மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

கமல்-காங்கிரஸ்: பாலம் போடும் பழ. கருப்பையா

கமல்-காங்கிரஸ்: பாலம் போடும் பழ. கருப்பையா

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 11) காலை முதல் மதியம் வரை முதல் அமர்வாகவும் மதிய உணவுக்குப் பின் பிற்பகல் தொடங்கி மாலை 7 மணி வரை இரண்டாம் அமர்வாகவும் நடந்தது.

காலை அமர்வு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையோடு நிறைவுபெற்றது. பொதுக்குழுவின் இரண்டாவது அமர்வாக மதியம் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கியது. மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் அரைமணி நேரம் நடந்தது. அதன்பின் தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு வகுப்புகள் நடந்தன.

அதன் பின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கமல்ஹாசன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கவனித்தார்.

பழ.கருப்பையா பேசும்போது, “1980 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டதும், நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டது. அந்த தேர்தலில் திமுக 112இடங்களிலும்,காங்கிரஸ் 114தொகுதிகளிலும் போட்டியிட்டன. இப்படி சட்டமன்றத் தேர்தலிலேயே 114 இடங்கள் போட்டியிடும் அளவுக்கு தமிழகத்தில் பலமாக இருந்த காங்கிரஸ் இப்போது பாதிக்குப் பாதி அதில் பாதி என ஆகி பத்து, பதினைந்து, இருபது சீட்டுகளில் போட்டியிட வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டது.

பாண்டிச்சேரியில் காங்கிரஸின் வேட்டியை அவிழ்த்துவிட்டார்கள். தமிழ்நாட்டிலும் அவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் இந்த காலத்தில் புதிய அணி அமைக்க முன் வரவேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் ஆரோக்கிய அரசியலுக்கு அடிகோல வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அவரை நான் தனிப்பட்ட முறையில் நான் அவரை நான்கு முறை சந்தித்தேன். கமலுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றமுடிவை எடுத்துவிட்டார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர்த்த மூன்றாவது அணி அமைக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

இதுபற்றி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “கமல்ஹாசனை வைத்துக்கொண்டு, ’காங்கிரஸ் தமிழகத்தில் தனி அணிஅமைக்க வேண்டும் என்று பழ. கருப்பையா பேசியது காங்கிரசையும் கமல்ஹாசனையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டே ராகுல் காந்தியை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். இருவரும் தமிழகத்தின் அரசியல் நிலைமை பற்றி விரிவாக விவாதித்தார்கள். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இடங்கள் குறைக்கப்படுவதாக செய்திகள் வரும் நிலையில்.... பழ.கருப்பையாவின் இந்த பேச்சுக்கு அந்த அரங்கத்தில் வரவேற்பு இருந்தது. அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், ‘கமல்ஹாசன் மதச்சார்பற்ற அணிக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார். அது காங்கிரஸின் தனிப்பட்ட கருத்து என்று ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்த பின்னணியில்தான் பழ. கருப்பையா பேச்சு பார்க்கப்பட வேண்டும்” என்கிறார்கள்.

பழ.கருப்பையா பேச்சுக்குப் பின் பேசிய கமல்ஹாசன், “எங்கள் மூத்தவர் பல அரிய கருத்துகளை இங்கே எடுத்துரைத்துள்ளார். அவருக்கு நன்றி” என்று குறிப்பிட்டார். காலை அமர்வில் திமுகவையும், அதிமுகவையும் கமல் கடுமையாக தாக்கிய நிலையில், மாலையில் காங்கிரஸ் மீது பாசம் காட்டியிருக்கிறது மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு.

-ஆரா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 12 பிப் 2021