மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

ஸ்டாலினை தூங்கவிடக் கூடாது- பாஜகவில் கராத்தேவுக்கு கட்டளை!

ஸ்டாலினை தூங்கவிடக் கூடாது- பாஜகவில் கராத்தேவுக்கு கட்டளை!

சென்னையின் முன்னாள் பொறுப்பு மேயரும், முன்னாள் காங்கிரஸ் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் நேற்று (பிப்ரவரி 11) பாஜகவில் முறைப்படி இணைந்தார்.

காங்கிரஸில் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட கராத்தே தியாகராஜன் பாஜகவில் சேர்ந்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு கராத்தே பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத்தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகர் ராதாரவி உள்பட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கராத்தே தியாகராஜனுக்கு, பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய கராத்தே தியாகராஜன்,

“பா.ஜ.க. ஒரு தேசிய இயக்கம். இந்த இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக, இந்தியாவின் இரும்பு மனிதராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்ந்து வருகிறார். அவரது ஏராளமான செயல்பாடுகளில் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பே, என்னை பா.ஜ.க.வில் இணைய செய்தது.

தற்போது மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ‘வேல்' தூக்கும் நிலைக்கு வந்து விட்டனர். தமிழக காங்கிரஸ் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. பேரம் பேசி அங்கே பதவிகள் வழங்கப்படுகிறது. காமராஜர் நினைவிடத்தில் இதுவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தியதே இல்லை. காமராஜரை அவர்கள் மதிப்பது இவ்வளவுதான். இது மிகப்பெரிய கெட்ட பெயரை காங்கிரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ரஜினி கட்சிதொடங்கினால் கராத்தே தியாகராஜனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று முடிவெடுத்துவிட்டார். இதன் பிறகே வேறு கட்சியில் சேர முடிவெடுத்தார் கராத்தே. அவரை அதிமுகவுக்கு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சிலர் நேரடியாகவே அழைத்தார்கள். கராத்தேவின் பிறந்தநாளுக்கு முதல்வரே வாழ்த்தினார். ஆனால் அதிமுக இப்போது இருக்கும் நிலையில் அங்கே போவது உசிதம் அல்ல என்று முடிவெடுத்த கராத்தே தியாகராஜன், தமிழக பாஜக தலைவர் முருகனை தனிப்பட்ட முறையில் சில தடவை சந்தித்துப் பேசினார். டெல்லியிலும் பேசினார்.

அதன் அடிப்படையில் இப்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். ஸ்டாலின் மேயராக இருந்தபோதில் இருந்தே அவரைப் பற்றியும், அவரது நண்பர்கள் பற்றியும், அரசியல் பற்றியும் அறிந்தவர் கராத்தே தியாகராஜன். அதனால் ஸ்டாலினை நிம்மதியாக தூங்கவிடக் கூடாது என்பதுதான் கராத்தேவுக்கு பாஜக மேலிடம் இட்டிருக்கும் கனிவான கட்டளை. இதற்காக முக்கிய பதவியும் கராத்தேவுக்கு அளிக்கப்பட இருக்கிறது. ஒருவேளை ஸ்டாலினை எதிர்த்து நிற்கும் பாஜக வேட்பாளராகவும் கராத்தே இருந்தால் ஆச்சரியமில்லை என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 12 பிப் 2021