சந்திப்பு, கருவலுார், பொங்கலுார் கள்ளிப்பாளையம், அனந்தகிரியில் மகளிர் கிராமசபை, முருகம்பாளையத்தில் சாய ஆலைத்துறையினருடன் சந்திப்பு, ஆண்டிபாளையத்தில் வனத்துக்குள் திருப்பூர் குழுவினருடன் சந்திப்பு, இச்சிபட்டியில் விசைத்தறியாளர்களுடன் கலந்துரையாடல் , கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் சந்திப்பு, நால்ரோட்டில் பிரசாரம் என வித்தியாசமான கலவையான பயணத்திட்டமாக இருந்தது.

இரண்டாம் நாளிலும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள், கிறிஸ்துவ திருச்சபை நிர்வாகிகள், ஆடை உற்பத்தியாளர்கள், கன்னடச் செட்டியாளர் பெண்கள், திருநங்கையர் ஆகியோருடன் சந்திப்பு, மக்கள் கிராமசபைக் கூட்டம், பத்திரிக்கையாளர் சந்திப்பு, சிடிசி கார்னரில் பிரசாரம் என்று பரபரவென்று இருந்தது கனிமொழியின் பரப்புரைப் பயணம்.

முதல் நாளன்று, அவர் திருப்பூரில் வலம் வந்த அதே நாளில்தான் முதல்வர் பழனிசாமியும் அதே மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அன்றைக்கு பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதற்கு முன்பு, அவர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்த கனிமொழி, ‘‘முதல்வருக்கு வரும் கூட்டம் எப்படியிருக்கிறது’ என்று விசாரித்துக் கொண்டிருந்தார். ‘நாங்கள் பத்து வருஷமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஆளும்கட்சி பல விஷயங்களைச் செய்யவில்லை என்று மக்களிடம் நாங்கள் குறைகள் கேட்கிறோம். எங்களைப் பார்த்துவிட்டு, ஆளும்கட்சியும் குறை கேட்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் குறைகள் நிறைய இருக்கிறது என்று அவர்களே ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்’’ என்று நிருபர்களிடம் கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் தலையாட்டி வைத்தார்கள் அவர்கள்.

ஆடை ஏற்றுமதி, தொழில், வேலை வாய்ப்பில் தனித்துவமாக விளங்கும் திருப்பூரில், பல தரப்பு தொழில் முனைவோரை அவர் சந்தித்துப் பேசியபோது, அந்தந்தத் துறைகள் தொடர்பாக பல விஷயங்களையும் அவர் நன்கு சேகரித்துக் கொண்டு வந்திருந்ததையும், அதற்கான தீர்வுகள் குறித்து ஏற்கெனவே பலரிடம் விவாதம் செய்திருப்பதும் அவருடைய பதில்களில் தெரியவந்தது. பொத்தாம்பொதுவாக பிரச்சினைகளைக் கேட்காமல், திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று அவர் தகவல்களைக் கேட்டு வாங்கிய விதம், தொழில் முனைவோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய இரண்டு நடவடிக்கைகளாலும், திருப்பூரில் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகளைப் பற்றி, கனிமொழி பேசியது, அங்குள்ள தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரையும் யோசிக்க வைப்பதாக இருந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை பல இடங்களிலும் சுட்டிக்காட்டிப் பேசினார் கனிமொழி. ஊத்துக்குளி ரோட்டில் எட்டு ஆண்டுகளாக பாலம் கட்டி முடிக்கப்படாமல் இருப்பது, திருப்பூர் மக்களிடம் பேசுபொருளாக இருப்பதை அறிந்து அதைப் பற்றியும் பேசி கைதட்டல்களை வாங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டம் சரிவர நடக்கவில்லை என்பதற்கான சில ஆதாரங்களைத் திரட்டி அவரிடம் திமுகவினர் கொடுத்திருந்ததாகத் தெரிகிறது.

அதைச் சுட்டிக்காட்டும் வகையில், ‘குடிமராமத்து திட்டம் வெறும் காகிதத் திட்டம்’ என்று நெற்றியடியாகக் குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரத்தை அறிவித்த முதல்வர் பழனிசாமி, அவர்களுடைய அம்மா (ஜெயலலிதா) எதிர்த்த உதய் மின் திட்டத்தில் இணைந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், பரப்புரையிலும் அவர் குறிப்பிட்டுப் பேசிய ஒரு விஷயம், அதிமுக வெளியிடும் விளம்பரங்கள் பற்றியது. அதிமுக விளம்பரம் கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால் ஏற்கெனவே கடனில் தத்தளிக்கும் அரசுப் பணத்தில் அதை ஏன் தர வேணடும், அதிமுக கட்சி நிதியிலிருந்து தரவேண்டியதுதானே என்று அவர் காட்டமாகக் கேட்டது எல்லோரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது.

திருப்பூரில் கனிமொழியின் பரப்புரை ஏற்படுத்திய தாக்கத்தை, உடுமலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு வெளிப்படுத்தியது. கனிமொழி போகுமிடமெல்லாம் பொய்ப்பிரசாரம் செய்கிறார் என்று அவர் கொந்தளித்தது, திமுகவினரிடம் இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கனிமொழியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நாங்கள் எதற்குப் பொய் சொல்கிறோம்; மக்கள் கிராமசபை கூட்டங்களில் மக்கள் எங்களிடம் சொல்லும் புகார்களைத்தான் நாங்கள் சொல்கிறோம்!’’ என்று பதிலடி கொடுத்தார். காங்கிரஸ் கட்சிக்கு திமுக அடிமையாக இருந்ததாக முதல்வர் பேசிய பேச்சு பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘அப்போது நாங்கள் காங்கிரசை மிரட்டுகிறோம் என்றார்கள்; இப்போது நாங்கள் அடிமைகளாக இருந்தோம் என்கிறார்கள். அதிமுக அரசு, பாரதிய ஜனதாவுக்கு எவ்வளவு அடிமையாக இருக்கிறது என்று நாங்கள் சொல்லி மக்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. கொள்கை முரண்பாடு ஏற்பட்டதும் கூட்டணியிலிருந்து வெளியேறிய துணிச்சல் எங்களிடம் இருந்தது’’ என்றார்.

சமூகம், தொழில் சார்ந்த பல்வேறு அமைப்பினருடன் சந்திப்பு, ‘பின் பாயிண்ட்’ ஆகப் பேசும் பிரசாரம், முதல்வரின் ஆவேசப் புகார்களுக்கு அலட்டல் இல்லாத பதில்கள், காதர்பேட்டை மார்க்கெட்டில், துணிகள் வாங்கி,ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி என்று கனிமொழியின் திருப்பூர் பயணம், பொது மக்களிடம் பலவிதங்களிலும் கவனம் ஈர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து எடுப்பதற்கு திமுக எடுக்கும் பலவித அஸ்திரங்களில் கனிமொழியின் பரப்புரை, கண்டிப்பாக பலன் தருமென்று நம்புகிறார்கள் உடன் பிறப்புகள். கலைஞர் மகளாமே என்று கனிவோடு கனிமொழியைப் பார்க்கும் பெண்கள், அவருடைய பேச்சை நம்புகிறார்களா, தேர்தலில் ஆதரிப்பார்களா என்ற கேள்விகளுக்கு காலத்திடம் இருக்கிறது விடை.

**–பாலசிங்கம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *