மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

6 லட்சம் கோடிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட இல்லை!

6 லட்சம் கோடிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. கூட இல்லை!

"தமிழகத்திற்கு 6 லட்சம் கோடிக்கு மேல் நலத்திட்டங்கள் கொடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் ஒரு எம்.பி, எம்.எல்.ஏ கூட தரவில்லை. இது நியாயமா..? உங்கள் இதயத்தை தொட்டு கேட்டுப் பாருங்கள்." - என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி.

திராவிடம் என்றால் என்ன ?

தமிழ் கலாச்சார மற்றும் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை அவமதிப்பதுதான் திராவிடமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல கட்சிகளில் உள்ளவர்கள் பாஜகவில் இணைவது என்பது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், லேட்டஸ்ட் வரவாக சென்னை மாநகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணையும் இணைப்பு விழா பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று (பிப், 11) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி, நடிகர் ராதாரவி, தமிழக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கராத்தே தியாகராஜனின் ஆதரவாளர்கள் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பாஜக உறுப்பினர் அட்டையை கராத்தே தியாகராஜனிடம் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

கராத்தே தியாகராஜன்

பாஜகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுகொண்ட பின் உரையாற்றிய கராத்தே தியாகராஜன் "காங்கிரஸ் கட்சியில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே பாஜகவிற்கு வந்துவிடுமாறு பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். ஜிஎஸ்டி யை கொண்டுவந்தது, ஜல்லிகட்டை நிறுத்தியது, நீட்டை கொண்டுவந்தது காங்கிரஸ்தான்.

முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் ஓர் சமுதாய இயக்கம் என்றார் கருணாநிதி. 2004இல் முரசொலி மாறன் இறக்கும் வரை பாஜக கூட்டணியில் இருந்தது திமுக.

திராவிட இயக்கங்கள் நாத்திகம் பேசுகின்றன. கி.வீரமணியின் வளர்ப்பு மகன் அன்புராஜுக்கு வினை தீர்க்கும் விநாயகர் கோயிலில் எனது தலைமையில் திருமணம் நடத்தி வைத்தேன்.

என்னிடம் தொலைநோக்கு திட்டம் இருக்கின்றது, அதிகாரம் இல்லை. ஸ்டாலினிடம் தொலைநோக்கு இல்லை, அதிகாரம் இருக்கிறது.

கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை மேயராக ஆக்கியதன் பலனாக கருணாநிதியை சிறைக்கு அனுப்பி சாதனை படைத்தார் ஸ்டாலின். அறிவாலயம் முன்புள்ள இடம் மாநகராட்சி விதிகளின்படி பூங்காவாக மாற்றப்பட வேண்டியது. அண்ணா சிலை இருந்ததால் அறிவாலயம் முன்புறம் இருந்த இடத்தில் கழிவறை கட்ட வேண்டாம் என்றார் ஜெயலலிதா.

காங்கிரஸ் கட்சியில் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பு கொடுக்கிறார் கே.எஸ்.அழகிரி.

சோனியாகாந்தி காங்.தலைவரான பிறகும், ராகுலும் இதுவரை காமராஜர் நினைவிடத்திற்கு ஒருமுறை கூட மலர் வளையம் வைத்ததில்லை. பிரதமர் மோடியும், ஜெ.பி.நட்டாவும் காமராஜர் நினைவிடத்தில் ஒருமுறையேனும் மரியாதை செலுத்த வேண்டும்.

தீபாவளி, புத்தாண்டு நாளில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து கூறினார் எல்.முருகன். வரும் சட்டமன்ற தேர்தலில் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்." என்றார்.

எல்.முருகன்

கட்சியில் இணைந்த கராத்தே தியாகராஜனுக்கும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தபின் எல்.முருகன் பேசினார்.

"ஆட்சி பொறுப்பேற்றால் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கப்போவதாக ஸ்டாலின் கூறுவது அப்பட்டமான பொய். 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து என்ன செய்தார் ஸ்டாலின்? கருப்பர் கூட்டத்துக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஸ்டாலின். நாங்கள் வேல் எடுத்த இடத்திலேயே வேல் எடுக்கும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. கடந்த வாரம் பட்ஜெட்டில் வரலாற்றிலேயே இல்லாத அளவு 5 லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு. சென்னை சேலம் 8 வழிச்சாலை இந்த ஆண்டிலேயே அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

2016இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு தமிழக மீனவர்கள் கூட சுடப்படவில்லை. லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கையில் படுகொலை செய்தது திமுக, காங்கிரஸ். ஜல்லிக்கட்டை தடை செய்தது காங் - திமுக, நீதிமன்றம் மூலம் அதை நீக்கியது பாஜகதான்." என்றார்.

நடிகர் ராதாரவி

அதன்பின்னர், பேசிய நடிகர் ராதாரவி, "கராத்தே தியாகராஜன் இல்லாமல் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்க முடியாது. திமுக பற்றிய பயம் தேவையில்லை. யானை சாணம் இட்டால் லத்தி, மாடு சாணம் இடும், ஆடு புளுக்கை இடும். அண்ணா கால திமுக லத்தி, கருணாநிதி கால திமுக சாணம், ஸ்டாலின் போடுவது புளுக்கை. முருகன் வேல் எடுத்ததால் வேலை இல்லாத ஸ்டாலினும் வேல் தூக்குகிறார். இசுலாமியரான அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கியது பாஜக, பட்டியல் சமூக எல்.முருகன் மாநிலத் தலைவர்.

எம்.ஆர் .ராதாவின் குடும்பம் நான், எதிர்காலத்தில் பெரியாருக்கு கைத்தடிக்கு பதிலாக வேல் கொடுக்க வேண்டியிருக்கும் போல. மெரினாவில் புதைக்கப்பட்ட யாருடைய வாரிசும் முதலமைச்சராக முடியாது. எந்த கட்சியாலும் பாஜகவை அசைக்க முடியாது. திமுகவினர் உருப்பட வேண்டுமானால் பாஜகவிற்கு வாருங்கள்." என்று அழைப்பு விடுத்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

பாஜக மாநிலத் தலைவராக நான் இருந்தபோது 2009இல் கராத்தே தியாகராஜனை இணைக்க முயற்சித்தேன். திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. சென்னையில் ஒவ்வொரு குடிசையிலும் இனி பாஜக கொடி பறக்கும்.

பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் முருகன் பேசுவதற்கு முன்பே கூட்டத்திலிருந்து பாதிக்கும் மேற்பட்டோர் எழுந்து சென்றதால் காலி இருக்கைகளுக்கு முன்பு அவர் உரையாற்றினார்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 12 பிப் 2021